
ஃபிடே உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிவரை சென்று நார்வே வீர்ர் கார்லஸனிடம் தோல்வி அடைந்த இந்திய வீர்ர் பிரக்யானந்தா, இந்திய செஸ் வீர்ர்களின் ஆட்டத்தின் மீது மக்கள் கவனம் திரும்பத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
இறுதிப் போட்டியில் பிரக்யானந்தா தோல்வி அடைந்தாலும், அவரை வெல்வதற்கு முதல் தர ஆட்டக்காரரான கார்ல்ஸன் அதிகம் போராட வேண்டியிருந்தது.
இதனிடையே இரண்டாம் இடம் பிடித்த பிரக்யானந்தா, நான் வெற்றி பெறாவிட்டாலும் போட்டியின் இறுதிச்சுற்றுவரை முன்னேறியதில் மகிழ்ச்சி. செஸ் போட்டியில் வெற்றியும், தோல்வியும் சகஜம்தான் என்று கூறினார்.
இறுதிப் போட்டியில் வெற்றியைக் கைப்பிடித்த நார்வே கிராண்ட் மாஸ்டர் மாக்னஸ் கார்ல்ஸனுடன் பிரக்யானந்தா கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தபோது, சுற்றியிருந்த குழந்தைகள் பலரும் அவரிடம் ஆட்டோகிராப் கேட்டனர். அப்போது பிரக்யானந்தா, செஸ் விளையாட்டின் மீது மக்கள் கவனம் திரும்பியுள்ளது வரவேற்கத்தக்கதுதான் என்றார்.
ஃபிடே உலக செஸ் போட்டியில் ஆரம்பம் முதலே எனது விளையாட்டை பலரும் ஆர்வமுடன் கவனித்து வந்துள்ளனர். எனவே செஸ் மீது பெரும்பாலானவர்களுக்கு ஆர்வம் இருப்பது தெரிகிறது. இனி அவர்கள் தொடர்ந்து செஸ் போட்டிகளை ஆர்வத்துடன் பார்ப்பார்கள் என நினைக்கிறேன் என்றார்.
ஏறக்குறைய கடந்த இரண்டு மாதங்களாகவே பிரக்யானந்தா ஏதாவது ஒரு போட்டியில் பங்கேற்றபடியே இருந்தார். தொடர்ந்து போட்டியில் பங்கேற்றதால் என்னால் இறுதி போட்டிக்கு என தனியாக தயார்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஒருவாரம் எதிரணியினர் எப்படி விளையாடுகிறார்கள் என்று கவனித்தேன். அதன் பிறகு எனக்கு தொடர்ந்து போட்டிகள் இருந்தன. மேலும் நான் இறுதிப் போட்டிவரை செல்வேன் என்று நினைக்கவில்லை. ஆனாலும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்து இரண்டாவது இடம்பெற்றதில் மகிழ்ச்சிதான் என்றார்.
நார்வே வீரரும் கிராண்ட் மாஸ்டருமான மாக்னஸ் கார்ல்ஸனுடன் நடந்த போட்டி பற்றி கருத்து தெரிவித்த பிரக்யானந்தா, முதல் ஆட்டம் முக்கியமானதாக இருந்தது. நான் இன்னும் நன்றாக விளையாடி இருக்கலாம் என்றார்.
ஃபிடே செஸ் போட்டியில் நான் கடைசி வரை முன்னேறியதற்கு எனது குடும்பத்தினரும் ஒரு காரணம். அவர்களுடன் என்னுடன் இங்கு வந்திருந்து எனக்கு வேண்டிய உணவுகளை தயாரித்துக் கொடுத்து ஆதரவாக இருந்தனர் என்றார் பிரக்யானந்தா.