ருதுராஜ், ரிங்கு அதிரடி - தொடரை வென்றது இந்தியா!

ருதுராஜ், ரிங்கு அதிரடி - தொடரை வென்றது இந்தியா!

இந்தியா, அயர்லாந்துக்கு எதிரான 2-வது டி-20 ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது. ருதுராஜ் கெய்க்வேட் மற்றும் ரிங்கு சிங் ஆகிய இருவரின் சிறப்பான ஆட்டங்கள் இந்திய அணியின் வெற்றிக்கு உதவின.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2 இல் வெற்றிபெற்றுள்ளதன் மூலம் தொடரை கைப்பற்றியுள்ளது. மூன்றுவது மற்றும் இறுதிப் போட்டி 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் ருதுராஜ் கெய்க்வேட் சிறப்பாக ஆடி அரை சதம் எடுத்தார். ரிங்கு சிங், அதிரடியாக ஆடி 21 பந்துகளை சந்தித்து 38 ரன்களை எடுத்தது ஆட்டத்தின் சிறப்பு அம்சமாகும்.

முதல் போட்டியில் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் தடை பட்டதால் டக்வொர்த் லீவிஸ் முறையில் இந்திய 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த போட்டியில் ருதுராஜ், ரிங்கு சிங் இருவரும் நின்று ஆடியதால் இந்தியா ஐந்து விக்கெட்டுகளுக்கு 185 என்ற கணிசமான ஸ்கோரை எட்டியது. ஆட்டம் துடிப்பாகவே தொடங்கியது. முதலில் களத்தில் இறங்கிய ஜெய்ஸ்வால் 11 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார். இதில் ஒரு சிக்ஸரும், இரண்டு பவுண்டரிகளும் அடங்கும். எனினும் கிரெய்க் வீசிய பந்தை தூக்கி அடிக்க ஜெயஸ்வால் முற்பட்ட போது கர்டிப் காம்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அப்போது இந்தியா 35 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. திலக் வர்மா சரியாக விளையாடவில்லை. மெக்கார்த்தி வீசிய பந்தை பவுண்டரிக்கு அனுப்ப முற்பட்டபோது அதை ஜார்ஜ் டாக்ரெல் அருமையாக கேட்ச் பிடித்து வெளியேற்றினார்.

அதன் பிறகு சஞ்சு சாம்சன், கெய்க்வேட் உடன் சேர்ந்து கொண்டார். இருவரும் சேர்ந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தனர். அப்போது 12 ஓவரில் இந்தியா 100 ரன்களைக் கடந்திருந்தது. சாம்சன் 26 பந்துகளை சந்தித்து 40 ரன்கள் எடுத்தார். ருதுராஜ், ஆட்டத்தை கணித்து நின்று ஆடி 58 ரன்கள் குவித்தார். எனினும் மெக்கார்த்தி வீசிய பந்தில் ஹாரி டெக்டரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அப்போது இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களை எடுத்திருந்தது.

அடுத்து ரிங்கு சிங்கும், சிவம் துபேயும் ஆட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டனர். கடைசி ஓவருக்கு முந்தைய ஓவரில் ரிங்கு சிங் இரண்டு சிக்ஸர்களும், ஒரு பவுண்டரியும் அடித்து அயர்லாந்து பந்துவீச்சாளர்களுக்கு கிலியை ஏற்படுத்தினார். மார்க் அடெய்ர்ஸ் வீசிய கடைசி ஓவரிலும் இந்தியா ரன்களை குவித்தது. இறுதியில் இந்திய முதல் இன்னிங்ஸில் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து களம் இறங்கியது அயர்லாந்து அணி. தொடக்கத்திலேயே அந்த அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. கேப்டன் பால் ஸ்டிர்லிங் ரன் ஏதும் எடுக்காமலேயே அவுட்டானார். பிரதீஷ் கிருஷ்ணா மற்றும் ரவி விஷ்ணோய் ஆகியோர் வீசிய பந்தை எதிர்கொள்ள முடியாமல் அயர்லாந்து அணியினர் திணறினர். ஒரு கட்டத்தில் அந்த அணி 63 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆண்டி பால்பிர்மி அதிரடியாக 72 ரன்கள் எடுத்தார். ஆனால், அர்ஷ்தீப் அவரை வீழ்த்தினார்.

இந்திய வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாத அயர்லாந்து 8 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இந்தியா வென்றது. மூன்றாவது கடைசி ஒருநாள் போட்டி வரும் 23 ஆம் தேதி நடைபெறுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com