FIFA மகளிர் உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்தது ஸ்பெயின்!
மகளிர் உலக்க் கோப்பை கால்பந்து போட்டியில் முதன் முறையாக கோப்பை வென்று வரலாறு படைத்துள்ளது ஸ்பெயின். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வீழ்த்தியது. அந்த அணியின் கேப்டன் ஓல்கா கார்மோனா வெற்றிக்கான கோலை அடித்தார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியைக்காண 76,000 ரசிகர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர். ஸ்பெயின்-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் பெரும்பாலும் ஸ்பெயின் அணியின் கையே ஓங்கியிருந்தது.
அணியின் ஆண் பயிற்சியாளர் வில்டாவின் கீழ் இனி விளையாட மாட்டோம் என்று ஸ்பெயின் வீரர்கள் கூறிவந்த நிலையில் உலக்க் கோப்பை போட்டியில் ஸ்பெயின் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 1991 ஆம் ஆண்டு உலக்க் கோப்பை போட்டி தொடங்கியதிலிருந்து கோப்பை வெல்லும் ஐந்தாவது நாடு ஸ்பெயின் ஆகும். இதற்கு முன்னர் அமெரிக்கா, ஜெர்மனி, நார்வே மற்றும் ஜப்பான் அணிகள் கோப்பை வென்றுள்ளன.
ஸ்பெயின் தற்காப்பு ஆட்டக்காரரான கார்மோனா ஆட்டத்தின் 29 வது நிமிடத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். தனக்கு கிடைத்த வாய்ப்பை அருமையாக கடத்திச் சென்று கோலாக்கினார். (1-0).
ஆட்டம் தொடங்கியவுடன் இங்கிலாந்து அணிக்குத்தான் கோல் போடும் வாய்ப்பு கிடைத்தது. 5-வது நிமிடத்தில் அந்த அணியின் லாரன் ஹெம்பஸ் பந்தை கடத்திச் சென்று கோல் போட முயன்றார். ஆனால், ஸ்பெயின் கோல்கீப்பர் கடா கோல், திறமையாக பந்தை தடுத்துவிட்டார்.
அடுத்து இரு அணிகளும் முனைப்பு காட்டி விளையாடினர். இரு அணிகளுக்குமே கோல் போட வாய்ப்பு கிடைத்தும் முயற்சிகள் பலிக்கவில்லை. முதலில் இங்கிலாந்து வீராங்கனை ஹெம்ப், கோல் போட முயன்றார். ஆனால், அவர் அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது. அடுத்து ஸ்பெயின் அணிக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த அணியின் சல்மா பாரலூலு எடுத்துக் கொடுத்த பந்தை அலெக்ஸியா கோலாக்க தவறினார்.
அடுத்து இங்கிலாந்து அணியின் அல்பா ரெடான்டோ பந்தை கோலுக்கு அடிக்க அதை கோல் கீப்பர் மேரி இயர்பிஸ் லாகவகாக தடுத்து நிறுத்தினார்.
இந்த நிலையில் ஸ்பெயின் வீராங்கனை மரியோனா கால்டென்டி தனக்கு கிடைத்த பந்தை கடத்திச் சென்று கார்மோனாவிடம் கொடுத்தார், அதை அவர் சிறிதும் தாமதிக்காமல் வேகமாக தட்டிச் சென்று மின்னல் வேகத்தில் கோலுக்கு அனுப்பினார்.
இரண்டாவது பாதி ஆட்டத்தில் ஸ்பெயனிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்த போதிலும் அந்த அணியால் அதை கோலாக மாற்ற முடியவில்லை. ஸ்பெயின் அணியின் கை ஓங்கியிருந்த்தால் இங்கிலாந்து அணி பலமுறை முயன்றும் கோல் போட முடியவில்லை. இறுதியில் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் வரலாற்று வெற்றியை உறுதிசெய்தது.