யு.எஸ்.ஓபன்: அரையிறுதியில் மெட்வதேவ், சபலென்கா!

Aryna Sabalenka & Daniil Medvedev
Aryna Sabalenka & Daniil Medvedev

யு.எஸ்.ஓபன் டென்னிஸ் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் டானீல் மெட்வதேவ், ஆண்ட்ரே ருபலேவை 6-4, 6-3, 6-4 என்ற நேர் செட்டுகளில் வென்று அரையிறுதிக்கு தகுதிபெற்றார்.

மெட்வதேவ், ருபலேவ் இடையிலான ஆட்டம் சுமார் 2 மணி 47 நிமிடங்கள் நீடித்தது. வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால் போட்டியை எதிர்கொள்வது இருவருக்குமே சிரமமாக இருந்தது. இருவருமே அவ்வப்போது குளிர்ந்த நீர் மற்றும் ஐஸ் கட்டிகளால் தங்களை குளுமைப்படுத்திக் கொண்டனர்.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. எனக்கு மட்டுமல்ல, இருவருக்கும்தான். ஒரு கட்டத்தில் சோர்ந்துபோய்விட்ட என்னால் பந்தை கண்ணால் பார்க்கவே முடியவில்லை. இருவருமே வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோம் என்றார் மெட்வதேவ்.

ருபலேவ் முதல் செட்டில் 3-0 எனவும், இரண்டாவது செட்டில் 3-1 என்ற நிலையில் முன்னிலையில் இருந்தார். ஆனாலும், அவர், தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை.

இந்த போட்டியில் எப்படியும் வெற்றிபெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மெட்வதேவ் விளையாடினார். மூன்றாவது செட்டில் ருபலேவ் சற்று சோர்ந்திருந்த நிலையை பயன்படுத்திக் கொண்டு மெட்வதேவ் உத்வேகத்துடன் ஆடினார். பின்னர் ருபலேவ் மீண்டுவந்த போதிலும் மெட்வதேவின் ஆக்ரோஷமான ஆட்டத்தை அவரால் எதிர்கொள்ள முடியவில்லை.

இறுதியில் மெட்வதேவ், 6-4, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ருபலேவை வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

நடப்பு சாம்பியன் கார்லோஸ் அல்காரஸ் மற்றும் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜவரேவ் இடையிலான போட்டியில் வெற்றிபெறுபவர்களை அரையிறுதியில் எதிர்கொள்வார் மெட்வதேவ். 

மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் உலகின் நெம்பர் 1 வீராங்கனையான அர்யானா சபலென்கா சீன வீராங்கனை குயின்வென் ஜெங்கை 6-1, 6-4 என்ற செட்கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதிபெற்றார்.

முன்னதாக நடைபெற்ற போட்டியில் சபலென்கா, தாரியா காஸாடிக்னாவை வென்று காலிறுக்குள் நுழைந்தது குறிப்பிடத்தக்கது. யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியில் மூன்றாவது முறையாக அரையிறுதிக்குள் நுழைகிறார் சப்லென்கா.

சபலென்கா மெதுவாகவே ஆட்டத்தை தொடங்கினாலும் போகப் போக அவரது ஆட்டத்தில் ஆக்ரோஷம் அதிகரித்தது. குயின் ஜெங் அவருக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஆடிய போதிலும் கடைசிவரை அவரால் நின்று ஆடமுடியவில்லை.

இறுதியில் சபலென்கா 6-1, 6-4 என்ற நேர் செட்டுகளில் குயின் ஜெங்கை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றார்.

இதற்கு முன் யு.எஸ். ஓபனில் இரண்டு முறை அரையிறுதியை எட்டிய சபலென்கா இறுதிப் போட்டியை எட்ட முடியாமல் தோல்வி அடைந்தார். எனினும் இந்த முறை எப்படியாவது பட்டம் வென்றுவிட வேண்டும் என்ற துடிப்புடன் இருக்கிறார்.

அமெரிக்க வீராங்கனை மாடிஸ் கீஸ், இங்கிலாந்து வீராங்கனை மார்கெடா வாண்ட்ரோஸோவா இடையிலான ஆட்டத்தில் இருவரில் யார் வெற்றிபெறுகிறார்களோ அவரை சபலென்கா அரையிறுதியில் எதிர்கொள்வார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com