யு.எஸ்.ஓபன்: காலிறுதியில் கரோலினா முச்சோவா, பென் ஷெல்டன்!
உலக டென்னிஸ் தர வரிசையில் 10 ஆம் இடத்தில் உள்ள கரோலினா முசோவா, சீன வீராங்கனை வாங் ஜின்யுவை 6-3, 5-7, 6-1 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதிபெற்றார். அமெரிக்காவின் பென் ஷெல்டன், சக நாட்டு வீரர் டாமி பால் இருவரிடையே நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஷெல்டன் 6-4, 6-3, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதியை உறுதிசெய்தார்.
செக். நாட்டு வீராங்கனையான கரோலினா முசோவா ஆட்டத்தில் பல தவறுகளைச் செய்தபோதிலும் அதிக புள்ளிகளை பெற்றார். ஆனால், அவரை எதிர்த்து விளையாடிய சீன வீராங்கனை வாங், முசோவாவைவிட அதிக தவறுகள் புரிந்ததால் அதிக புள்ளிகளைப் பெற முடியவில்லை.
இரண்டாவது செட் ஆட்டத்தில் முசோவா முதலில் பின்தங்கியிருந்தாலும் திடீரென தாக்குதல் ஆட்டத்தை தொடர்ந்தார். எனினும் 3 வது செட்டில் முழு கட்டுப்பாட்டுடன் ஆடி வெற்றியை உறுதி செய்தார்.
முசோவா விம்பிள்டன் போட்டியில் இரண்டு முறை காலிறுதியையும், 2021 இல் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் அரையிறுதியையும் எட்டியவர். 2023 பிரெஞ்சு ஓபன் போட்டியில் அவர் இறுதிச்சுற்றுவரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது செட்டில் சிறப்பாக ஆடியதுதான் வெற்றிக்கு காரணம். மூன்றாவது செட்டில்தான் முழு ஆட்டத்தையும் கைக்குள் கொண்டுவந்து ஆட முடிந்தது. எனினும் காலிறுதிக்கு நுழைந்த்தில் மகிழ்ச்சிதான் என்றார் முசோவா.
இனி அடுத்து பெலிண்டா பென்சிக் மற்றும் சோரனா சிர்ஸ்டீ இருவரில் யார் வெற்றிபெறுகிறார்களோ அவர்களை எதிர்த்து களம் இறங்குகிறார் முசோவா.
இதனிடையே ஆடவர் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுபோட்டியில் அமெரிக்க வீர்ர் பென் ஷெல்டன், சக வீர்ரான டாமி பாலை 6-4, 6-3, 4-6, 6-4 என்ற செட்கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதிபெற்றார். இருவரிடையிலான ஆட்டம் சுமார் 3 மணி நேரம் நீடித்தது.
இந்த வெற்றியின் மூலம் யு.எஸ். ஓபன் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு நுழையும் இளம் வீர்ர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் 2002 இல் ஆண்டி ரோடிக் இந்த பெருமையை பெற்றிருந்தார்.
--------------