இந்திய கிரிக்கெட் தொடர்களை ஒளிபரப்பதற்கான ஏலத்தை கைப்பற்றியது வியாகாம் 18 நிறுவனம்!
பிசிசிஐ சார்பில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் உள்நாட்டு தொடர்களை ஒளிபரப்பதற்கான ஏலம் விடப்பட்டது. இதில் பங்கேற்ற வியாகாம் 18 நிறுவனம் 5,963 கோடி கொடுத்து உரிமத்தை கையகப்படுத்தியது.
இந்தியாவின் மிகப் பெரும்பான்மையான மக்களால் விரும்பப்படும் விளையாட்டாக கருதப்படுவது கிரிக்கெட். உலகில் பிற நாடுகளை விட இந்தியாவில் கிரிக்கெட் போட்டிக்கான ரசிகர்கள் அதிகம் என்பதால் இந்தியாவின் கிரிக்கெட் தொடர்பான வர்த்தகம் மிகப்பெரிய கட்டமைப்பை கொண்டது.
இதனாலேயே உலகின் பிற நாடுகளை விட இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு போட்டிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது பிசிசிஐ சார்பில் இந்திய கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் உள்நாட்டு தொடர்களை ஐந்தாண்டுகளுக்கு ஒளிபரப்புவதற்கான ஏலம் நேற்று நடைபெற்றது. இதில் வயாகாம் 18, சோனி டிஜிட்டல், ஸ்டார் இந்தியா ஆகிய நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் வியாகாம் 18 நிறுவனம் 5,963 கோடிக்கு தொகையை முன்வைத்து ஏலத்தை கையகப்படுத்தியது. இதன் மூலம் இந்திய கிரிக்கெட் அணிகள் பங்கிற்கு உள்நாட்டு தொடர்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு குறித்த அனைத்து உரிமையும் அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஏலத்தை பிசிசிஐ இணைய வழியாக தனித்தனியாக நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதில் தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கான ஏலம் 3,101 கோடி ரூபாய்க்கும், டிஜிட்டல் உரிமம் 2,862 கோடி ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது.
இதன் மூலம் ஒரு ஆட்டத்திற்கு 67.76 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. கடந்த முறையோடு தற்போதைய ஏலத்தை ஒப்பிடும் பொழுது 7.76 கோடி ரூபாய் வருவாய் அதிகரித்திருக்கிறது. வரக்கூடிய ஐந்தாண்டுகளில் 25 டெஸ்ட் போட்டிகள், 27 ஒருநாள் போட்டிகள், 36 டி20 போட்டிகள் என்று மொத்தம் 88 விளையாட்டுப் போட்டிகள் ஒளிபரப்பப்பட உள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியா இங்கிலாந்துடன் 18 போட்டிகளிலும், நியூசிலாந்துடன் 11 போட்டிகளிலும், தென்னாப்பிரிக்காவுடன் 10 போட்டிகளிலும், மேற்கிந்திய தீவுகளுடன் 10 போட்டிகளிலும், ஆப்கானிஸ்தானுடன் 7 போட்டிகளிலும், இலங்கையுடன் 6 போட்டிகளிலும், வங்கதேசத்துடன் 5 போட்டிகளிலும் களம் காண உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு 2028 மார்ச் 31 வயாகாம் 18 நிறுவனம் ஒளிபரப்பு உரிமத்தை பெற்றிருக்கிறது. மேலும் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தை இதே நிறுவனம் 26 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.