India defeated Bangladesh
India defeated Bangladesh

விராட் கோலி அதிரடி சதம்! வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா!

உலகக் கோப்பை போட்டித் தொடரில் புனேயில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேசத்தை எளிதில் வீழ்த்தியது இந்தியா. விராட் கோலியின் அதிரடி சதம் (103), ஜடேஜா, சிராஜ், பும்ரா தலா 2 விக்கெட்டுகள் எடுத்தது இந்தியாவின் வெற்றிக்கு உதவியது. உலகக் கோப்பை போட்டியில் இந்தியா 4-வது வெற்றியை பெற்றுள்ளது.

முதலில் விளையாடிய வங்கதேச அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இந்திய அணி, 41.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 261 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதிசெய்தது.

257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா களத்தில் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஓரளவு நின்று ஆடி 48 ரன்கள் எடுத்தார். மஹ்மூத் வீசிய பந்தை அடிக்க முற்பட்டு ஹிரிதோயிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். சுப்மன்கில் தனது பங்குக்கு 53 ரன்கள் குவித்தார். அவர் எடுத்த ரன்களில் 2 சிக்ஸர்களும், ஐந்து பவுண்டரிகளும் அடங்கும். மெஹிதி வீசிய பந்தில் மஹ்மதுல்லாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 19.2 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்திருந்தது.

Virat Kohli
Virat Kohli

எனினும் விராட் கோலி ஆட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு அதிரடியாக ஆடி 103 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். ஒரு நாள்போட்டியில் விராட் கோலி எடுத்துள்ள 48-வது சதமாகும் இது.

ஸ்ரேயாஸ் ஐயர் 19 ரன்களில் மெஹிதி வீசிய பந்தில் மஹமதுல்லாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் கே.எல்.ராகுலும், விராட் கோலியும் ஆட்டத்தை தொடர்ந்தனர். கே.எல்.ராகுல் கடைசிவரை நின்று ஆடி 34 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இறுதியில் விராட் கோலி, பந்தை பவுண்டரிக்கு அனுப்பி இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்தார். விராட் கோலியின் 103 ரன்களில் நான்கு சிக்ஸர்களும், 6 பவுண்டரிகளும் அடங்கும்.

முன்னதாக டாஸ் ஜெயித்த வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. கேப்டன் ஷாகிப் அலி ஹஸன் காயமடைந்திருந்ததால் நஜ்முல் ஹொசைன் கேப்டனாக செயல்பட்டார்.

வங்கதேச அணியின் தான்ஜித் ஹஸன் மற்றும் லிட்டன் தாஸ் இருவரும் உற்சாகமாகவே ஆட்டத்தை தொடங்கினர். அணியின் ஸ்கோர் 93 ரன்களை எட்டியிருந்தபோது 51 ரன்கள் எடுத்திருந்த தான்ஜித் ஹஸன், குல்தீப் வீசிய பந்தில் எல்பிடபிள்யூவாகி வெளியேறினார். அடுத்த சில நிமிடங்களிலேயே நஜ்முல் ஹொசைன் 8 ரன்களில் வெளியேறினார். மெஹ்தி ஹஸன் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். 66 ரன்கள் எடுத்திருந்த லிட்டன் தாஸ், ஜடேஜா வீசிய பந்தில் சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். முஷ்பிகுர் ரஹீம் 38 ரன்களிலும், மஹ்முதுல்லா 46 ரன்களிலும் அவுட்டானார்கள். மற்ற வீரர்கள் களத்தில் நிற்கமுடியாமல் அடுத்தடுத்து அவுட்டானார்கள். இறுதியில் வங்கதேச அணி 50 ஓவர்களில் 256 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய அணி பந்துவீச்சாளர்களில் பும்ரா 2, சிராஜ் 2, ஜடேஜா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com