உலக தடகள இறுதிப் போட்டியில் தங்கம் வெல்வாரா நீரஜ் சோப்ரா?

உலக தடகள இறுதிப் போட்டியில் தங்கம் வெல்வாரா நீரஜ் சோப்ரா?

லக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 27ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தப் போட்டித் தொடரின் ஈட்டி எறிதல் தகுதிச்சுற்று இன்று நடைபெற்றது. இதில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே 88.77 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று இருக்கிறார். அதுமட்டுமின்றி, இதன் மூலம் அடுத்த வருடம் பாரீஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கும் அவர் தகுதி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்ட நீரஜ் சோப்ரா, வரும் ஞாயிறு அன்று 12 பேர் பங்கேற்கும் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வெல்வார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. நீரஜ் சோப்ரா கடந்த 2021ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம், 2018ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம், அதே ஆண்டில் காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் வென்று அசத்தினார். கடந்த ஆண்டு நடைபெற்ற டைமண்ட் லீக் போட்டியிலும் சாம்பியன் பட்டம் வென்றார். ஆனால், உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மட்டுமே நீரஜ் சோப்ரா இதுரை தங்கம் வென்றதில்லை.

கடந்த 2018ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். தற்போது நீரஜ் சோப்ரா சிறந்த ஃபார்மில் இருப்பதால் தங்கப் பதக்கத்தை வெல்வதற்கான சிறந்த சூழல் உள்ளது. இம்முறை நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றால், துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ராவுக்குப் பிறகு ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தனிநபர் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்ற 2வது இந்தியர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெறுவார்.

ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரரான டி.பி.மானுவும் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்று இருக்கிறார். இந்தத் தகுதிச் சுற்றில் 81.31 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்த இவர், குரூப் ஏ பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com