உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து vs நியூசிலாந்து மோதல்!

England vs New Zealand
England vs New Zealand

உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியுடன் நியூசிலாந்து அணி மோதுகிறது.

இந்தியாவில் உலகக் கோப்பை தொடர் இன்று தொடங்குகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதிய இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இன்று முதல் போட்டியில் ஆமதாபாதில் மோதுகின்றன. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்த நியூசிலாந்து இன்றைய போட்டியில் இங்கிலாந்தை வென்று பழிதீர்க்க முனைப்புடன் உள்ளது.

நியூசிலாந்து அணியின் முக்கிய வீரர்கள் காயங்கள் காரணமாக விளையாடவில்லை. வேகப்பந்து வீச்சாளர் டிம் செளத்தீ கைமுறிவிலிருந்து மீண்டுவரவில்லை. காயமடைந்த மற்றொரு வீரரான கானே வில்லியம்சன் விளையாடுவதற்கு தகுதிபெறவில்லை.

இதேபோல இங்கிலாந்து அணியிலும் வீரர்கள் பலர் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. இடுப்பில் ஏற்பட்ட காயம் குணமடையாத்தால் பென் ஸ்டோக்ஸ் அணியில் இடம்பெறவில்லை என்று கேப்டன் ஜோஸ் பட்டர் தெரிவித்தார்.

இரண்டு அணிகளுமே வெவ்வேறுவிதமான பேட்டிங் திறமைகளைக் கொண்டவை. இங்கிலாந்து அணியினர் எதிரணியின் பந்துவீச்சை விளாசி ஆடும் திறன் பெற்றவர்கள். ஆனால் நியூசிலாந்து அணியினர் வில்லியம்ஸன் போன்ற அனுபவம் வாய்ந்த ஆட்டக்காரர்களையே நம்பியுள்ளது. நீண்ட காலத்துக்கு பிறகு நியூசிலாந்து அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளது பலம். சமீபத்தில் நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் அவர் சிறப்பாக பந்துவீசி இங்கிலாந்து அணியை நிலைகுலையச் செய்தது குறிப்பிடத்தக்கது. மற்றொரு பந்துவீச்சாளரான மாட் ஹென்றியும் பந்துவீச்சின் மூலம் இங்கிலாந்துக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆமதாபாதில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கம், பேட்ஸ்மென்களுக்கு சாதகமாக இருக்கும் என்று தெரிகிறது. அதிக விக்கெட்டுகள் வீழ்த்தப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். வானிலையும் தெளிவாக இருப்பதால் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

நியூசிலாந்து உத்தேச அணி: தேவன் கான்வே, வில் யங், டாரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ஸ், ஜிம்மி நீஷம், ராச்சின் ரவீந்திரா, மிட்சல் சான்ட்னர், ஐஷ் சோதி, மாட் ஹென்றி, டிரென்ட் போல்ட், லாக்கி பெர்குஸன்.

இங்கிலாந்து உத்தேச அணி: ஜானி பாரிஸ்டோவே, டேவிட் மலன், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), லியம் லிவிங்ஸ்டோன், மொயீன்அலி, சாம் கர்ரன், கிரிஸ் வோக்ஸ், அதில் ரஷீத், மார்க் வுட்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com