தமிழ் எழுத்தாளர்களுக்கு விருது: ரூ.5 லட்சம், ஒரு சவரன் தங்கம் பரிசு என தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ் எழுத்தாளர்களுக்கு விருது: ரூ.5 லட்சம், ஒரு சவரன் தங்கம் பரிசு என தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ் எழுத்தாளர்களுக்கு இலக்கியமாமணி விருது வழங்க, தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் அரசாணையில் தெரிவிக்கப் பட்டதாவது:

தமிழ்‌ எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும்‌ வகையில்‌ இப்போது  இலக்கிய மாமணி விருது உருவாக்கப்பட்டு தமிழின்‌ இலக்கியத்திற்கு வளம்‌ சேர்க்கும்‌ எழுத்தாளர்கள்‌ மூன்று பேருக்கு ஆண்டுதோறும்‌ இந்த விருது வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. கடந்த சட்டமனறக் கூட்டத்தொடரில், வளர்ச்சித்துறை மானிய கோரிக்கை விவாதத்தின் போது., 'தமிழ் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இலக்கியமாமணி விருதுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதை செயல்படுத்தும் வகையில் சிறந்த எழுத்தாளர்களை தேர்வு செய்ய தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தேர்வுக்குழுத் தலைவராகவும், உறுப்பினர் செயலாளராக தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநரும், உறுப்பினர்களாக முனைவர் ராஜேந்திரன், முன்னாள் துணைவேந்தர் சபாபதி மோகன், முன்னாள் பல்கலைக்கழக முதல்வர் சாரதா நம்பி ஆருரான் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இலக்கிய மாமணி விருது பெறும்‌ விருதாளருக்கு ரூபாய்‌ 5 லட்சம்‌ ஒரு சவரன்‌ தங்கப்‌ பதக்கம்‌, பொன்னாடை மற்றும்‌ பாராட்டுப்‌ பத்திரம்‌ வழங்கப்படும். மேலும் விருது பெற வருகை தரும்‌ போது தங்குமிடச்‌ செலவு, போக்குவரத்துக்‌ கட்டணம்‌, சிற்றுண்டி, உணவு ஆகிய அனைத்து செலவும் அரசே ஏற்கும். இதற்கு என ஆண்டுதோறும்‌ ரூ.17.10 லட்சம்  நிதி ஒதுக்கீடு செய்யப்படும்‌. இவ்விருது 2021-2022-ஆம்‌ நிதியாண்டு முதல்‌ ஆண்டுதோறும்‌ திருவள்ளுவர்‌ திருநாளில்‌ வழங்கப்பெறும்‌ விருதுகளோடு சேர்த்து வழங்கப்படும்.

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com