தமிழக புதிய ஆளுநர்: அரசியல் கட்சிகள் அஞ்சுவது ஏன்?

தமிழக புதிய ஆளுநர்: அரசியல் கட்சிகள் அஞ்சுவது ஏன்?

ரமேஷ் சுந்தரம்.

தமிழகத்தின் புதிய ஆளூநராக ஆர்.என்.ரவி நியமிக்கப் பட்டுள்ளார். ஏற்கனவே தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், தற்போது பஞ்சாப் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து நாகாலாந்து மாநில ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவியை தமிழகத்தின் புதிய கவர்னராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இவரது நியமனம் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழக அரசியல் கட்சிகளிடையே சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. புதிய ஆளுநரைக் கண்டு ஏன் இவ்வளவு பதற்றம்?

பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த ஆர்.என்.ரவி, 1976 ஆம் ஆண்டு .பி.எஸ் அதிகாரியாகத் தேர்வாகி கேரளாவில் பணியாற்றி, பின்னர் மத்திய அரசுப் பணியிலும் உளவுத்துறையிலும் பங்காற்றியுள்ளார். 2012-ல் பணி ஓய்வுக்குப் பின், பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதியதோடு பிரதமர் அலுவலகத்திலும் பணிபுரிந்தார். 2014-ம் ஆண்டு கூட்டு புலனாய்வுக்குழுவின் தலைவராகவும் 2018-ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராகவும் பணியாற்றினார். பின்னர், 2019-ல் நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அங்கு நாகா போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி, சமரச தீர்வை ஏற்படுத்தியவர். இந்த விஷயத்தில் ரவியின் செயல்பாடுகள் பாராட்டுகளையும் விமர்சனங்களையும் ஒருசேர பெற்றன.

அதேநேரம், காவல்துறை அனுபவத்தைப் பின்புலமாகக் கொண்ட ஒருவரை தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிப்பதில் உள்நோக்கம் உள்ளதாக தமிழக அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

''பொதுவாக சிறந்த கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், அறிஞர்கள் ஆகியோரைத்தான் ஆளுநராக நியமிப்பதுதான் மரபு. ஆனால், தீவிரவாத குழுக்களை ஒடுக்குவதற்கான பொறுப்புகள் வகித்தவர் காவல்துறையின் முன்னாள் அதிகாரியான ஆர்.என்.ரவி. அதனால்தான் மத்திய அரசின் இந்த நியமனம் கவலையளிக்கிறது'' என்கிறார் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவரான் கே.எஸ்.அழகிரி.

இதே கருத்தை பத்திரிகையாளர்கள் சந்தித்திப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

''உளவுத்துறையோடு தொடர்பில் உள்ள ஒருவரை ஆளுநராக மத்திய அரசு நியமித்துள்ளது ஏன்? . ஒரு மாநிலத்துக்கு ஆளூநர் பதவியே தேவையில்லை என்பதுதான் எங்கள் கட்சியின் கொள்கை நிலைப்பாடு!

மக்களால் தேர்வு செய்யப்படும் ஓர் அரசாங்கத்தை முடக்குவதற்கோ, அதன் நிர்வாகத்தின் தலையிடுவதற்கோ ஆளுநர்களுக்கு எந்தவித உரிமைகளும் இல்லை" என்றார் திருமாவளவன்.

''பா..கவின் ஒற்றை இந்தியா என்ற கனவுக்கு தமிழகம் முட்டுக்கட்டை போடக்கூடாது என்பதற்காகவே இரும்புக்கை அதிகாரியான ஆர்.என்.ரவியின் நியமனம் இருக்கக்கூடும்'' என்கிறார் மற்ரொரு அரசியல்வாதி.

சரி.. தமிழகத்தின் இந்த புதிய ஆளுநர் நியமனம் தொடர்பான சர்ச்சைக்கு பிஜேபியின் கருத்து என்ன?

''ஒரு மாநிலத்தின் ஆளுநராக. இந்திய ஆட்சிப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை மாநிலத்தின் பாதுகாப்பை முன்னிட்டே ரவியின் நியமனம் அமைந்துள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் பலர் தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்குள் ஊடுருவியுள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது. இவற்றையெல்லாம் கண்காணிக்க ரவி போன்றோர்தான் மிகச் சிறந்தவர்கள். நாகாலாந்து ஆளுநராக இருந்தபோது, ஆர்.என்.ரவி தீவிரவாதிகளை வெறும் பேச்சுவார்த்தையின் மூலமே அடக்கி, அவர்களை தேசியத்துடன் இணைய வைத்தவர். ஆளுநராக அவரது நியமனம் தமிழகத்துக்கு பலம் சேர்க்கும்'' என்றார், மற்றொரு முக்கிய அரசியல்வாதி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com