ஊழலும் ஹைடெக்காகிவிட்டது

ஊழலும் ஹைடெக்காகிவிட்டது

Published on

நீங்கள் கேட்டவை / தராசு பதில்கள்

? இந்த ஹை டெக்னாலஜி யுகத்திலும் ஊழலுக்கு குறைவில்லையே?

நெல்லை குரலோன், பொட்டல்புதூர்

! ஊழலும் ஹை டெக்காக ஆகிக்கொன்டிருக்கிறதே.  இந்த இதழ் கவர் ஸ்டோரி பார்த்துவிட்டீர்களா?

?  முதல்வர் ஸ்டாலின் போல பிரதமர் மோடி சைக்கிள் பயணம் மேற்கொள்வதில்லையே?

– கண்ணன், நெல்லை

! உடன் போட்டோகிராஃபரை அழைத்துச்செல்ல முடியாதே.

? தட்சணை, வரதட்சணை என்ன வித்தியாசம்?

– மஹாலட்சுமி, மதுரை

! செய்த பணிக்குப் பெறுவது தட்சணை;  செய்யாத பணிக்கு பெறும் முன்பணம் வரதட்சணை.

? போதை விருந்து கொடுத்ததில் நடிகர் ஷாருக்கான் மகன் கைதாகி உள்ளது பற்றி?

– சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்

! அவர் வயது, அவரிடமிருந்து பெறப்பட்டதாக சொல்லப்படும் போதை மருந்தின் அளவைப் பார்க்கும்போது அவருக்கு ஜாமின் வழங்கியிருக்கலாம். மருந்தை கடத்துவதும்  பயன்படுத்துவதும் சட்டத்தின் கண்களில் வெவ்வேறான குற்றங்கள்.

? பொது இடங்கள், சாலைகள், அரசு நிலங்களில் உள்ள சிலைகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளதே?

– நாச்சியார், திருமங்கலம்

! முதலில் எது பொது இடம் என்பதை நீதிமன்றம் சொல்லட்டும். அது தெளிவாகாத வரை இந்தத் தீர்ப்பால் பயன் அதிகம் விளையப்போவதில்லை.

? 'பிரதமர் மோடியை சர்வாதிகாரியாக தவறாக சித்தரிக்கிறார்கள்' என்று உள்துறை அமைச்சர் அமின் ஷா சொல்கிறாரே?.

– திருவரங்க வெங்கடேசன், பெங்களூரு

! 'உ.பி லக்பூர் கலவரத்தில் கட்சி தொண்டர்கள் செய்தது தவறு' என்று சொன்ன மேனகா, வருண் காந்தியை கட்சிப் பதவியிலிருந்து உடனடியாக நீக்கியதன் மூலம் சித்தரிக்கப்படுவது தவறில்லை என்று உணர்த்திவிட்டாரே.

? ஸ்டாலின் மெட்ரோ ரயிலில் போகும் போது கூட மனுக்களை பெற்றுகொள்கிறாரே?

– கண்ணகி, திண்டுக்கல்

! அவர்  போகுமிடமெல்லாம் மனுக்கள் பெறுப்படுவதுதான் செய்தியாக வருகிறதே தவிர, அதில் எடுக்கபட்ட முடிவுகளைப் பற்றி செய்தி தாட்கள் பேசுவதில்லை.

? 'தூய்மை இந்தியா' திட்டத்தை போற்றும் வகையில் பா.ஜ.க.              தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை சோழிங்கநல்லூரில் கழிப்பறை ஒன்றை சுத்தம் செய்துள்ளாரே?

– ஆா்.நாகராஜன், செம்பனார் கோவில்

! அந்த திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படவேண்டும் எனச் செய்திருக்கலாம்.  ஆனால் அவர் செய்ய வேண்டியது அதற்காக ஒதுக்கப்பட்டு தமிழகத்துக்கு வராமல் இருக்கும் நிதியைப் பெற்று தருவது தான்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com