அப்போது கல்கத்தா பிரஸிடென்ஸி கல்லூரியில் சரித்திரப் பேராசிரியராக ஒரு வெள்ளைக்காரர் இருந்தார். அவர் பெயர் சி. எப் ஓட்டன் என்பது. அவர் எப்போதும் இந்தியர்களைப் பற்றி இழிவாகவே பேசுவார்.
ஒரு நாள் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது அவர் வங்காளிகளைப் பற்றி மிகவும் கேவலமாகப் பேசி விட்டார். “சார், இந்த மாதிரி பேசுவது அழகல்ல. எங்கள் மனத்தைப் புண்படுத்தாதீர்கள்'' என்று அவரிடம் மாணவர்கள் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால், அவர் மாணவர்களின் பேச்சை மதிக்கவில்லை. திரும்பத் திரும்ப வங்காளிகளைக் கேவலப்படுத்தியே பேசிக் கொண்டிருந்தார். அவரது பேச்சைக் கேட்கக் கேட்க மாணவர்களின் உள்ளம் கொதித்தது. ஆத்திரம் கொண்டார்கள். கட்டுப்பாடாக எல்லாரும் வகுப்பைவிட்டு வெளியேறிவிட்டார்கள்.
மாணவர்களின் கிளர்ச்சியைக் கண்டு ஓட்டன் திடுக்கிட்டார். கல்லூரி அதிகாரிகள் திகைத்தார்கள். கடைசியில், இந்தக் கிளர்ச்சியை ஆரம்பித்தவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் யார் யார் என்று கண்டு பிடித்தார்கள். அவர்களுக்கு உடனே அபராதம் விதிக்கவில்லை, அல்லது சில நாட்களுக்கு அவர்கள் கல்லூரியில் கால் எடுத்து வைக்கக் கூடாது என்று உத்தரவு போடவுமில்லை. வேறு என்ன செய்தார்கள்? அவர்களை அந்தக் கல்லூரியை விட்டே நீக்கிவிட்டார்கள்! அத்துடன், இரண்டு ஆண்டுகளுக்கு வேறு எந்தக் கல்லூரியிலுமே அவர்கள் சேர முடியாதபடியும் செய்து விட்டார்கள்!
அப்படி நீக்கப்பட்ட மாணவர்களில் நமக்கு மிகவும் வேண்டிய ஓர் இளைஞனும் இருந்தான். 'கல்லூரியை விட்டு நம்மை நீக்கிவிட்டார்களே!' என்று அவன் கவலைப்படவில்லை. "மன்னிப்புக் கேட்டுக்கொண்டால் திரும்பவும் கல்லூரியில் சேர்த்துக்கொள்வார்கள்'" என்று சிலர் அவனிடம் கூறினார்கள். ஆனால், அவன் அதற்கும் தயாராக இல்லை. "ஒரு வெள்ளைக்காரர் நம் நாட்டவரைப் பற்றிக் கேவலமாக நம்மிடமே பேசுகிறார். அதைக் கேட்டுக்கொண்டு மரக்கட்டை மாதிரி நாம் சும்மா இருப்பதா? அவரது போக்கைக் கண்டிக்கவே நாங்கள் கிளர்ச்சி செய்தோம். நாங்கள் செய்ததில் தவறே இல்லை'' என்றான் அந்த இளைஞன்.
அத்துடன் அவன் படிப்புக்கு முழுக்குப் போட்டு விட்டுச் சும்மா இருக்கவில்லை. இரண்டு ஆண்டுகள் சென்றபிறகு, திரும்பவும் கல்லூரியில் சேர்ந்தான்; அக்கறையுடன் படித்தான்; பி.ஏ வகுப்பில் தேறினான்; பிறகு இங்கிலாந்து சென்றான்; ஐ.ஸி.எஸ். படித்தான். அதிலும் தேறிவிட்டான். ஐ. ஸி. எஸ். பட்டம் பெற்றபோது அவனுக்கு வயது இருபத்து மூன்றுதான்!
'ஐ.ஸி.எஸ். படித்தவர்' என்றாலே, 'ஆண்டவனுக்கு அடுத்தவர்' என்று நினைக்கும் காலம் அது! ஆனால், அந்த இளைஞன் பணத்தைப் பற்றியோ, பதவியைப் பற்றியோ கவலைப்படவில்லை. பம்பாய் வந்து இறங்கியதும். உடனே விடுதலைப் போரில் குதித்துவிட்டான்! பல முறை சிறை சென்றான்; பல முறை நாடு கடத்தப்பட்டான்; வாழ்நாள் முழுவதையும் தேசத்துக்காகவே அர்ப்பணம் செய்தான்.
அந்த இளைஞன்தான் 'ஜெய் ஹிந்த்' என்னும் மந்திரத்தைத் திக்கெல்லாம் முழங்கச் செய்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்!
இன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 126 வது பிறந்த நாள்.