
வீடு ஒழுங்கமைப்பு நிபுணர்கள் (organizing experts) வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் பின்வரும் இரண்டில் ஏதாவது ஒரு வகையில் சேர வேண்டும் என்கிறார்கள்.
தேவை சார்ந்த பொருள்— இந்தப் பொருள் உங்களுடைய ஏதாவது ஒரு தேவையைப் பூர்த்தி செய்கிறது. உதாரணமாக குளிர்பதனப் பெட்டி. இது உங்களுடைய பலசரக்கு சாமான்கள் கெடாமல் பாதுகாத்து, உங்களுடைய காய்கறிகளை நீண்ட நாட்கள் அழுகாமல் வைக்கிறது. உங்களுடைய உணவுத் தேவைக்கு இது முக்கிய பங்காற்றுகிறது. இது ஒரு தேவை சார்ந்த பொருள்.
அழகு சார்ந்த பொருள் - இந்தப் பொருள் உங்களுடைய தேவை சார்ந்தது அல்ல. ஆனால், அது உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. அதைக் காணும் போதெல்லாம் உங்களுக்கு ஒரு புத்துணர்ச்சியும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. உதாரணமாக வீட்டில் இருக்கும் ஒரு பெரிய இயற்கைக் காட்சி ஓவியம். இது உங்களுக்கு எந்த ஒரு தேவையைப் பூர்த்தி செய்யாத போதிலும் அதை காணும்போதெல்லாம் உங்களுக்கு மகிழ்ச்சியும் வீட்டில் ஒரு அமைதியும் தோன்றுகிறது.
எனவே நீங்கள் எந்தப் பொருள் வாங்கினாலும் அது இந்த இரண்டு வகைகளுக்குள் வருகிறதா என்று பாருங்கள்.
உலகளாவிய புகழ்பெற்ற வீட்டு ஒழுங்கமைப்பு நிபுணர் மேரி கோண்டோ (Marie Kondo), பின்வரும் சாம்யத்தைக் கூறுகிறார்கள்.
வீட்டிலுள்ள ஒவ்வொரு பொருளும் உங்களுக்கு மகிழ்ச்சியை மிளிரச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாத பொருட்களை மற்றவர்களுக்குக் கொடுத்து விடலாம் என்று கூறுகிறார்கள்.
ஆங்கிலத்தில், does it spark joy? அதாவது இது எனக்கு மகிழ்ச்சி மிளிரச் செய்கிறதா? என்ற கேள்வியை ஒவ்வொரு பொருளையும் கையிலெடுத்து எழுப்புமாறு கூறுகிறார்கள்.
உங்களுக்குத் தேவையாகவோ அல்லது சந்தோஷம் தரும் பொருளாக இருந்தால் மட்டுமே மனதில் மகிழ்ச்சி மிளிரும்.
இவ்வாறு உங்களை சுற்றி, உங்கள் வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாமே உங்களுக்கு மகிழ்ச்சி மிளிரச் செய்யும் பொருட்களாக இருப்பின், உங்களது வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும் என்று கூறுகிறார்கள்.
மேலும், பின்வரும் கேள்விகளை எழுப்பலாம்.
இது தேவையா. இது இல்லாமால் என்னால் சமாளிக்க முடியாதா? (need)
இந்தத் தேவையை என்னால் அளவில் குறைத்துக்கொள்ள முடியாதா? (Reduce)
ஏற்கனவே என்னிடம் உள்ள பொருட்களைக் கொண்டே இந்தத் தேவையை என்னால் பூர்த்தி செய்ய முடியாதா? (Reuse).
இந்தப் பொருள் வாங்கினால் எந்தப் பொருள் அல்லது பொருள்கள் வீட்டிலிருந்து வெளியே செல்ல முடியும்? (One in one out)
இந்தப் பொருள் வாங்கினால், வீட்டின் எந்த பல்வேறு பொருட்கள் வீட்டிலிருந்து வெளியே செல்ல முடியும்? (one in many out)
எனது அக்கம்பக்கத்து நண்பர்களிடமிருந்து பொருள் இரவல் வாங்குவதன் மூலம் இந்தத் தேவையை பூர்த்தி செய்துகொள்ள முடியாதா? (Borrow)
குறைந்த பணச்செலவில் இந்தப் பொருளை வாடகைக்கு எடுத்து உபயோகப்படுத்தி விட்டு மறுபடியும் திருப்பித் தர முடியுமா? (Rent)
ஏற்கனவே பயன்படுத்தப் பட்டப் பொருளை நான் வாங்குவதன் மூலம், சுற்றுச்சூழலுக்கும் பணத்திற்கும் சேமிப்பு ஏற்படுத்த முடியாதா? (recycle)
இந்தப் பொருளை வாங்குவதன் காரணமாக, எந்த அதிகப் பொருட்களை நான் எதிர்காலத்தில் வாங்க நேரிடும்? (add-ons)
கடையில் வாங்குவதற்கு பதிலாக, என்னாலேயே சுயமாகத் தயாரிக்க முடியாதா? (self make)
இந்தப் பொருளை வாங்குவதில் என்னால் எவ்வாறு பணத்தை மிச்சம் பிடிக்க முடியும்? (Save)
இந்தப் பொருளை வாங்குவதை என்னால் தள்ளி போட முடியுமா? (Postpone)
இந்தப் பொருளை என்னால் சலுகை விலையில் வாங்க முடியுமா? (Discount)
இந்தப் பொருளை வாங்குவதற்கு என்னிடம் தேவையான பணம் உள்ளதா? (Sufficient funds)
இந்தப் பொருளை உபயோகிக்க என்னிடம் மனபலம், உடல் பலம் ,பொருளாதார பலம் உள்ளதா? (Capacity)
இந்தப் பொருளை வாங்கியபின் பின்விளைவு நன்மையா தீமையா ? (after effect)
இவ்வாறு பல்வேறு கேள்விகளை எழுப்பிய பின்னரே அந்தப் பொருளை வாங்க வேண்டும்.