0,00 INR

No products in the cart.

துன்பம் தொலைந்த திருநாள்!

புராணக் கதை : ஆர்.பொன்னம்மாள்
ஓவியம்             : வேதா

“தேவேந்திரன் தங்களைக் காண வந்திருக்கிறானாம்!” என்று சத்தியபாமா கூற, வெளியே எழுந்து வந்தார் கிருஷ்ணர்.

கிருஷ்ணரை வணங்கிய இந்திரன், “மதுசூதனா! பிராக்ஜோதிடபுரத்திலே நரகாசுரன் என்பவன் எந்த உலகத்தில் அழகான பெண் இருந்தாலும் அவளைக் கவர்ந்து, இழுத்துச் சென்று விடுகிறான். அதோடு, எப்பொழுதும் மழை பெய்வதான வருணனின் வெண்குடையைக் கவர்ந்தான். மந்தர பர்வதத்தின் பொற்சிகரத்தைக் கொண்டு போனான். இப்போது என் தாய் அதிதியின் அமுதம் ததும்பும் குண்டலங்களைப் பறித்துச் சென்று விட்டான். அவனை நீதான் அடக்க வேண்டும்” என்று விண்ணப்பித்தான்.

இந்திரனுக்கு சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தார் கிருஷ்ணர். பிறகு, கருடனை நினைத்தார். கருடன் வந்ததும் அதில் ஏறிக்கொண்டார்.சத்தியபாமா தானும் வருவதாகச் சொல்ல, அவளையும் அழைத்துக்கொண்டு பிராக்ஜோதிடபுரம் சென்றார். ஒருபுறம் மலை அரணாயிருக்க, எதிர்ப்புறம் அக்னி துர்க்கமும், வலதுபுறம் ஜல துர்க்கமும், இடதுபுறம் வாயு காவலனாகவும் அமைத்திருந்தான் அசுரன். சுற்றி நூறு காத தொலைவுக்குக் கூரிய கத்திகளைக் கொண்ட கயிறுகளைப் பரப்பியிருந்தான்.
கண்ணபிரானோ, பூமியில் கால் படாமல் ஆகாயத்தில் இருந்தபடியே நரகனின் சேனைகளை அழித்தார். சுதர்சனம் தரையில் பரப்பியிருந்த கயிறுகளைத் துண்டித்தது. நரகனின் மந்திரி முரனை, அவனது மக்களோடு சம்கரித்து, ‘முராரி’ எனப் பெயர் பெற்றார் கண்ணபிரான். முடிவில் நரகாசுரனையும் வீழ்த்தினார்.
நரகாசுரன் வராஹ அவதாரம் எடுத்தபோது, கடலுக்கடியிலிருந்து பூமாதேவியை மீட்டு வந்த ஆலிங்கனத்தில் உண்டானவன். ‘தாயையன்றி வேறெவராலும் மரணம் நேரக்கூடாதெ’ன்று தவமிருந்து வரம் பெற்றவன்.

ஓவியங்கள் : வேதா

சத்தியபாமா பூமாதேவியின் அம்சம். நரகன் மீது சுதர்ஸனத்தை வீசும்போது, அவள் ஸ்பரிசமும் சக்கரத்தில் பதிந்திருந்தது. நரகாசுரன் உயிர் பிரிகையில் கண்ண பரமாத்மாவிடம், “இந்த நாளை எல்லோரும் சந்தோஷமாகக் கொண்டாட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டான். அப்படியே அருள்பாலித்தார் பகவான்.

அந்த இரவின் நான்காம் ஜாமத்தில் பாமாவோடு ஊருக்குள் பிரவேசித்தார் முகுந்தன். பகவானை வரவேற்க ஒவ்வொரு வீட்டு வாசலிலும் தீபம் ஏற்றப்பட்டிருந்தது. மக்கள் துன்பம் தொலைந்ததென்று எண்ணெய் தேய்த்துக் குளித்தனர். நரகனின் புதல்வன் பகதத்தன் 16,100 பெண்களையும் சிறை மீட்டு அனுப்பினான்.

அவர்கள் கிருஷ்ணன் தாள் பணிந்து, “எங்கள் ஊருக்குச் செல்ல முடியாது. ஊரார் பழிப்பார்கள்” என்று கண்ணீர் விட, அவர்களை பாதுகாவலோடு துவாரகைக்கு அனுப்பி வைத்தார் பகவான்.

பகதத்தன் தெய்வத் தம்பதியரை நீராட வைத்து, அவர்களுக்குப் பட்டாடைகளையும், பொன்னாபரணங்களையும் பரிசாக அளித்தான். 6,000 சிறந்த யானைகளையும், 21 லட்சம் காம்போஜ குதிரைகளையும் துவாரகைக்கு அனுப்பினான். கண்ணபிரான் – சத்தியபாமா வுக்கு இனிப்புகளோடு விருந்திட்டான். வருணனுடைய வெண் குடையையும், மணி சிகரத்தையும், அதிதி தேவியின் அமுத குண்டலங்களையும் சமர்ப்பித்தான்.

ஸ்ரீ கிருஷ்ணன் அவற்றை தேவலோகம் சென்று இந்திரனிடம் சமர்ப்பித்து, பாமா விரும்பியபடி பாரிஜாத மரத்தை எடுத்து வந்து பாமாவின் அரண்மனைத் தோட்டத்தில் நிறுவச் செய்தார்.

16,100 பெண்களையும் அவரவர் குல வழக்கப்படி 16,100 கிருஷ்ணராக வடிவெடுத்து மணந்து கொண்டு சந்தோஷமாக வாழ வைத்தார்.

பகதத்தன் மாளிகை வரும் வழியெல்லாம் ஸ்ரீ கிருஷ்ணரை வரவேற்று மக்கள் வெடி வெடித்தனர். நாமும் அதே விதமாக பட்டாசு வெடித்தும், வெகுமதிகள், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி பரந்தாமனை சந்தோஷப்படுத்துகிறோம்.

திருப்பாற்கடலைக் கடைந்து அமிர்தம் கிடைத்த நாளும் ஐப்பசி அமாவாசை. அன்று மகாலக்ஷ்மி எள்ளுச் செடிகளை மிதித்துக்கொண்டு போக, பின்னால் வந்த பரந்தாமன் “இன்று எண்ணெய் தேய்த்துக் குளித்து உன்னைப் பெருமைப்படுத்துவார்கள்” என்று எள் செடிகளுக்கு வரமளித்தார்.

அவர் பாதத்திலிருந்து உற்பத்தியான கங்கைக்கும், “இன்று அதிகாலை ஜலவாசம் செய்வாய்” என்று உத்தரவிட்டார். “கங்கா ஸ்நானமாயிற்றா?” என்று விசாரிப்பதன் காரணமும் இதுவே.

(மங்கையர் மலர் நவம்பர் 1-15, 2015 இதழில் வெளியானது.)

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

இனியில்லை கடன்!

4
சிறுகதை– நாமக்கல் எம்.வேலு ஓவியம்; தமிழ் அழைப்பு மணி சத்தம் கேட்டுப் போய் கவைத் திறந்து பார்த்தால், ராமசாமி வந்து நின்றார். சோமசுந்தரத்திற்கு அதிர்ச்சி.  ‘ என்ன இவன் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று வந்து நிற்கிறான்....

கட்டதுரைக்கு  கட்டம் சரியில்லை…

‘சிரி’ கதை - தனுஜா ஜெயராமன் ஓவியம்: பிரபுராம் அலாரத்தை தலையில் தட்டி நிறுத்தியபடி திடுக்கிட்டு விழித்த சுப்பு... கண்களை தேய்த்துக்கொண்டே சோம்பல் முறித்தார்… எழுந்து சென்று பிரஷை எடுத்தார். பிரஷ் ஸ்டேண்ட் தொபுக்கென விழுந்தது. சத்தம்...

ஐக்கியம்! 

2
எழுதியவர்:   அன்னக்கிளி வேலு ஓவியம்: தமிழ் பகுதி - 2 அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அம்மா போன் பண்ணியிருந்தாள். அவனுக்கு கல்யாணம் பண்ணவேண்டுமாம். ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு அவன் இளைத்தே போய்விட்டானாம். மதுரையிலிருந்து திருச்சிக்கு போன் பண்ணினால்...

பாசமழை

3
கொட்டும் மழையில் நடுங்கியபடி செல்லும் அந்த ஆம்புலன்ஸ் வண்டியில்  வடிந்து கொண்டிருக்கும் உயிரோடு போராடிக் கொண்டிருப்பவர் பரமசிவம். தீபாவளி மிகவும் மகிழ்ச்சியாகத்தான் கழிந்தது.பேரன் அருணோடு  பட்டாசு கொளுத்தி மகிழ்ந்தவர் தான்.  அடுத்த இரண்டு...

தேய்(ப்)பவர்கள்   

2
      “துணி வாங்கிட்டீங்களா…?” – சைக்கிளில் போகும் அவரை, வண்டியில் கடந்த இவன் கேட்டான். பின்னால் அடுக்கியிருக்கும் துணி மூட்டைகள் சாய்ந்துவிடக் கூடாது. அதுதான் முக்கியம். விழுந்தால் எல்லாம் மண்ணாகிப் போகும். வாஷ் பண்ணிய...