சாணிக் காயிதம்: வன்முறை டூ மச்!

சாணிக் காயிதம்: வன்முறை டூ மச்!

லதானந்த்.

பார்த்துப் பார்த்துச் சலித்துப்போன பழிவாங்கல்தான் கதை. அமேஸான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. நல்லவேளை இது தியேட்டரில் வெளியாகவில்லை; வெளியாகியிருக்கவும் முடியாது – அவ்வளவு வன்முறை.

நமக்குத் தீங்கிழைத்தவர்களுக்குச் சட்டம் கொடுக்கும் தண்டனை போதாது; அவர்களை அழித்தொழிக்கவேண்டும் என்ற மிகத் தவறான கருத்து இப்படத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. தமது முகத்தில் எச்சில் துப்பியவனைத் தண்டிக்க வில்லனும் அவனது அடியாட்களும் செய்யும் தீய செயல்கள், டஜன் கணக்கில் கொலைகள் விழக் காரணமாகிவிடுகிறது.

இதுநாள் வரை நாம் பார்த்த கீர்த்தி சுரேஷா இவர் என ஆச்சரியப்படும் விதத்தில் நடிப்பில் அசத்தியிருக்கிறார் மனுஷி. நடிப்பில் குரூரமும் ஆவேசமும் கொப்பளிக்கிறது. அடேயப்பா! அதே போலப் பலரையும் நடிக்கவைத்த செல்வராகவன், சங்கையா என்ற பாத்திரத்தில் பிச்சு உதறியிருக்கிறார்.

படத்தில் பெண்களை இழிவுசெய்யும் வசனங்கள் பல வருகின்றன. வில்லன்கள் பேசுவதாகவே இருந்தாலும் அவை முகம் சுளிக்க வைக்கின்றன. அதேபோல பல கொச்சை வார்த்தைகள் 'பீப்' செய்யப்பட்டும், செய்யப்படாமலும் ஒலித்துக் காது கூச வைக்கின்றன. நீதிமன்றத்தில் கீர்த்தியை நோக்கி வில்லன் காண்பிக்கும் ஆபாச சைகை படு மட்டம். தவிர்த்திருக்கலாம்.

படம் தொழில்நுட்ப ரீதியில் மிக முன்னேறியிருக்கிறது. குறிப்பாக கருப்பு – வெள்ளையில் காண்பிக்கப்படும் ஆரம்பக் காட்சி, பின்னர் விரைவிலேயே வண்ணக் காட்சியாக  'சிங்க்' ஆவதைச் சொல்லலாம்.

கீர்த்தி சுரேஷுஎம், செல்வராகவனும் ஏறக் குறைய ஒரு சில ஆடைகளை மட்டுமே அணிந்து படம் நெடுகிலும் வருகின்றனர்.

குற்றவாளிகள் நீதிமன்றத்தில் இருந்து தப்பித்தபின், எதற்காக வலியப் போய் அவர்கள் சரணடைந்தார்கள் என்பது குழப்பமாகவே இருக்கிறது.

புதுமை செய்வதாய் நினைத்துக்கொண்டு ஆறு பாகங்களாகப் பிரித்து படத்தில் அவ்வப்போது டைட்டில் கார்டு போடுகிறார்கள். அதனால் என்ன சொல்லவருகிறார்கள் என்பது தெளிவில்லாமலேயே இருக்கிறது.

ஆரம்பக் காட்சியை அடுத்து வரும் சில காட்சிகள் மெல்ல நகர்கின்றன. அதற்குப் பின்னர் படம் ஜெட் வேகமெடுக்கிறது. தன்னைக் கொல்ல வரப் போகிறார்கள் எனத் தெரிந்தும் திரையரங்கில் துணையின்றி முக்கிய வில்லன் படம் பார்க்கும் காட்சியில் லாஜிக் மீறல் அப்பட்டம்.

மொத்தத்தில்: தொழில்நுட்பம், கதை சொல்லும் உத்தி, தேர்ந்த ஒளி, ஒலிப் பதிவு ஆகியன பாராட்டத் தகுந்தன. மற்றபடி குரூரம், ரத்தம் சிந்துதல், கொலைகள், சித்ரவதைக் காட்சிகள் டூ மச்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com