டான்; அறியும் தேடல்!

டான்; அறியும் தேடல்!

-ராகவ் குமார்

தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு வந்துள்ள கல்லூரி கதை டான். சிவகார்த்திகேயன் நடிப்பில், சிபி சக்ரவர்த்தி டான் படத்தை இயக்கி உள்ளார்.

'நமது பிள்ளைகளை விருப்பமான துறையை தேர்ந்தெடுக்க விடுங்கள்' என பெற்றோர்களுக்கும், 'உள்ளுக்குள் அன்புடனும் வெளியில் கரடு முரடாக தெரியும் அப்பாவை புரிந்து கொள்ளுங்கள்' என மகன்களுக்கும் சொல்லும் படம் டான்.

கண்டிப்பு நிறைந்த அப்பா சமுத்திரக்கனியின் வற்புறுத்துத்தலால் வேண்டா வெறுப்பாக பெஸ்ட் என்ஜினீயரிங் கல்லூரியில் சிவா சேருகிறார். அங்கே படிப்பதற்கு பதிலாக கட்டுப்பாடுகளுடன் இருக்கும் கல்லூரியை மாற்ற முயற்சிக்கிறார்.இதனால் டிசிப்ளின் கமிட்டி தலைவராக இருக்கும் எஸ். ஜெ. சூர்யாவின்   கடும் கோபத்திற்கு ஆளாகிறார்.''உன்னை டிகிரி முடிக்க விட மாட்டேன்'' என சிவாவிடம்  சவால் விடுகிறார் சூர்யா.  இறுதியில் என்ன ஆனது,? சிவா டிகிரி முடித்தாரா? தனது திறமையை கண்டறிந்தாரா? என்பதை தொய்வில்லாத திரைக்கதையில் சொல்லிருக்கிறார் டைரக்டர்.

இப்படத்தில் நண்பன், அப்பா படங்களின் சாயல் இருப்பதை மறுக்க முடியாது. இருப்பின்னும் தனித்துவமான காட்சி அமைப்பு நன்றாகவே உள்ளது.  சிறந்த நடிப்பை வரிசைப்படுத்தினால் எஸ். ஜே. சூர்யா, சமுத்திரக்கனிக்குப் பின்புதான் சிவகார்த்திகேயன் வருகிறார்.

சூர்யா அலட்டாமல் ஸ்டைலான நடிப்பை தந்துள்ளார். கனி கண்டிப்பும் கனிவும் கலந்த நடிப்பில் வாழ்ந்துள்ளார்.சிவா வழக்கம்போல துள்ளல், ரொமான்ஸ் என அசத்தி இருக்கிறார்.ப்ரியங்கா வழக்கம் போல வந்து போகிறார். பள்ளி மாணவியாக வரும்போது அடடே போட வைக்கிறார். அனிருத் படத்திற்கு இன்னொரு ஹீரோ. மாணவனும், மாணவியும் பேச கூடாது, சிறிய தவறுகளுக்கு கூட அபராதம், என பல கல்லூரிகளின் அபத்தங்களை  சொல்லி உள்ளது இப்படம்.

இருந்தாலும் ஆசிரியர்களையும், கல்லூரி முதல்வரையும் முட்டாள்கள் போலவும், காமடியன்களாகவும் சித்தரித்து உள்ளார் டைரக்டர். வகுப்பறையில் மாணவர்கள்  ஆசிரியர்களிடம் மோசமாக நடந்து கொள்ளும் இது போன்ற சூழலில் இது போன்ற காட்சிகள் தேவையா? சிவ கார்த்திகேயன் இதை தவிர்த்துதிருக்கலாம்.

டான் -தான் யார் என்று அறியும் தேடல்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com