
நாட்டில் உள்நாட்டு விமான பயணிகளுக்கு இ–பாஸ் அவசியம் என்று இந்திய விமான நிலைய ஆணையம் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.
உலகின் பல நாடுகளில் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து இந்திய விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்:
ஒமிக்ரான தொற்று நம் நாட்டில் பரவாமல் தடுக்கும் வகையில் இந்திய மருத்துவக் கவுன்சில் ஐசிஎம்ஆர் அறிவுறுத்தலின் படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளை ஸ்கேனர் கருவிகள் மூலம் சோதனை செய்ய அறிவுறுத்தப் பட்டுள்ளது. அதேபோல உள்நாட்டுப் பயணிகளுக்கு இ–பாஸ் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. கேரளாவில் இருந்து சென்னை, கோவை போன்ற விமான நிலையங்களுக்கு வரக்கூடிய அனைத்து பயணிகளும் 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ், அல்லது 72 மணி நேரத்திற்கு முன்னால் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்று வைத்திருக்க வேண்டும்.
–இவ்வாறு இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், உள்நாட்டு விமான நிலையங்களிலும் ஒமிக்ரான் பரவலை தடுப்பதற்காக பல்வேறு புதிய நெறிமுறைகளை இந்திய விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவுகள் இன்று முதல் அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளது.