
நாம் செய்யும் எல்லா வினைக்கும் எதிர்வினை உண்டு என்பதை பறைசாற்றுவதுதான் கர்மா. அந்தக் கருவை மையமாகக் கொண்டு கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு தொடர்தான்'கர்மா'.
திரைப்படங்கள் நன்றாக வரவேற்பைப் பெறும் பட்சத்தில் அந்தத் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் முதன்முறையாக ஏறக்குறைய பதினைந்து வருடங்களுக்கு முன்பு தொடர்கதையாக்கப்பட்ட கர்மா என்னும் சின்னத்திரை தொடர் மீண்டும் அதே பழைய நடிகர்களோடு இரண்டாம் பாகமாகத் தற்போது யூடியுபில் ஒளிபரப்பாகி வருவது அந்தத் தொடருக்கு ரசிகர்களிடத்தில் ஏற்பட்ட வரவேற்பையும் பிரியத்தையும் காட்டுகிறது.
எழுபது எண்பது வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஒரு பிராமண அக்ரஹாரத்தை மையமாகக் கொண்ட ஒரு பிராமணக் குடும்பம், அவர்களுடைய பழக்க வழக்கங்களையும், நடவடிக்கைகளையும், அன்றாட வாழ்க்கை முறைகளையும், மையமாகக் கொண்ட ஒரு தொடராக அமைந்தது.
இருவேறு காலங்களையும் அதாவது 1930களில் மற்றும் 2005ல் நடந்த கதையும், இருவேறு தலைமுறைகளையும், இருவேறு காலகட்டத்தையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு சின்னத்திரைத் தொடராக இது அமைந்தது.
மீண்டும் தற்போது இதனுடைய இரண்டாம் பாகமும் அதே வரவேற்பைப் பெற்றுள்ளது பாராட்டத்தக்கது. முதல் பாகத்தில் நடித்த அதே நடிகர்களும் இதில் நடித்திருப்பது மிகுந்த சிறப்புக்குரியது. இந்தச் சின்னத்திரை தொடரை இயக்கி இருக்கிறார் இயக்குநர் பாம்பே சாணக்கியா.
இவர் இயக்குநர் சிகரம் பாலசந்தரின் பட்டறையில் பட்டை தீட்டப்பட்டவர். சாணக்கியா எனும் தொடரையும் இவர் இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.