மூன்று வகை மனிதர்கள்!

மூன்று வகை மனிதர்கள்!

– ஆர்.சுந்தரராஜன்

ருசமயம் பகவான் மகாவிஷ்ணு கருடனுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் கருடனிடம், "இந்த உலகில் எத்தனை விதமான மனிதர்கள் உள்ளனர் என்று உனக்குத் தெரியுமா?" என்று ஏதும் அறியாதவர் போல் கேட்டார்.

அதனைக் கேட்ட கருடன் சற்றும் யோசிக்காமல், "மூன்று வகையான மனிதர்கள் உள்ளனர் மகாபிரபு" என்றார்.

"இத்தனை பெரிய உலகில் மூன்று விதமான மனிதர்கள்தான் உள்ளனரா? அவர்கள் பற்றி சற்று விளக்கமாகக் கூறு கருடா" என்றார்.

கருடன் கூற ஆரம்பித்தார்… "மனிதர்களில் முதல் வகையினர் பறவையும் அதன் குஞ்சுகளும் போல் உள்ளனர். இரண்டாம் வகையினர் பசுவும் அதன் கன்றும் போல் உள்ளனர். மூன்றாம் வகையினர் கணவனும் மனைவியும் போல் உள்ளனர் ஸ்வாமி" என்றார்.

அதைக்கேட்ட மகாவிஷ்ணு, "சற்று விளக்கமாகத்தான் கூறேன்" என்றார்.

"முதல் வகையினரான, 'பறவையும் அதன் குஞ்சுகளும்' எப்படியென்றால், பறவை முட்டையிட்டு குஞ்சு பொரித்துவிட்டு அதன் குஞ்சுகளுக்காக உணவு தேடிப் போகிறது. அது வெளியே சென்று வருவதற்குள் பாம்புகளாலும் மற்ற பறவைகளாலும் பல்வேறு தொல்லைகளை அனுபவிக்கின்றன குஞ்சுகள். சமயத்தில் சில குஞ்சுகள் மடிந்தும் போகின்றன. வெளியில் சென்று திரும்பிய பறவை, காணாமல் போன தனது குஞ்சுகளுக்காக பெரிதாகக் கவலைப்படுவதில்லை. உயிரோடு இருக்கும் குஞ்சுகளுக்கு உணவு ஊட்டும். அதேபோல், தன் வாயில் ஊட்டப்படும் உணவு மட்டும்தான் குஞ்சுகளுக்குத் தெரியுமே தவிர, தனது தாய் யார்… தகப்பன் யார் என்பது தெரியாது. சில நாட்களில் அந்தக் குஞ்சுகள் பறக்க முயற்சி செய்யும். அந்த முயற்சியிலும் சிலது கீழே விழுந்து செத்து மடியும். இவை அனைத்தையும் கடந்த பறவைகளே உயிர் வாழும்.

இதுபோலத்தான், இந்த வகையான மனிதர்கள் போராட்ட வாழ்வுடன் தினக் கூலிகளாக வாழ்ந்து, கிடைத்ததை உண்பார்கள்… கிடைக்காவிடில் பட்டினி கிடப்பார்கள். அவர்களுக்குக் கடவுளாகிய உன்னைப் பற்றி கூடத் தெரியாது. வாழ்க்கை உள்ள வரை மட்டுமே அவர்களது வாழ்வு. அவ்வளவே.

ரண்டாவது வகையினரான, 'பசுவும் கன்றும்' எப்படியென்றால், பசு ஓரிடத்தில் கட்டப்பட்டிருக்கும், அதன் கன்று வேறொரு இடத்தில் கட்டப்பட்டிருக்கும். கன்று பசுவைப் பார்த்து கத்தும், பசு கன்றைப் பார்த்து கத்தும். கன்றுவுக்குத் தெரியும், தாய் பசுவின் மடியிலிருக்கும் பாலை அருந்தினால்தான் தனது பசி அடங்கும் என்பது. ஆனாலும், அதன் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் ஒரு முழம் கயிறு கன்றை பசுவிடம் செல்லவிடாமல் தடுக்கும். அதுபோல்தான், ஒருசாராருக்கு உன்னைத் தெரியும்… உன் வழி தெரியும்… உன்னால்தான் மனித வாழ்வு நிரந்தர சுகம் பெறும் என்பதும் தெரியும். ஆனாலும் உன்னிடம் வர முடியாமல் பாசம் என்ற ஒரு முழுக் கயிற்றில் மாட்டிக்கொண்டு உன்னைப் பார்த்துப் பார்த்து ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மூன்றாவது வகையினரான, 'கணவனும் மனைவியும்' எப்படியென்றால், முன் பின் அறிமுகமில்லாத ஒரு ஆணும் பெண்ணும் திருமணமான புதிதில் சரியாகக் கூடப் பேசிக்கொள்ள மாட்டார்கள். ஆனால், அந்தப் பெண்ணோ அவனைத் திருமணம் செய்த நாளிலிருந்து அவன் நினைவாய் இருந்து, அவனுக்குப் பிடித்தபடி நடந்து, அவனுக்குப் பிடித்த உணவு சமைத்து, அவனுக்காகவே பிறந்தவள் என்பதை அவனுக்கு உணர்த்தி அவன் மீது பாசத்தைப் பொழிவாள். முதலில் கண்டும் காணாமல் இருந்த அவன், ஓராண்டுக்குள் அவளது அன்பில் கரைந்து அவள் சொல்வதையெல்லாம் கேட்கிறான். பிறகு அவளை ஒருபோதும் பிரிய மறுக்கிறான். அதுபோல ஒருசாரார் உன்னை காண முற்படும் வேளையில் உனக்குப் பிடித்தபடி நடந்து தங்களை மாற்றிக் கொள்கிறார்கள்.

முதலில் அவர்களை சோதிக்கும் நீ, அவர்களின் தூய்மையான அன்பில், பக்தியில் கரைந்து அவர்களோடு உறவாடுகிறாய். முடிவில் அவர்களை உன்னோடு ஐக்கியப்படுத்தியும் கொள்கிறாய். அவர்களும் மகிழ்வோடு உன்னோடு கலந்து விடுகிறார்கள். ஆக, இப்படி மூன்று விதமான மனிதர்கள்தான் இன்று உலகில் வாழ்ந்து வருகின்றனர்" என்றார் கருடன்.

கருடனின் புத்திக் கூர்மையையும் மனித வாழ்வின் வகைப்பாட்டையும் அறிந்த பகவான் மகாவிஷ்ணு மனம் மகிழ்ந்து கருடனை வாழ்த்தினார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com