கோயில் சுற்றிப் பார்க்கலாம் வாங்க!

மாமல்லபுரம் பஞ்சரதங்கள்
பல்வகை விமானங்கள்
மாமல்லபுரம் பஞ்சரதங்கள் பல்வகை விமானங்கள்

”அடேங்கப்பா! எம்மாம் பெரிய கோயில்!!!” என்று வாய்பிளந்து அதிசயிப்பவர்கள் பலரும் கூட அடிப்படையில் அந்த கோயிலின் கட்டுமான இலக்கணங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. கர்ப்பக்ருஹத்தில் சான்னித்யம் படைத்த கடவுளர்கள் அருள்பாலிக்கிறார்கள். “இறைவா! காப்பாற்று” என்று நமது வேண்டுதல்களோடு திரும்பிவிடுகிறோம். மனதுக்கு சாந்தி தரும் தலமாக கோயில்கள் இருக்கின்றன. பழங்கால கோயில்கள் எதற்குள் நுழைந்து வெளியே வந்தாலும் இந்த மன திருப்தியும் நிம்மதியும் ஏற்படுகிறது என்றால் அதற்கான காரணம் சக்திவாய்ந்த தெய்வங்கள் என்ற நம்பிக்கை நமக்குள் எழுவதாலும் அத்தகைய திருக்கோயில் அமைப்புகளும் அதற்கு இன்னொரு காரணமாக அமைகின்றன.

சென்னை போன்ற பெருநகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழும் நம் பலருக்கும் லீக்கேஜ், வாட்டர் ப்ரூஃபிங், க்ராக் ஃபில்லிங் இந்த மாதிரி வார்த்தைகள் வெகு சகஜம். கட்டிய ஓரிரு ஆண்டுகளிலேயே இப்பிரச்சினைகள் தலை தூக்கும். பிரம்மாண்டமாக கட்டப் பட்டிருக்கும் நம் விமான நிலையங்களும் இதற்கு விதி விலக்கல்ல. எவ்வளவோ தொழில்நுட்பம் வளர்ந்த போதும் இந்நிலை.

ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். பலநூறு ஆண்டுகளாக, ஏன் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உயர்ந்து நிற்கும் நம் கோயில்கள். என்ன ஒரு கட்டுமானக் கலை! என்ன கம்பீரம்! என்ன அழகு!

அதுவும் நாம் இப்போது இருப்பதைப் போல வெற்றுச் சதுரப் பெட்டகங்களாக அவை கட்டப்படவில்லை. எத்தனையோ கலை அம்சங்கள், சிற்பங்கள், வேலைப்பாடுகள் என்று இணைத்துக் கொண்டு அழகின் உருவமாக நிற்கின்றன. நம் வீடுகளின் சதுரத் தூண்களையும், கோயில்களின் அலங்காரத் தூண்களையும் ஒப்பிடும் போது அவற்றை வியக்காமல் இருக்க முடியுமா என்ன?

சிற்பிகளும், அரசர்களும், மக்களும் இணைந்து உருவாக்கிய இந்த அற்புதமான கோயில்களைப் பற்றி அறிந்து கொள்வதிலேயே நமக்கு நம் நாட்டின், கலாசாரத்தின் சிறப்பைப் பற்றிய பெருமை உண்டாகும்.

இந்த கோயில் கட்டுமானக் கலை என்பது வெகு நேர்த்தியாக வரையறுக்கப் பட்ட ஒன்று. பல ஆகமங்களிலும், சிற்ப சாஸ்திரங்களிலும் இந்த வரையறைகள் சொல்லப்பட்டுள்ளன. கோயில் பெரிதாகக் கட்டப்படும் போது ஏற்படும் விரிவாக்கங்கங்களுக்கும், முன்னேற்றங்களுக்குமான இலக்கணங்கள் அவ்வப்போது பொருத்தமாக சேர்க்கப்பட்டு வந்தன. இவ்வாறு கோயில்கள் சிறிதாக இருப்பினும், பெரிதாக இருப்பினும் அவற்றிற்கான இலக்கணம் பொதுவாக இருந்தது.

அதே போல எந்தப் பொருளை வைத்துக் கட்டப் பட்டாலும் இந்த இலக்கணம் பொதுவானது. ஒரே பாறையை, கல்லைக் குடைந்து வடிக்கப் பட்டவை (உதா. எல்லோரா, மாமல்லபுரம்), கற்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கிக் கட்டப் பட்டவை (உதா. தஞ்சை பெரிய கோயில், காஞ்சி கோயில்கள் மற்றும் பெரும்பாலான கோயில்கள்), மரத்தால், சுதையால் அல்லது தற்காலம் போல கான்க்ரீட் போன்று எதில் கட்டப்பட்டாலும் பொதுவான இந்த இலக்கணம் கடைப்பிடிக்கப் படும்.

கோயில் கட்டுமானக்கலை ஸ்தபதி குடும்பத்தார்களால் பல ஆண்டுகளாக வம்சாவளியாகப் பாதுகாக்கப் பட்டு வருகிறது. இவர்கள் ஆகம, சிற்ப சாஸ்திரங்களை அடிப்படையாகக் கொண்டு கோயில்களை கட்டுகின்றனர். இவர்களுக்கான

கட்டுப்பாடுகளை, பழக்கவழக்கங்களை கடைப்பிடித்து வருகின்றனர். ஆயிரம் ஆண்டுகள் முன்பு ராஜராஜ சோழன் காலத்தில் ஸ்தபதி ஆக இருந்தவரின் வம்சாவளியினர் இன்றும் அதைத் தொடர்ந்து பின்பற்றி கற்று வருவது ஆச்சரியம் அளிக்கும் விஷயம்.

சிற்ப சாஸ்திரங்கள் கோயிலின் பல பாகங்களையும் நுணுக்கமாகப் பெயரிட்டு விளக்குகிறது. இதில் சிலவற்றை உங்களுக்கு பரிச்சயப் படுத்துவதே இந்தக் கட்டுரையின் முயற்சி. இதை வாசித்த பின்னர் கோயிலுக்கு சென்றால் இதில் குறிப்பிட்டுள்ள சிலவற்றை நினைவு கூற முடிந்தால் அது இந்த கட்டுரைக்கு கிடைத்த வெற்றி!

கொடும்பாளூர் மூவர் கோயில்
திராவிட கட்டுமானக் கலை அம்சங்கள்
கொடும்பாளூர் மூவர் கோயில் திராவிட கட்டுமானக் கலை அம்சங்கள்

கர்ப்பக்ருகம்: இது நீங்கள் அறிந்ததே. மூலவர் எனப்படும் ஒரு கோயிலின் முக்கிய கடவுள் வடிவம் இருக்கும் இடம். இது பொதுவாக ஜன்னல்கள் ஏதுமின்றி அமைக்கப் பட்டிருக்கும். நடுவில் மூர்த்தி வடிவம் காணப்படும். பல்லவர் கால கோயில்களில் கர்ப்பக்ருகத்தின் பிற்சுவரில் புடைப்புச் சிற்பம் காணப்படும். பெரும்பாலும் சதுர வடிவில் அமைந்திருக்கும். வட்டமாகவும், நீள்வட்டமாகவும் உள்ள கர்ப்பக்ருகங்களும் உண்டு.

விமானம்: கர்ப்பக்ருகத்தின் நேர் மேலே இருப்பது விமானம். இதைக் கோபுரத்துடன் குழப்பிக் கொள்ளல் கூடாது. உதாரணமாக தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜன் 216 அடிக்கு நெடிதுயர்ந்து கட்டி இருப்பது விமானமே. கோபுரம் அல்ல. விமானத்தில் திராவிட, நாகரி, கஜப்பருஷ்ட, கூடாகார, சாலாகார என பல்வேறு விதமான விமானங்கள் இருக்கின்றன.

ஒவ்வொன்றும் வடிவில் வேறுபட்டவை. இதில் கஜபிருஷ்ட விமானம் மிக வித்தியாசமானது. இதன் கீழேயுள்ள கர்ப்பக்ருகமானது வளைந்து நீள்வட்டமாக அமைந்திருக்கும்.

உபபீடம்: அதிஷ்டானம், பாதவர்க்கம், பிரஸ்தரம் ஆகிய மேற்பகுதிகள் அமர்ந்திருக்கும் அடிப்பகுதி உபபீடம் எனப்படும். உபபீடத்தில் படிப்படியாக அமைந்த எளிமையான பட்டை வரிசைகளைக் காணலாம்.

அதிஷ்டானம்: உபபீடத்தின் மீது கர்ப்பக்ருகத்தின் சுற்றுச்சுவர் அமர்ந்திருக்கும் கீழ்ப்பகுதி அதிஷ்டானம் எனப்படும். இதில் நீங்கள் தாமரை இதழ்கள் போன்று அமைந்த பத்மம் பகுதி, குமுதம் எனப்படும் வளைந்து காணப்படும் பகுதி, யாளி வரிசை இவற்றைப் பார்க்கலாம்.

பாதவர்க்கம்: கர்ப்பக்ருகத்தின் சுற்றுச் சுவர். கோஷ்டம், கும்ப பஞ்சரம், தோரணம் போன்றவை இச்சுவற்றை அலங்கரிக்கின்றன.

கோஷ்டம்: கர்ப்பக்ரக சுற்றுச் சுவரின் மூன்று பக்கமும் அமைக்கப் பட்டிருக்கும் சிறு கோயில் போன்ற அமைப்பே கோஷ்டம் எனப்படும். இந்த கோஷ்டத்தில் சிலைவடிவங்கள் இருக்கும். சிவன் கோயிலென்றால் தெற்கே தட்சிணாமூர்த்தி, நேர் பின்னால் லிங்கோத்பவர், வடக்கில் மகிஷாசுரமர்த்தினி (துர்க்கை) வடிவங்கள் இக்கோஷ்டங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். விஷ்ணு கோயில் எனில் நரசிம்மர், வராகர் உருவங்களை கோஷ்டத்தில் காணலாம். இந்த கோஷ்டச் சிற்பங்கள் பெரும்பாலும் உள்ளிருக்கும் தெய்வத்தின் பிற வடிவங்களாக இருக்கும். செம்பியன் மாதேவி காலத்தில் கோயில்கள் புனரமைக்கப்பட்ட போது கோஷ்டங்களும் ஐந்து, ஏழு என்று அதிகமாயின. பிரம்மா, பிள்ளையார் கோஷ்டங்கள் சேர்க்கப் பட்டன.

மகர தோரணம்: கோஷ்டத்தின் மீது கோயில் கூரை போன்ற அமைப்பில் இரு மகரங்கள் வாயிலிருந்து வருவது போன்ற வேலைப்பாடு மகர தோரணம் எனப்படும். இதில் வீரர்கள், நங்கைகள், மலர்க் கொடிகள், சிலசமயம் நடுவே சிறு தெய்வ ஸ்வரூபங்கள் எல்லாம் காணப்படும்.

கும்ப பஞ்சரம்: பாதவர்க்க சுவற்றில் கோஷ்டங்களைத் தவிர அரைத் தூண் வடிவங்கள் கும்பத்துடன் இருப்பது போல அலங்கார வேலைப்பாடுகளுடன் காணப்படும். இது கும்ப பஞ்சரம் எனப்படும். தஞ்சை பெரிய கோயில் கும்ப பஞ்சரம் அழகானவை. தஞ்சாவூர் அருகே உள்ள புளமங்கை போன்று சில சிறு கோயில்களிலும் கும்ப பஞ்சர வேலைப் பாடுகள் மிக அழகாக அமைந்திருக்கும்.

கொடுங்கை: சுற்றுச் சுவரின் மீது சன்ஷேட் போன்ற மழையிலிருந்து மறைவு, பாதுகாப்பு தரும் அமைப்பே கொடுங்கை எனப்படும். பல கோயில்களில் மிக அழகான வேலைப்பாடமைந்த கொடுங்கைகளைக் காணலாம்.

பிரஸ்தரம்: பாதவர்க்கம் மேலே விமானத்தில் கொடுங்கை அமைந்த பகுதி பிரஸ்தரம் எனப்படும். இதில் கூடு, சாலை போன்ற அமைப்புகளைக் காணலாம்.

கூடு: நாசி என்றும் அழைக்கப்படும் வளைந்து அமைக்கப்பட்ட கூடு நம் கோயில் கலையில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இது இல்லாமல் கோயில் அமைவதில்லை. மற்ற பகுதிகள் இல்லாவிட்டாலும் ஒரு சிறிய கோயிலுக்கும் இந்தக் கலை அம்சம் வடிவம் தருகிறது. இந்தக் கூடு பல வடிவங்களில், அளவுகளில் விமானத்தின், கோபுரத்தின், கோயிலின் பல பகுதிகளை அலங்கரிக்கும். அல்பநாசி, மஹாநாசி, கர்ண கூடு என பல இடங்களில் இவற்றைக் காணலாம். சில கூடுகளின் உள்ளே வடிவங்களும் காணப்படும்.

சாலை: சற்றே அகன்று மேலே சிறு சிகரங்களோடும், நடுவில் கூடோடும், பக்கவாட்டில் இரு பக்கமும் தட்டையான வேலைப்பாடும் உடையது சாலை. விமானத்தில் கூடு, சாலை, கூடு என்று மாறி மாறி வரிசையாக அலங்கரிக்கப் பட்டிருக்கும். கூடு, சாலை இவற்றிற்கு இடையில் இருக்கும் பகுதி ஹரான்தரா எனப்படும்.

வரிசைகள்: அலங்காரமாக அதிஷ்டானம், பிரஸ்தரம் ஆகிய பகுதிகளில் வரிசைகளைக் காணலாம். கண வரிசை, கஜ வரிசை, யாளி வரிசை, ஹம்ச வரிசை என இவ்வரிசைகள் பலவகைப் படும். அவை ஒரே மாதிரி அமையாமல் ஒவ்வொரு கணமும், யாளியும் விதவிதமாக ஆடுவது போலவும் திரும்பிக் கொண்டும் வடித்திருப்பது மேலும் அழகு சேர்க்கும்.

கர்ண கூடு: விமானத்தின் நான்கு மூலைகளிலும் காணப்படுவது கர்ண கூடு. இதுவும் பல வேலைப் பாடுகளுடன், வடிவங்களுடன் அழகாக அமைக்கப் பட்டு விமானத்திற்கு அழகு சேர்க்கும் விதமாக அமைந்திருக்கும்.

தளம்: கூடு, சாலை, ஹரான்தரா, பஞ்சரம் என இந்த வடிவங்களை உள்ளடக்கி அமைக்கப் படும் ஒரு வரிசைப் படி தளம் எனப்படும். விமானம் என்பது ஒரு தளத்தைக் கொண்ட ஏக தள விமானம், இரண்டு கொண்ட த்விதள விமானம் என தளங்களை வைத்து அழைக்கப்படும். பல தளங்களைக் கொண்ட விமானங்களும் உண்டு. தஞ்சை பெரிய கோயில் விமானமானது இவ்வாறு 13 தளங்களை வைத்து அமைக்கப் பட்டது. இந்த கூடு, சாலை வடிவங்களை எண்ணிக்கையிலும், அளவிலும் ஒவ்வொரு தளத்திலும் குறைத்துக் கொண்டே போய் விமானம் வடிவம் பெறுகிறது. மூலைகள் சீராக அமைந்து உயர்ந்து நிற்கும். கங்கை கொண்ட சோழ புர விமானம் இதில் ஒரு அழகான வளைவையும் கொண்டு அமைக்கப்பட்ட அற்புத விமானம் ஆகும். மதுரை கோபுரங்களிலும் இந்த லேசான வளைவைக் காணலாம்.

பிராகாரம்: கர்ப்பக்ரகத்தை வலம் வருவதற்கான வழி பிராகாரம். ப்ராகாரத்தில் பல உபதேவதா ஸ்வருபங்கள் இருக்கும்.

தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் வெளித்தோற்றம்
கோபுரம், அர்த்த மண்டபம், விமானம், பிராஹாரம்
தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் வெளித்தோற்றம் கோபுரம், அர்த்த மண்டபம், விமானம், பிராஹாரம்

அர்த்த மண்டபம்: கர்ப்ப க்ரகத்தின் முன்னால் காணப்படும் மண்டபம். இதைப்போல மகாமண்டபம், நந்தி மண்டபம் என பல மண்டபங்கள் உண்டு. இதற்கு வெளியே கோயிலின் வெளிப் ப்ராகாரம். எல்லா இடங்களிலும் சிற்பங்களையும், பல்வேறு கலை வேலைப் பாடுகளையும் காணலாம்.

தூண்கள்: மகா மண்டபம், நந்தி மண்டபம், நாட்ய மண்டபம் அனைத்தையும் அலங்கரிப்பவை இத்தூண்கள். கோயிலின் உத்திரத்தை தாங்கி நிற்கும் இவை பல காலங்களில் பலவிதமாக அலங்கரிக்கப்பட்டு அளவிலும் வேலைப்பாட்டிலும் மேம்பட்டுக் கொண்டே வந்தன. பிற்காலங்களில் ஆயிரம் கால் மண்டபங்கள் கட்டப்பட்டன.

விதவிதமாக வியக்கத்தக்க சிற்பங்களைக் கொண்டு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பிரமிக்கத்தக்க தூண்களும் உண்டு. உதாரணம்: மதுரை மண்டபத் தூண்கள். கல்யாண சுந்தரரையும், அகோர வீரபத்திரரையும் கண்டு வியக்காமல் இருக்க முடியுமா? அதீதமான தெய்வ பக்தி இல்லையெனில் இத்தகைய அபூர்வ சிலைத் தூண்களை ஒரே கல்லில் வடித்துவிடத்தான் முடியுமா?

அதே போல பல ஒலிகளை எழுப்பும் இசைத் தூண்கள், பல புராணக் கதைகளை புடைப்புச் சிற்பங்களாக உள்ளடக்கிய தூண்கள், மேலே தரங்க போதிகை என்ற எளிமையான

அலங்கார வேலைப் பாட்டிலிருந்து, பிற்காலத்தில் பிரம்மாண்டமான யாளிகளையும், வீரர்களையும், தெய்வ ஸ்வரூபங்களையும் உடையதான தூண்கள். பிரம்மகாந்தா என்ற நான்கு பட்டை தூண்கள், விஷ்ணுகாந்தா என்ற எட்டுப் பட்டைத் தூண்கள், ருத்ரகாந்தா என்ற வட்டத் தூண்கள். அவற்றில் வேறுபாடுகள், வேலைப்பாடுகள்.

கோபுரம்: வெளி நுழைவாயில் மேலே உயர்ந்து தோன்றுவதே கோபுரம். கோபுரத்தின் வாயிற்பகுதி கல்லினால் கட்டப் பட்டிருக்கும். மேலே உள்ள பகுதி சுதையால் ஆனது.

சோழர் காலத்திற்குப் பின் வந்த நாயக்கர் காலத்தில்தான் தற்போது காணப்படும் பிரம்மாண்டமான கோபுரங்கள் கட்டப்பட்டன. தஞ்சாவூர் பெரிய கோயிலில் உயர்ந்து காணப்படுவது கர்ப்ப க்ருகத்தின் மீதமைந்த விமானமே. கோயிலின் நுழைவாயிலில் (கேரளாந்தன் வாயில்) சிறிய அளவில் காணப்படுவதே பெரிய கோயிலின் கோபுரம்.

கோபுரங்கள் கூடு, சாலை அமைப்புகளை உள்ளடக்கியும், எண்ணற்ற வடிவங்கள், புராணக் கதை கூறும் சிற்பங்கள், மரங்கள், வேலைப்பாடுகளைக் கொண்டும் உயர்ந்து நிற்கின்றன. கோபுரம் செவ்வக வடிவத்தில் அடித்தளத்தைக் கொண்டிருக்கும். கோபுரத்தின் உச்சியில் சாலாகார சிகரம் அமைந்திருக்கும். இதன் மீது கலசங்கள் பொன் வேய்ந்து அமைந்திருக்கும். கோபுர வாசலில் இரு புறமும் கங்கா, யமுனா இவர்களின் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப் பட்டிருக்கும். கோயிலுனுள் நுழையும் முன் கால் அலம்பிச் செல்வதன் உருவகமாக இந்த இரு நதிகளின் உருவமும் செதுக்கப் பட்டிருக்கின்றன. இதைத் தவிர தெய்வ வடிவங்கள், நாட்டிய முத்திரைகள் என்று பல சிற்பங்களை கோபுர வாயில் உள்பகுதியிலும் காணலாம்.

குளங்கள்: கோயில்களின் ஒரு அங்கம் குளம். ஊருக்கு நீர் நிலையாகவும், குளிர்ச்சி தருவதாகவும், தெப்பம் போன்ற உற்சவங்கள் நடத்தவும் குளங்கள் அமைக்கப்பட்டன. இக்குளங்கள் நடுவேயும் கோயில் போன்ற அமைப்பு காணப்படும். இக்குளங்களின் படிகள் அமைப்பிலும் பல கலை வேலைப்பாடுகள் அமைந்த குளங்களைக் காணலாம். படிக்கிணறு எனப்படும் குளங்கள் அற்புதமானவை.

இந்தக் கட்டுரை கட்டுமானக் கலையின் ஒரு சிறு பகுதியை மட்டுமே விளக்க முயற்சிக்கிறது. இதைத் தவிர மூர்த்தி ஸ்வரூபங்கள், சிற்பங்கள், சிலைகள், புடைப்புச் சிற்பங்கள் என சொல்லிக் கொண்டே போகலாம். சொல்லி முடிவதில்லை இக் கட்டிடக் கலை. எழுதும் போதே கோயிலை வலம் வந்த அனுபவம் அடைந்தேன். கண்ணில் நீர் நிரம்ப அந்தப் பெயர் தெரியா சிற்பிகளையும், ஸ்தபதிகளையும் வணங்கி இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன். இனி கோயில் செல்லும் போது இந்தக் கலை அம்சங்களை ரசித்துப் பார்ப்பீர்களானால் அது வரம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com