மா கங்கா!

மா கங்கா!

இன்று பொன்னி நதி உலகம் முழுவதும் பேசு பொருளாகியிருக்கிறது. காரணம், அமரர் கல்கி. அதன் அடிப்படையில் வந்துள்ள திரைப்படம். ராஜராஜசோழனின் வாழ்வோடு சம்பந்தப் பட்ட புனைவாக இருப்பினும், பொன்னி என்று தமிழர்களால் அன்பு, பாசம், பக்தியோடு அழைக்கப்படும் காவிரி நதி போல் அன்னை பாரதத்தின் பல புனித நதிகளில் தலையானவள் கங்க மாதா.

பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் கீதையில் தான் நதிகளில் கங்கையாக இருப்பதாக கூறுகிறார். இப்புண்ணிய தேசத்தில் வசிக்கும் ஒவ்வொருவரும் அவளைக் காணவேண்டும், அப்புனித நீரில் மூழ்கி எழ வேண்டும், சாகும் தருவாயில் ஒரு சொட்டு கங்கையையாவது பருகி பிறவிப் பெருங்கடலை கடந்து கரை சேர வேண்டும் என்றே இறைவனை இறைஞ்சுகின்றனர். ஒருவர் தன் வாழ் நாள் முடியும் நேரத்தில் எங்கிருந்தாலும் கங்கை என்று உச்சரித்தாலோ அல்லது அவரது உடலின் சாம்பல் கங்கையில் கரைக்கப்பட்டாலோ அவர்தம் பாவங்கள் தொலைந்து ஹரியின் பாதகமலங்களை அடைந்துவிடலாம் என்று தேவி பாகவதம் கூறுகிறது. அவ்வளவு ஏன், கங்கையின் ஸ்பரிஸமே கடந்த மற்றும் வருகிற ஏழு தலைமுறைகளை புனிதப்படுத்துமாம். இன்றும் கங்கையை நினைவு கூர்ந்துதான் பல சுப, அசுப காரியங்கள் நடைபெறுகின்றன. கங்கை அனைத்து ரோகங்களையும் களைந்து ஆத்ம சுத்தியையும் அளிக்க வல்லது. தேவமிர்தத்துக்கு இணையான குணநலங்களை தன்னிடத்தே கொண்டுள்ளது. கங்கைக் கரைகளில் பல ராஜ்ஜியங்களும், நாகரீகங்களும் தோன்றி செழித்து வளர்ந்தன. ஒவ்வொரு நாளும் காசி, ஹரித்வார், ரிஷிகேசம் போன்ற ஸ்தலங்களில் மக்கள் கங்கைக்கு ஆரத்தி எடுத்து வழிபடுகின்றனர். புனிதத்தில் துளசிக்கு இணையானவள் என புராணங்கள் இயம்புகின்றன. வேத காலத்திலேயே இவள்மீது ஸ்லோகங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. கங்கையின் மகத்துவத்தை பட்டியலிடுவதைவிட கடல் நீரின் துளிகளை எண்ணிவிடலாம் என்று ஒரு கூற்றும் உண்டு.

க்ருத யுகத்தில் பூமி அனைத்துமே புண்ணிய ஸ்தலங்கள். த்ரேதா யுகத்தில் புஷ்கர், துவாபராத்தில் குருஷேத்திரம், கலியில் கங்கை!

மஹா விஷ்ணு தன் வாமன அவதாரத்தின் போது திருவிக்ரமனாய் சத்ய லோகத்தை அளக்கையில் அவரின் பாதத்திலிருந்து வெளிப்பட்டவளே ஸ்வர்க்க கங்கை என அழைக்கப்பெற்றாள். இவளுக்கு விஷ்ணு பாதோத்பவி, தேவபூதி என்கிற பெயர்களும் உண்டு.

சப்த ரிஷிகளும் இவளிடத்தே தங்கள் அனுஷ்டானங்களை செய்கின்றனர். துருவன் இவளை தன் தலையிலேயே தரிக்கிறான். நம் இதிகாசங்களான ராமாயணம், மஹா பாரதம்; பாகவதம், பகவத் கீதை; அக்னி, பத்ம, பிரம்ம புராணங்கள் இவளின் மகத்துவத்தை பறைசாற்றுகின்றன. வால்மீகி, காளிதாசன், ஆதிசங்கரர் இவளை புகழ்ந்து கவி படைத்திருக்கின்றனர். பத்ரி, கேதாரம், ரிஷிகேசம், ஹரித்துவாரம், காசி, பிரயாகை போன்ற புண்ணியத்தலங்கள் அனைத்தும் இவளது கரையிலேயே அமையப் பெற்றிருக்கின்றன. சீதா தேவி கங்கைக் கரையில் அமைந்திருக்கும் வால்மீகி ஆஸ்ரமத்தில்தான் லவ, குசர்களை பெற்றெடுத்து வளர்த்தாள். பீஷ்மர் மரணத்தை எதிர் நோக்கியிருக்கும் வேளையிலும் தன் தாய் கங்கையின் பெருமைகளை பாண்டவர்களுக்கு எடுத்துரைத்தார்.

கங்கை சதுர்புஜம் உடையவள். ஒரு கையில் நீர் கலசம், மற்றொன்றில் தாமரை, தவிர இரு கைகள் அபய, வரத முத்திரைகள். மகர வாகனத்தில் அமர்ந்திருக்கும் இவள் த்ரிநேத்ரி. சந்திரனை தன் நெற்றியில் தரித்திருக்கிறாள்.

சத்திய லோகத்திலேயே பெரும் புகழ் பெற்றிருந்த இவள் எவ்வாறு பூலோகம் வர சம்மதித்தாள்?

விஸ்வாமித்திரர் ராமனுக்கு கங்காவதாரணா கதையை உபதேசிக்கிறார். இஷ்வாகு வம்சத்தில் வந்தவன் சகரன். ராமனுடைய மூதாதையன். அயோத்தியின் அரசன். இவனுக்கு இரு மனைவிகள். கேசினிக்கு அசமஞ்சன் பிறந்தான். சுமதிக்கு 60,000 ஆண் பிள்ளைகள். சகரன் அஸ்வமேத யாகம் செய்ய முற்பட்டான். அஸ்வத்தை சகல லோகங்களுக்கும் அனுப்பினான். தேவர்களின் அதிபதி இந்திரனுக்கு அச்சம் உண்டாயிற்று, சகரனால் தன் பதவியே பறிபோகும் என்று. அஸ்வத்தை கபிலர் தவமியற்றும் இடத்தில் கட்டினான். தேடி வந்த 60,000 பேரும் கபிலரின் நிஷ்டையை கலைத்தனர். கண்களைத் திறந்தார், சாம்பலாயினர். இவர்களுக்கு சத்கதி அளிக்க சகரன்-அசமஞ்சன்-அன்ஷுமான், திலீபன் வழிவந்த பகீரதன் தவம் மேற்கொண்டான், கங்கையை பூமிக்கு வரவழைத்து அவளிடத்தில் அச்சாம்பலை கரைத்து அவர்களை கரையேற்ற. நான் வருகிறேன், ஆனால் என் வேகத்தை பூமி தாங்காது, சிவனிடத்தில் முறையிடு என்றாள் கங்கா. மறுபடியும் தபஸ். சிவன் மனமிரங்கினார், தன் சடையில் கங்கையின் ஆரவாரத்தை அடக்கி பூமிக்கு தந்தருளினார். கங்காதரன் ஆனார். பகீரதன் பொருட்டு கோமுகத்தில் வெளிப்பட்டு பூமிக்கு வந்ததால் கங்கை பாகீரதி ஆனாள்.

பகீரதனைத் தொடர்ந்து செல்லும் கங்கை வழியில் ஜாஹ்னு முனிவரின் ஆஸ்ரமத்தை மூழ்கடித்தாள். கோபமுற்ற முனிவர் கங்கையை முழுவதுமாக குடித்துவிட்டார். பகீரதன் இறைஞ்சினான். முனி அவளை காது வழியே வெளியே விட்டார். இதன் காரணமாக கங்கை ஜாஹ்னவி என்றும் அழைக்கப்பெற்றாள். பின், பாதாளத்தில் பாய்ந்து கபிலரின் ஆஸ்ரமம் அடைந்து சாம்பல் குவியலை கரைத்து பகீரதனின் மூதாதையர்களுக்கு நற்கதி அளித்தாள்.

ஸ்வர்க்கத்தில் இவள் மந்தாகினி, பூலோகத்தில் கங்கை, பாதாளத்தில் போகவதி. இம்மூவுலகிலும் புகுந்து செல்வதால் த்ரிபாதகா.

இவளே ஸ்கந்தனனின் பிறப்புக்கும் காரணமாகிறாள். பர்வத ராஜனின் இரு புதல்விகள் கங்கை, உமை. தேவர்கள் தங்கள் படைக்கு ஓர் தளபதியை பெற்றுத்தர கங்கையை தங்களுடன் அனுப்புமாறு விண்ணப்பிக்கின்றனர். அவரும் சம்மதிக்கிறார். பின், அக்னி தேவன் தரும் ஈசனின் தேஜஸை சுமந்து வரும் கங்கை அதன் வீர்யம் தாங்காது அதை சரவணப் பொய்கையில் சேர்க்கிறாள். அதில் உருவாகும் நம் தமிழ்க்கடவுள் ஸ்கந்தனை கார்த்திகைப் பெண்கள் வளர்த்து அவன் தேவர்களின் சேனாதிபதியாகி அசுரர்களை வதம் செய்து தேவர்களை காக்கிறான்.

மஹாபாரதத்திற்கும் கங்கைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

அஷ்டவசுக்களில் ஒருவரின் மனைவி வசிஷ்டாசிரமத்தில் உள்ள நந்தினி எனும் காமதேனுப்பசு தனக்கு வேண்டுமென பிடிவாதம் செய்கிறாள். வசுக்கள் நந்தினியைக் கவர வசிஷ்டர் அவர்களை மானுடர்களாக பிறப்பெடுக்க சாபமிடுகிறார். அவர்கள் ஒவ்வொருவராக பூமிக்கு வருகின்றனர். வசுக்கள் கேட்டுக்கொண்டபடியே கங்கை அவர்களுக்கு தாயாக சம்மதிக்கிறாள். தந்தை? சந்தனு மஹாராஜா. ஏன்?



சத்யலோகம். பிரம்மாவின் மஹா சபை. கங்கையும் அங்கிருக்கிறாள். அப்போது பூலோகத்தில் உயிர் துறந்த மன்னன் மஹாபிஷக் அங்கு வருகிறான். கங்கையின் ஆடை சரிகிறது. இதை பிஷக் ரசிக்கிறான். அவளும் அவனை பார்க்கிறாள், இதை பிரம்மாவும் பார்த்து விடுகிறார். பிடி சாபம், மானுடப்பிறவியெடுக்க. பிஷக் ஹஸ்தினாபுர மன்னன் சந்தனுவாகிறான். அவர்களுக்குப் பிறக்கும் அஷ்ட வசுக்களில் முதல் எழுவரை முன்னரே இட்ட நிபந்தனையின் படி நதியில் வீசிக்கொன்று விடுகிறாள் கங்கை. எட்டாவது குழந்தையை கொல்ல முற்படும் போது சந்தனு தடுக்கிறான். அவள் அவனை விலகுகிறாள். வசிஷ்டாசிரமம் சென்று குழந்தையை வளர்க்கிறாள். தேவவ்ரதன் எனும் பெயரிடப்படும் கங்கை மைந்தன் காங்கேயன் பதினாறு வருடங்கள் கழித்து தன் தந்தையை அடைந்து பின்னாளில் பிஷ்ம என்று போற்றப்படுகிறார். இதுவே மஹாபாரதத்தின் தொடக்கப்புள்ளி.

அத்ரி மஹரிஷியின் பத்தினி அனுசூயையின் பதி சேவையின் புண்ணிய பலனில் சிறு பங்கு பெற்ற கங்கை அதைக்கொண்டு வறண்ட பிரதேசத்தை செழிப்பாக்கிய கதை சிவபுராணத்தில் காணப்படுகிறது.

கங்கா லஹரி இயற்றிய ஜகன்னாத பண்டிதர் தான் விரும்பிய பெண்ணை மணம் செய்து கொண்டதை விரும்பாத சமூகம் அவரை தள்ளி வைத்தது. இதனால் மனம் வெதும்பிய பண்டிதர் கங்கைக்கரையில் தன் மனைவியுடன் அமர்ந்து ஸ்லோகங்கள் இயற்றினார். ஐம்பத்திரண்டாவது ஸ்லோகத்தை பாடியதும் ஒவ்வொரு படியாக ஏறிவந்த கங்கை அவர்களைத் தொட்டு ஆசிர்வதித்தாள். இந்த அதிசயத்தை கண்ட ஊர் மக்கள் அவர்களை வணங்கி ஏற்றுக்கொண்டனர்.

இப்பூவுலகில் கங்கோத்ரி பனிப்பாறை கோமுகத்தில் முதல் தரிசனம் தரும் அலக்நந்தா எனும் கங்கை, ஈசன் சடையில் தாங்கி அவளின் வேகத்தை மந்தப் படுத்தியதனால் மந்தாகினி, பகீரதன் முயற்சியால் பூலோகம் வந்ததால் பாகீரதி, ஜாஹ்னு முனிவர் குடித்து காது வழி வெளிவிட்டதனால் ஜாஹ்னவி, தென் கிழக்காகவே ஓடிக் கொண்டிருப்பவள் காசியை தரிசிக்கும் ஆசையில் வடக்கு நோக்கி திரும்புவதால் உத்தர வாஹினி, தன் இஷ்டப்படி பாய்ந்து செல்வதால் ஸ்வச்சந்தபாதகா, மூவுலகிலும் புகுந்து புறப்படுவதால் த்ரிபாதகா - என்று பல் வேறு நாமங்களைப் பெற்று பல நகரங்களை உருவாக்கி, பல புண்ணிய நதிகளை தன்னோடு இணைத்துக் கொண்டு - ரிஷிகேசம் வருமுன் பல பிரயாகைகளை (தெளலி கங்கா, அலக்நந்தா - விஷ்ணு பிரயாகை; நந்தாகினி, அலக்நந்தா - நந்த; பிண்டார், அலக்நந்தா- கர்ண; மந்தாகினி,அலக்நந்தா - ருத்ர; பாகீரதி, அலக்நந்தா - தேவ) கண்டு ஹரித்வார் வழியே கான்பூரை அடைந்து, பிரயாகை என்று இப்போது அழைக்கப்படும் இடத்தில் யமுனை, சரஸ்வதியோடு திரிவேணியாய் சங்கமித்து, சற்றே வட திசையில் பயணித்து வாராணசியை (தென் கிழக்கில் அசி, வட கிழக்கில் வருணா, ஆகவே வாராணசி, இடையே பிறை சந்திர வடிவில் அறுபத்திநாலு ஸ்நான கட்டங்கள், வருணையும், அசியும் சதி தேவியின் ஸ்தனங்கள் விழுந்த இடங்கள். அவற்றிலிருந்து பெருகியே பாலே நதிகளாக பெருக்கெடுத்தது) சுற்றிச் சென்று புனிதப்படுத்தி, தானும் புனிதமடைந்து, பின் பாடலிபுத்திரம் அருகே மேலே கோமதி, கோக்ரா, கண்டகி, கீழே சோன் நதிகளை தன்னோடு சேர்த்துக் கொண்டு, அதற்கு அப்பால் நேபாளத்திலிருந்து வரும் சப்த கோசியுடன் கலந்து பின் கைலாயத்தில் தோற்றம் காணும் பிரம்மாண்ட பிரம்மபுத்ரா (அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, அஸ்ஸாம், மேகாலயா, வங்கம் வழி) நதியுடன் பிணைந்து மேக்னா என பெயர் கொண்டு, கடைசியில் கங்கா சாகர் எனுமிடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறாள் கங்கை.

சுமார் நாலாயிரம் மீட்டர் உயரத்திலிருந்து புறப்பட்டு இரண்டாயிரத்து எழுநூறு கிலோ மீட்டர் ஓடி பத்து லக்ஷம் சதுர கிலோ மீட்டர் நிலங்களை வளப்படுத்தும் தன்னலமில்லா கங்கையை தாயெனக் கருதி போற்றி வணங்குவது நம் கடமை. நம் பெருமை.

இத்தகைய புண்ணிய பூமியான பாரதத்தில் பிறந்தது நம் பாக்கியமே. கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா, நர்மதை, துங்கை, கோதாவரி, வைகை, காவிரி, ஏனைய புனித நதிகளை கொண்டாடுவோம், நேசிப்போம், துதிப்போம், ஒன்றுபடுவோம். உயர்வடைவோம். வாழ்க பாரதம், வளர்க அதன் கலை, கலாச்சாரங்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com