நா என்ன சொல்றேன்னா...!

நா என்ன சொல்றேன்னா...!

“ஏன் என் வீட்டில் நான் சொல்வதை யாருமே கேட்க மாட்டேனென்கிறார்கள்? அவர்களுக்கு நல்லதுதானே சொல்றேன்?”

சேகர் , இப்படிக் கேட்பது இதுதான் முதல் முறை. சற்றே வியந்தாலும் , அமைதியாக அவரைப் பேச விட்டேன்.

“ என் பையன் ம்யூஸிக் கத்துகறான். அவன் வரும்போது, இசை பத்தித்தான் சொல்றேன். அப்போ அவன் அதைக் கேட்பதே இல்லை. நான் இல்லாத போது அம்மாவிடம் “ அப்பாவுக்கு ம்யூஸிக் பத்தி நல்லாத் தெரிஞ்சிருக்குமா” என்று சொல்லியிருக்கான். இதே மாதிரிதான் பொண்ணு… அவளுக்குப் பிடிச்ச மாதிரிதான் பேசறேன். அப்போ கேக்கறதில்லை.”

“உங்க மனைவி?” “ பேசும்போதே இடையில வெட்டிறுவா. ‘கொஞ்சம் இருங்க. அவ பேசட்டும், அவன் பேசட்டும்’-னு பேசவே விடமாட்டா. எனக்கு ஆர்வம் குறைஞ்சு , பேசறத நிறுத்திறுவேன். இப்பவே இப்படின்னா, வயசானப்புறம்..”

சேகர் ஒரு விசேஷ கேஸ் இல்லை. ஒரு வகையில், நாம் அனைவருமே இந்த குறுக்கான உரையாடல்களில் வெட்டுப் பட்டிருக்கிறோம், எரிச்சல் பட்டிருப்போம்.

இது நமது கலாச்சாரம் சார்ந்தது மட்டுமல்ல. உலகளவில், உரையாடல்களில் பெரும் தலைவலியாக இருப்பது, தனது கருத்தை வலிந்து முன்வைத்தல், உரையாடல் நேரத்தை ஒருவர் ஆக்கிரமித்தல் என்ற இடர்கள். பல கம்பெனிகள் , பல மில்லியன் டாலர்களைச் செலவழித்து, குழும ஆலோசனையில் மேம்படுவது எப்படி? என்பதைத் தன் அதிகாரிகளுக்குச் சொல்லிக் கொடுக்க முயற்சிக்கின்றன. பல கூட்டங்கள் பயனற்றுப் போவதற்கு , ஒருவர் அல்லது இருவர், கூட்ட நேரத்தைத் தங்கள் கருத்தைச் சொல்லுவதற்கென வலிந்து எடுத்துக் கொள்வதே காரணம் எனப் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது தீவிரமாகும்போது கவன ஈர்ப்பு ( attention seeking ) என வகைப்படுத்தப்படுகிறது.

இவ்வாறு உரையாடலில் தானே மணிக்கணக்கில் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பதை ‘உரையாடலில் தன் வியத்தல்’ ( Conversational narcissism) என்பார்கள். ஒரு உரையாடலில் பிறர் பேசுவதைக் கேட்காமல், தான் சொல்வதையே சொல்லிக்கொண்டிருப்பதற்கு dysaudism என்று பெயர். காது கேட்கும் திறனுக்கும், கேட்டதை உணரும் திறனுக்கும் வித்தியாசம் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். கேட்கும் ஒலியின் பொருளையெல்லாம் நம் மூளை கிரகித்து உணர்வில் கொண்டு வருவதில்லை. இதுவும் நாம் அறிந்ததுதான்.

பன்னாட்டு ஆலோசக நிறுவனங்கள்( கன்ஸல்ட்டிங்க் கம்பெனிகள்) , பொறுப்பு வாய்ந்த பெரிய ஆளுமைப் பதவிகளுக்கு ஆள் எடுக்கையில், இந்த பேச்சு, கேட்டல் என்பதைப் பற்றி அதிகம் கவனம் செலுத்துகின்றன. ஒரு அமெரிக்க கன்ஸல்ட்டிங்க் கம்பெனியில் “ கேட்டல் 70%, பேசுதல் 30% இருந்தால் எங்களுக்குப் பொருத்தமானது” என்கிறார்கள். அந்த அளவு கேட்டல் , பேச்சைவிட முக்கியமானது. இந்த விகிதம் தலைகீழாக , தனி நபர் வாழ்வில் நீள்வதால்தான், சொந்தங்களிடேயும், நண்பர்களிடமும் உரையாடல்கள் உடைபடுகின்றன.

“பேச்சில் என்ன கேடு வந்துவிடப்போகிறது? எனக்குச் சில விசயங்கள் தெரியும், அதனைப் பலரும் அறியய்ப் பகர்கிறேன். சில நேரம் அதனை விளக்க உதாரணங்கள் காட்டுகிறேன். இது நேரம் எடுக்கத்தான் செய்யும். ஆனால் என்ன? அவர்களுக்கு நல்லதுதானே செய்கிறேன்? கேட்க வேண்டியதுதானே?” என்பது உரையாடுபவரின் வாதம் .

மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், இது சரியாகவே படும். நாம் பேசிவந்த பொருளுக்குத் தொடர்புடையதைத்தான் சொல்கிறார். அதை ஏன் நம்மால், பிறரால் உணரவோ, அறியவோ முடிவதில்லை.?

உதாரணமாக இந்த சம்பவத்தைப் பார்ப்போம்.

‘ இன்று ராத்திரி என்ன டிபன்?’ என்று ஒரு கேள்வி வீட்டில் வருகிறது.

நீங்கள்,” எண்ணெய் அதிகம் உள்ளது வேண்டாம்; அசிடிட்டி படுத்தும். எனவே லைட்டாக..”என்று சொல்ல நினைக்கிறீர்கள்.

உங்கள் மகள் : “ அம்மா, உப்புமா வேண்டாம்.” என்கிறாள்.

அவள் மேற்கொண்டு சொல்லுமுன் நீங்கள் இடை மறித்து “ இல்ல, எண்ணெய் வேணாம்”

மகன் ,”அம்மா, போன வாரம் பண்ணினீங்களே, அந்த இடியாப்பம்”

அவன் முடிக்குமுன் நீங்கள் “ இல்ல, நான் என்ன சொல்றேன்னா, எண்ணெய்…”

உங்கள் மனைவி “ அவங்களைச் சொல்ல விடுங்களேன். நீ சொல்லுமா. உப்புமா வேணாம். சரி, இடியாப்பமா? பாக்கெட் ரெண்டு இருக்கா பாரு”

நீங்கள் : “இதைத்தானே நானும் சொல்ல வந்தேன்? எண்ணெய் வேணாம். கூழ் மாதிரி…”

மனைவி : மத்தவங்களையும் பேச விடறீங்களா? அதுங்களுக்கும் ஆசை இருக்கும்ல, என்ன வேணும்னு சொல்லறதுக்கு?

மேலே பார்த்த கற்பனை சம்பவத்தின் இறுதிக் கணத்தில், உங்கள் மனம் சுண்டிப் போகிறது. ‘எனது சிந்தனை சரியானது. தீர்வும் சரியானது.பிறர் சொல்வதும் அதுதான். ஆனால், நான் சொல்வதை ஏற்பதில்லை’ என்ற எண்ணம் உங்களில் எழுகிறது..

இந்த அனுபவம் தற்காலிகமானது. இது பற்றி அதிகம் பேசாதவரை, பிறரிடம், அந்த நிகழ்வு பற்றிச் சொல்லாத வரை, விரைவில் மறந்தும் போவீர்கள்.

இதே நிகழ்வு , சற்றே சீரியஸான ஒரு விஷயம் என்றால், அந்த நினைவு பல நாட்கள் நிற்கும். அது சிந்தனையில், நினைவில் நிற்பதில்தான் ப்ரச்சனை.

சற்றே ஆழமாகப் பார்த்தால், உரையாடல் என்பது, அகவயமான சிந்தனை என்பதன் உரத்த வடிவம். ஒரு பொருளைச் சிந்திக்க, நமக்கு சொற்கள் தேவை. அவை கிடைத்ததும், தருக்கத்துடன் இணைந்து, சிந்தனை என்பது உணர்வாக, தற்காலிகமாகப் பதிகிறது. எந்த அளவில் அது தற்காலிகமாக இருக்கும் என்பது, அந்த சிந்தனை குறித்தான அக, புற வய அனுபவங்கள் எந்த அளவு நீண்டதாக இருக்குமோ? அதனைப் பொறுத்தது.

எனவே, “ நாற்பது வருசம் முந்தி, நான் சொல்லச் சொல்லக் கேட்காம… “ என்று சொல்பவர்கள் நம்மில் உண்டு. அந்த அனுபவம், சிந்தனையில் தங்கி, தேங்கி நிற்கிறது. இவர்களுக்கு இரு நாள் முந்தி, வேறொரு காரணத்தில் திட்டு கிடைத்திருந்தாலும் அது சிந்தனையில் நிற்காது செலவாயிருக்கும். இந்த நினவு மீட்டல், மறத்தல் என்பதில் அடிபடுவது நமது மன நிலை ( mood).

உரையாடலில் ஒருவர் தன் கருத்தைச் சொல்லுமுன் இரு திறமைகள் அவருள் இயங்குகின்றன.

ஒன்று. சிந்தனை உருவாக்கும் திறமை – அவரது முன் அனுபவம் , முன் முடிபு சார்ந்த தருக்க வெளிப்பாடு, சொற்களைக் கட்டும் திறமை என்பதன் கூட்டாக அது அமையும்.

இரண்டு : வெளியிடக் காட்சிகள் தரும் குறிகள் கொண்டு அவர் சிந்தனையின் சொல்வடிவை மாற்றும் திறமை. இதில் ஒன்று பிழையானாலும், உரையாடல் அறுந்து போகும்.

முதல் திறத்திற் பிழைக்கான உதாரணம் : சரியான சொல் கிடைக்காமல் ஒருவர் “ அவன் பெரிய… அம்.. வந்து, இவன்… என்ன சொல்லறது, ஆங்! திறமை சாலி!” என்றால், நாம் இரு நொடிகளில் சுவாரஸ்யம் இழப்போம். இது சொல் கிடைக்காத பிழை.

“அமெரிக்கா விசாவா? ஐஞ்சு நாள்ல இப்பல்லாம் தரானாம்” என்பவர் அந்தச் செய்தி படித்தோ, அல்லது பிறர் சொல்லக் கேட்டோ மூன்று வருடம் ஆகியிருக்கும். இது தவறான முன் அனுபவம்/ முன் முடிபு கொண்டு வந்த பிழை

இரண்டாம் திறத்திற் பிழைக்கான உதாரணம். : ஒருவர் தனது கலாச்சார, மதக் கொள்கை காரணமாக விலக்கும் ஒன்றை, அவர் அருகே இருப்பதை உணராது கிண்டலாகப் பேசுவது. ஒருவர் அறிந்த ஒன்றை, அவர் அறிந்திருப்பதை அறிந்த பின்னும் மீண்டும் மீண்டும் அவர் முன்னே முதலிலிருந்து சொல்வது.

இக்காரணிகளும், அவற்றின் தாக்கத்தின் தீவிரமும் வேறுபடலாம். ஆனால் அடிப்படையில் இந்தப்பிழைகள் உரையாடலின் சுவையை மழுங்க அடிக்கின்றன.

இப்போது நம்ம விசயத்துக்கு வருவோம். “ மற்றவர்களுக்கும் இதுபோல் இரு திறமைகள் சேர்ந்து அவர்களது சொற்களைத் தீர்மானிக்கின்றன என்பதை அறியாது நீங்கள் இயங்குவதால்” உரையாடலில் உங்கள் குரல் எடுபடாது போகிறது.

இதனாலேயே, ‘பேசுவதிலும் கேட்டல் நன்று’ என்கிறார்கள். பிறர் சொல்வதைக் கேட்கையில், நமது இரண்டாவது திறன் விழித்துக் கொள்கிறது. ‘ஓ! இவருக்கு இந்த வகையான எண்ண ஓட்டம் இருக்கிறது. எனவே, நமது சொற்களை மாற்ற வேண்டும்’ என்ற இயக்கப்பொறி ( trigger) கிடைக்கிறது. எனவே நமது எண்ணம் ஒன்றாக இருப்பினும், வெளிப்படும் விதம், வெளிப்படுத்தும் சொற்கள் வேறாக இருக்கின்றன -சூழ்நிலைக்குத் தக்கதாக. அந்த உரையாடல் மோசமாகாமல், இடையாடல் (transaction ) பாதிக்கப்படாதவாறு நீள்கிறது.

‘சரி, இதெல்லாம் ஏட்டுச் சுரைக்காய்’ என்கிறீர்கள். கூட்டு செய்யலாம், சுவைக்கலாம்.

நான்கு செயற்படி முறைகளை உரையாடல், இடையாடல்கள் வல்லுநர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

1. பேசுவதற்கு ஒரு உந்தம் வரும்போது, அதைத்தவிர்க்க சிறு உத்திகளைக் கையாளுங்கள். பேப்பர், பேனா இருந்தால், எதாவது வரையுங்கள், எழுதுங்கள், அல்லது சும்மா கிறுக்குங்கள். இல்லாவிட்டால், சும்மா காலால் தரையைத் தட்டி எத்தனைமுறை தட்டுகிறீர்கள் என்பதை எண்ண கவனம் செலுத்துங்கள். பத்து எண்ணுமுன், அந்த உந்தம் அடிபட்டுப் போகும். அவசரக்குடுக்கையாகப் பேசும் சிலருக்கு நூறு வரை போகும்.

2. பிறர் பேசும்போது, அவர் பேசும் சொல்லைக் கவனியுங்கள். பொருளை விடுங்கள். சொல் என்பது, அவரது குரல், அதன் ஏற்ற இறக்கம், அதன் உச்சரிப்பு, ஒலியளவு சேர்ந்தது. ‘இவர் குரல் இப்போது உயர்கிறது, ழ வுக்குப் பதில் ல சொல்கிறார்” என்ற அளவுக்குக் கவனியுங்கள். பொருளை உங்கள் மூளை எப்போதோ உள்வாங்கியிருக்கும் – தவறாகவோ, சரியாகவோ.

3. அந்தப் பொருள் விளங்கிக்கொள்ள சற்றே நிதானியுங்கள். நேரம் இல்லையென்றால், இந்த முறை அவரிடம் “ சாரி, விளங்கலை, இன்னொரு முறை சொல்லுங்க” என்று சொல்லலாம். இதில் அவரது சொற்கள் மாறும், உங்களது புரிதலும் மாறும்.

4. இந்த இடைவெளி கொடுப்பதற்கு, பேசாது இருக்கும் மற்றொருவரிடம் பேசத் தூண்டுங்கள். நமது உதாரண உரையாடலில் நீங்களே மகனிடம் “ டேய், உங்கிட்ட கேக்கலை பாரு. நீ சொல்லு, ராத்திரிக்கு டிபன் என்ன வேணும்?” என்று வாலண்டியராக வண்டியில் ஏறுங்கள் ,ஏற்றுங்கள்.

இந்த நாலும், ஒன்றன் பின் ஒன்றாக ஒரு சடங்கு போலச் செய்ய வேண்டாம். எது எந்த நேரத்தில் வேண்டுமோ, அதனை செய்ய முற்படுங்கள்.

இறுதியாக, உங்கள் கருத்தைச் சொல்லியே ஆகவேண்டும் என்ற உந்தம் பெருமளவு எழும்போது, மூச்சை இழுத்து அடக்கி, நிதானமாக வெளியிட்டு அந்த மூச்சு இழுத்தல், அடக்குதல், வெளியிடல் என்ற நிகழ்வில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உந்தம் சில நொடிகளில் அடங்கும். அனுதினமும், பிராணாயாமப் பயிற்சி செய்தல், பெருமளவுக்கு இதில் பயன் கொடுக்கும்.

இந்த சிந்தனைக் கோண மாற்றத்தாலும், சிறு செயலாக்கத்தாலும் நேர் நிலை மாற்றம் நிச்சயம். வெட்டிப் பேச்சாளர் என்ற நிலையிலிருந்து, ஒரு இசை நிகழ்ச்சி நடத்துனர் ( orchestra conductor) என்ற நிலையை நீங்கள் எய்தும் போது, உரையாடல்கள் இனிய இசையாக மாறுவதோடு, உங்கள் மதிப்பும் பெருமளவு உயரும்.

உங்கள் சொற்கள் கண்டிப்பாகக் கவனிக்கப்படும் – மதிப்போடு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com