நிமித்த மாத்ரம் பவ

நிமித்த மாத்ரம் பவ

ரங்கன் அப்பாவையே வியப்போடு பார்த்துக்கொண்டிருந்தான்.

வேணு மாமாவின் முன்பு அப்பா கைகட்டி பவ்யமாக நின்றிருந்தார்.

வேணு மாமா அப்பாவின் சிறு வயது தோழர். அப்பாவைவிட இரண்டு வயது மூத்தவர். இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். ஆனால் அப்பா வேணு மாமாவிடம் காட்டும் பவ்யம் கலந்த நட்புதான் அவனுக்கு வியப்பை அளித்தது.

சிறு வயதிலிருந்து பழகிவரும் நண்பர்கள் பலரும் தோளில் கைபோட்டு பேசுவார்கள். ஆனால் அப்பாவும் வேணு மாமாவும் தோளில் கைபோட்டு பேசிப் பார்த்ததில்லை. குருசிஷ்ய பாவம்தான் எப்போதும். அப்பா எப்போதும் அவர் முன்னால் கைகட்டி பவ்யமாகத்தான் பேசுவார். சின்ன வயது சம்பவங்களை இருவரும் சகஜமாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். வேணுமாமாவிடம் சொல்லாமல், அவரது அனுமதியின்றி அப்பா எந்தவொரு காரியமும் செய்ததில்லை. அவர் ஓகே என்றால்தான் செயல்படுத்துவார். வேண்டாம் என்றால் எந்த எதிர்கேள்வியுமின்றி சரி அப்படியே ஆகட்டும் என்பார்.

அப்பாவும் அம்மாவும் பிதுர்க்காரியங்கள் செய்து முடிப்பதற்காக,காசிக்குச் செல்வதற்கு நான்கு மாதம் முன்பே வேணு மாமாவிடம் கூறி, அவரும் போய்ட்டு வா என்று சொல்ல, புறப்பட வேண்டிய நாளை முடிவுசெய்து, ரயிலில் முன்பதிவு செய்திருந்தார் அப்பா.

போய்ட்டு வாயேன் என்று சொன்ன அதே வேணு மாமாதான் இப்போது, “ரங்கா நான் சொன்னது நினைவிருக்கா? உன்னோட காசி டிரிப்பை கேன்சல் பண்ணிடு. அப்பறம் பார்த்துக் கொள்ளலாம்.” என்கிறார்,

“சரி வேணு. அப்டியே செய்யறேன்” அப்பாவும் எந்தக் கேள்வியும். மறுப்புமின்றி பதில் சொல்ல, ரங்கன் திகைத்தான்.

வேணு மாமாவின் மீது கோபம் வந்தது. அப்பா எத்தனை ஆசை ஆசையாக இதற்கு வேண்டிய ஒவ்வொன்றையும் செய்து கொண்டிருக்கிறார் என்பது அவனுக்குத் தெரியும். எதற்காக இப்போது போகவேண்டாம் என்பதற்கு வேணு மாமா காரணமும் கூறவில்லை. அப்பாவும் கேட்கவில்லை.

வேணு மாமா கிளம்பிச் சென்றபிறகு ரங்கன் அப்பாவிடம் வந்தான்.

“ஏம்ப்பா பத்து நாளில் நீ காசிக்கு போக எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு. திடீர்னு இப்போ வந்து போகவேண்டாம் என்கிறாரே வேணு மாமா! ஏன்

எதுக்குன்னு கேட்கமாட்டயா? அவர் எது சொன்னாலும் சரி சரின்னு தலையாட்டிடுவயா? அவர் உனக்கு ஃபிரண்டுதானே, முதலாளியில்லயே?

அப்பா சிரித்தார். ரங்கனுக்கு எரிச்சல் வந்தது.

“சிரிக்காதப்பா வேணு மாமா உன் பால்ய சினேகிதர்தானே ஏன் காரணம் கேட்க பயப்படற? எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சுன்னு சொல்ல வேண்டியதுதானே? எவ்ளோ ஆசைப்பட்ட காசிக்கு போய் உங்கம்மா அப்பாக்கு பித்ரு காரியம் பண்ணணும்னு!”

“இது பயமில்லாடா ரங்கா. மரியாதை. சின்ன வயசுலேர்ந்தே நா மரியாதையோட பழகிற நண்பன் வேணு”.

“அதுக்காக? அவர் சொல்ற பேச்சுக்கெல்லாம் பூம்பூம் மாடாட்டம் தலையாட்டணுமா? நான்லாம் என் பிரண்ட்ஸ் தோள்மேல கை போட்டுக்கொண்டு பேசுவேன். நண்பன்தான் என்றாலும் எல்லாத்துக்கும் தலையாட்ட மாட்டேன். உன்னாட்டம் நண்பனிடம் கைக்கட்டி நின்னு பேசி என்னையே நான் மட்டம் தட்டிக்க மாட்டேன்”.

அப்பா பதில் சொல்லவில்லை. இருபது வயது பிள்ளையின் துடிப்பான இரத்தம் இப்படி பேசுகிறது.

இரண்டு வாரங்கள் நகரந்திருக்கும்.

“ரங்கா டிவி போடு. பிரதமர் பேசறாராம். ஏதாவது முக்கிய விஷயமா இருக்கப்போறது” அம்மா அடுக்களையிலிருந்து குரல் கொடுத்தாள்.

ரங்கன் ரிமோட்டைத் தேடியெடுத்து டிவியை இயக்கினான்.

தொலைக்காட்சியில் பிரதமர் உரையாற்றிக் கொண்டிருந்தார். நாடு முழுவதும் முழு ஊரடங்கை அறிவித்தார். ரங்கன் திகைத்தான். ஒருநாள் ஊரடங்குடன் வைரஸ் ஓடிவிடும் என்று நினைத்தது போய். இப்படி ஊரடங்கு தொடருமென்று அவன் நினைக்கவில்லை. கல்லூரியில் பரீட்சைகள் தேதி சொல்லாமல் ஒத்திவைக்கப்பட்டன. ரங்கன் பொறியியல் படிப்பு முடித்து பெங்களூரில் வேலையில் சேர்ந்து ஏழெட்டு மாதமே ஆகிறது. வார இறுதி என்பதால் ஊருக்கு வந்திருந்தான். இப்போது பெங்களூருக்கு எப்படி கிளம்பிச் செல்வது? கவலைப்பட்டான், ஆபீசுக்கு போன் செய்து பேச, மென் பொருளாளர்கள் வீட்டிலிருந்தே பணி செய்யலாம் என்றார்கள். பெரிய நிம்மதி. அதைவிட நிம்மதி, அப்பா ஏழெட்டு மாதம் முன்பு பணி ஓய்வு பெற்றது. அதனால்தான் அவர் காசிக்குப்போக திட்டமிட்டிருந்தார். அதற்கும் தடையிட்டுவிட்டார் வேணு மாமா. இப்படி யோசிக்கும்போதே சட்டென ஒருநிமிடம் ஜெர்க் ஆனான். ஒருவேளை அப்பா மட்டும் குறித்த தேதியில் வாராணாசிக்குக் கிளம்பிச் சென்றிருந்தால்? ஊர் தெரியாத ஊரில் மாட்டிக்கொண்டு....எத்தனை அவதிகள் பட்டிருப்பாரோ? நினைக்கவே அச்சமாக இருந்தது. அவன் அப்பாவைத் திரும்பிப் பார்த்தான்.

“ஒருவேளை நீ கிளம்பிப் போயிருந்தால் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பாய் இல்லையா அப்பா?”

அப்பா புன்னகைத்தார். அந்த புன்னகையில் ஆயிரம் அர்த்தங்களிருந்தன.

இரவு உணவு நேரத்தின்போது தொலைக்காட்சி சேனல் ஒன்றில் மகாபாரதத் தொடர் ஓடிக்கொண்டிருந்தது. குருஷேத்திர பூமியில் கௌரவப்படையும், பாண்டவர் படையும் நேருக்குநேர் அணிவகுத்து நின்றிருக்க, அர்ஜுனனின் முகத்தில் குழப்பம். கிருஷ்ணனின் கீதோபதேசம் தொடர்கிறது.

“ஒரு சந்தேகம்ப்பா” என்றான் ரங்கன்.

“கேளு”.

“கிருஷ்ணனும் அர்ஜுனனும் நல்ல நண்பர்கள் .என்றாலும் கிருஷ்ணன் கடவுள் அல்லவா? கடவுளுடன் நட்பு கொள்ள முடியுமா?”

“ஏன் முடியாது? பக்தி என்பது அவரவர் மனோபாவத்திற்கு ஏற்றதாகவே அமைகிறது. இறைவன் மீது ஒன்பது விதமான பக்தி கொள்ளலாம்.

முதலாவது ச்ரவணம். பகவானுடைய நாமங்களையும், அவனுடைய கல்யாண குணங்களையும் கேட்பதுதான் சிரவணம். இதுக்கு உதாரணமா பரீட்சத்தை சொல்லலாம்.

பகவானின் பெருமைகளைப் பாடுவது கீர்த்தனா பக்தி. இதற்கு நாரதர், சுகப்ரம்ம மகரிஷி, இருவரையும் உதாரணமாகச் சொல்லலாம். வால்மீகியின் பக்திதான் இராமாயண காவியமாயிற்று.

ஸ்மரண பக்தியென்பது எப்பொழுதும் பகவானை நினைத்துக்கொண்டிருப்பது. பிரஹலாதன், துருவன், இருவரும் இத்தகைய பக்திமான்களே. எந்நேரமும் அவனையே எண்ணிக் கொண்டிருக்கும் கோபிகைகளையும் மறந்துவிடமுடியாது.

பாத சேவனம் என்பது ஒருவித பக்தி. பகவானின் திருவடிகளுக்கு சேவை செய்து வணங்குவது. இராமனின் பாதுகையை இராமனாவே நினைத்து, சிம்மாசனத்தில் வைத்து வணங்கி தன் கடமைகளைச் செய்தவன்தானே பரதன்.

அடுத்து வந்தனம்! பகவானை விழுந்து வணங்கி, போற்றுவது. அக்ரூரரைப் பற்றி தெரியுமா உனக்கு? கிருஷ்ணனின் சிற்றப்பன் கம்ஸனின் உத்தரவின் பெயரில், கோகுலத்திலிருந்து கிருஷ்ணனை அழைத்துச் செல்ல வருகிறார். கிருஷ்ணனை அதுவரை கண்டிராவிடினும் அவன் யாரென்றறிவார் அகரூரர். அவன் மீது மிகுந்த பக்தி கொண்டவர் அவர். பயணத்தின் நடுவே தேரை யமுனையின் கரையில் நிறுத்தி, மதிய பூஜையை முடிக்க, நதி நீரைக் இரு கையிலும் அள்ளியெடுக்கிறார், உள்ளங்கை நீரில், தேரில் அமர்ந்து கிருஷ்ணரும் பலராமரும் பேசுவது போன்ற காட்சி தெரிகிறது. அக்ரூரர் வியப்போடு நதிநீரைப் பார்க்க, நதி முழுக்க கிருஷ்ண பலராமரின் உருவங்களே தெரிய, அக்ரூரர் பக்தி மேலிட நீரில் விழுந்து வணங்குகிறார். அதேபோல விபீஷணனின் பக்தியும் இத்தகையதுதான். எதிரியின் தம்பியாக இருந்தாலும் இராமனை வந்தனம் செய்பவன்.

பகவானுக்கு மலர்களையும், கனிகளையும் கொடுத்து மகிழ்வது அர்ச்சனா பக்தி. ப்ருது மகராஜ் மற்றும் சபரிதான் இதுக்கு உதாரணம். ப்ருதுவின் அர்ச்சனா பக்தியின் காரணமாகத்தான் இந்த பூமியே ப்ருத்வி என்றாயிற்று.

தாஸ்ய பக்தியென்பது பகவானின் வேலைக்காரனாக நடந்து கொள்வது. இராமனுக்கு சேவை செய்வதையே குறிக்கோளாகக் கொண்ட அனுமனும் லக்ஷ்மணனும் தாஸ்ய பக்தர்களே. .

அடுத்தது ஸக்யம். பகவானிடம் நட்பு கொள்வது. நீ கேட்டாயே கடவுளிடம் நட்பு கொள்ள முடியுமான்னு. அப்டி நட்பு கொண்டவா நிறைய பேர் இருக்கா. இராமாயணத்தில் சுக்ரீவன், மகாபாரதத்தில் அர்ஜுனன். சுந்தரமூர்த்தி நாயனாருக்கும் சிவனுக்கும் இடையிலிருக்கும் நட்பை பெரியபுராணம் சொல்றது.

பகவானுக்காகத் தன் உயிரையே தியாகம் செய்வது ஆத்ம நிவேதனம். சீதையை மீட்கும் போராட்டத்தில் தன் உயிரையே கொடுத்தவர் ஜடாயு. கோபிகைகளின் பக்தியும் இத்தகையதுதான்.

இதைத்தவிர பகவானைக் காதலனா நினைத்து பிரேம பக்தி கொண்டு அவனை அடைந்த ஆண்டாள் மீரா போன்றவர்களும் உண்டு.” அப்பா சற்றே நிறுத்த, ரங்கன் அவரையே பார்த்தான்.

“சரிப்பா. ஆனா இத்தனை விதமான பக்தி இருக்கும்போது எதுக்கு கடவுளிடம் ஸக்ய பக்தி? அதுல என்ன சௌகரியம் கிடைத்துவிடும்? பகவானோட நட்பு கொள்ளும் ஒருவாரால் அவரது தோள் மீது கை போட்டுக்கொண்டு பேசமுடியுமா?

அப்பா சிரித்தார். “தோள் மீது கை போடுவது மட்டும்தான் நட்பு என நினைக்கிறாயா நீ?”

“பின்னே?”

“உனக்கொரு கஷ்டம் வந்தா அதை உன் டீச்சரிடம் சொல்வாயா? நண்பனிடம் சொல்வாயா?”

“டீச்சரிடமா? சரிதான். டீச்சர்கிட்ட எப்படி எல்லாத்தையும் சொல்லமுடியும்?”

“புரிஞ்சுதா? டீச்சர் என்கிறவார் குரு ஸ்தானம். குருவிடம் மரியாதையுடன் பழகத்தான் முடியும். ஆனா நம் ஆத்ம நண்பன் எனில் மனம்விட்டு நம் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். அப்படித்தான் இராமாயணத்தில் சுக்ரீவனும், மகாபாரதத்தில் அர்ஜுனனும் பகவானைத் தன் நண்பனாக நினைத்து தன் கஷ்டங்களைக்கூறி, அதிலிருந்து மீள்வதற்கு அவன் தனக்கு உதவ வேண்டுமென்று கேட்கிறார்கள்.

அதேநேரம் அவன் தெய்வம் என்பதையும் அவர்கள் மறந்துவிடவில்லை. அதனால்தான் நண்பனாகக் கொண்டவனிடம் பணிவும் பக்தியும் கொண்டார்கள். ஸக்ய பக்தி அவர்களுக்கு ஏற்புடையதாக இருந்தது. அந்த சிநேகிதத்தை இராமனும் கிருஷ்ணனும் ஏற்றுக்கொண்டார்கள். சுக்ரீவனின் கஷ்டத்திலிருந்து அவனை விடுவித்தான் இராமன். பதிலுக்கு சீதையைக் கண்டறிய தனக்கு உதவவேண்டும் என்று சுக்ரீவனிடம் இராமன் கேட்டதும்கூட நட்பினால்தான். நண்பர்களாக இருந்ததால்தான் இருவரும் பரஸ்பரம் உதவிக்கொள்ள முடிந்தது. நண்பனாக பாவித்ததால்தான் அர்ஜுனனால் கிருஷ்ணனிடம் தனக்கு சுபத்திரை மீதுள்ள காதல் உட்பட அனைத்தையும் ஒளிவு மறைவின்றி பகிர்ந்துகொள்ள முடிந்தது. தான் குருவாக பாவிக்கும் பீஷ்மரையும் துரோணரையும் எப்படி எதிர்த்து போரிடுவேன் என்று புலம்பி தன் மனக்குழப்பத்தை அவனிடம் பகிர்ந்துகொள்ள முடிந்தது. தன் சந்தேகங்களை ஒன்றுவிடாமல் கேள்வியாக்கி கிருஷ்ணனிடம் கேட்டு, பதில் பெறமுடிந்தது. அதேநேரம் கிருஷ்ணன் மீதிருந்த பக்தியின் காரணமாக அவனை நித்தமும் பூஜிக்கவும் தவறவில்லை அர்ஜுனன். அவனது மாறாத பக்தியின் காரணமாகத்தான் கிருஷ்ணனின் விஸ்வரூபத்தைக் காணும் பேறும் அவனுக்குக் கிடைத்தது. நட்பு, பக்தி இரண்டையும் சமமாய் வெளிப்படுத்துபவருக்கே ஸக்ய பக்தி சாத்தியப்படும். நண்பனாக இருந்தாலும் அவனது பக்தியில் இறைவன் குளிர்ந்து போகும்போது, நண்பனுக்குத் தொண்டு செய்யவும் இறைவன் தயங்கமாட்டான் என்பதற்கு உதாரணம்தான் குசேலனின் பக்தி! கிருஷ்ணனின் பால்ய சிநேகிதன்தான் சுதாமன் எனும் குசேலன். வறுமையில் வாடும் நிலையில் உதவி கேட்டு கிருஷ்ணனைத் தேடி வருகிறார், பால்ய நண்பன் என்றாலும் கிருஷ்ணரிடம் பரமபக்தி கொண்டவர் சுதாமர். தன் நண்பன் தன்னைத் தேடி வருகிறான் என்றறிந்ததும் கிருஷ்ணன் தானே வாசலுக்கு வந்து நண்பனை வரவேற்று, அவர் பாதத்திற்கு நீரூற்றி, மலர் தூவி, பாதபூஜை செய்து அவரை உள்ளே அழைத்துச் செல்கிறார். நண்பன் அன்போடு கொடுக்கும் ஒருபிடி அவலை ஆசையோடு உண்கிறார். பயணித்த களைப்பில் உறங்கும் நண்பனுக்கு விசிறிவிட்டு, கால்களைப் பிடித்துவிட்டு பணிவிடை செய்கிறார். நண்பனின் வறுமையை நீக்குகிறார். இதுவே பரிசுத்தமான ஸக்ய பக்தியின் உன்னதம்.”

அப்பா சொல்ல, ரங்கன் மலைத்துப்போனான்.

“அடேயப்பா இதில் இவ்வளவு உள்ளதா? ஒரு சந்தேகம் கேட்கலாமாப்பா? கடவுளிடம் நட்போடு பக்தியும் பணிவும் கொள்வது சரியாக இருக்கலாம். ஆனால் சக மனிதனிடம் கொள்ளும் நட்பில் எதற்கு தேவையற்ற பணிவு?”

அவன் எதைக்குறித்து கேட்கிறான் எனப் புரிந்து கொண்ட அப்பா அவனையே உற்றுப்பார்த்துவிட்டு புன்னகைத்தார்.

“நீ என்ன கேட்க வருகிறாய் என்பது புரிகிறது. வேணு என்னைவிட மிஞ்சிப்போனால் ஒன்றிரண்டு வயது மூத்தவராக இருப்பான். என்னை மிக நன்கு புரிந்துகொண்ட உயிர் நண்பன். நண்பனிடம் எதற்கு பவ்யம்? ஏன் அவர்முன் கைகட்டி நிற்கிறாய் என்றுதானே கேட்டாய்? காரணமுண்டு. இவனில் நான் காண்பது சாக்ஷாத் கிருஷ்ணனையே. என் பதிமூன்றாம் வயதிலேயே ஒரு விபத்தில் பெற்றோரை இழந்து வாழ்வில் தனித்து நின்ற என்னை எந்த உறவுகளும் ஏற்க முன்வராத நிலையில், தன் அப்பாவிடம் சொல்லி, உடனடியாகத் தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்து என் பசி தீர்த்தவன் அவன். இத்தனைக்கும் அவர்கள் அன்று வசதிபடைத்தவர்கள்கூட இல்லை. பின்னர் நான் ஒரு அரசுபள்ளியில் சேரவும் ஹாஸ்டலில் தங்கி படிக்கவும் அவன்தான் யார் யாரிடமோ பேசி உதவினான். வாரம் ஒருமுறை ஹாஸ்டலுக்கு வந்து என்னை சந்திப்பான். வரும்போதெல்லாம் வீட்டிலிருந்து ஏதேனும் உண்ணக் கொண்டுவந்து தருவான். தன்னுடைய பாக்கெட்மனி சேமிப்பிலிருந்து எனக்கு பேண்ட் ஷார்ட், உள்ளாடைகள் என்று வாங்கித்தருவான். ஹாஸ்டலில் சில நண்பர்கள் எனக்கு புகைபிடிக்க பழக்கிவிட்டது தெரிந்ததும் வேணு ஒருநாள் வந்தான். நம்மைச்சுற்றி நல்லது கெட்டது எல்லாமே இருக்கும். நமக்கு எது நல்லதோ அதைமட்டும் கற்கப் பழகவேண்டும். சில பழக்கங்கள் நம்மை மெல்லக் கொல்லும். தெரிந்து உண்டாலும், தெரியாமல் உண்டாலும் விஷத்தின் இயல்பு கொல்வதுதான். அந்தப் பழக்கத்தை நீ நிறுத்தும்வரை இதற்காக நீ யாரிடமும் கடன் வாங்கிவிடக் கூடாதென்பதால், மாதம் ஐம்பது ரூபாய் நான் உனக்குத் தனியாகத் தருகிறேன் என்றான். நான் அழுதுவிட்டேன். அந்த விநாடியே புகைப்பதை நிறுத்தினேன். இப்படித்தான் நான் திசை தெரியாது தடுமாறிய போதெல்லாம் அவன் என் தவறுகளைத் திருத்தி நல்வழி காட்டியிருக்கிறான்.”

“வேணு மாமாவோட குடும்பத்தில் யார் யாரெல்லாம் இருக்காங்க? குழந்தைகள் இருக்கிறார்களா அவருக்கு?”

“இல்லை. அவன் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவன் அப்பாவின் உடல்நலக்குறைவால், கல்லூரிப்படிப்பை பாதியில் நிறுத்தவேண்டிய சூழல் ஏற்பட்டது. அதன்பின் தம்பி தங்கைகள்னு குடும்ப பாரம், எல்லார்க்கும் திருமணம் செய்து, தன் அப்பாவின் மளிகைக் கடையை நஷ்டப்படாம நடத்தி இன்னிக்கு சூப்பர் மார்க்கெட் அளவுக்கு வளர்த்திருக்கான். இப்போ பிக்கல் பிடுங்கல் எதுவுமில்லாமல், தேவைப்படுபவர்களுக்கு தேவைப்படும் உதவிகளைச் செய்துகொண்டு நிம்மதியா இருக்கான். அவனால் படிக்க முடியலைன்னாலும் என்னையும் ஒரு தம்பியா நினைச்சு, நான் படிக்க விரும்பிய கல்வி எனக்குக் கிடைக்கச் செய்திருக்கிறான் எத்தகைய சூழலிலும் நான் தர்மம் தவறாது நடக்க பழக்கியிருக்கிறான். என் வாழ்க்கைத் தேரை சரியான பாதையில் செலுத்திக் கொண்டிருக்கும் சாரதி அவன்தான். எங்கிருந்தோ வந்தான், நண்பனாய் இணைந்தான். எதற்காக அவன் எனக்கு இத்தனையும் செய்ய வேண்டுமென்ற கேள்விக்கு என்னிடமும் பதிலில்லை, அவனிடமும் பதிலில்லை. சிலசமயம் அவன் சொல்லுவான். கீதையில் கிருஷ்ணன் அர்ஜுனனிடம் சொல்கிறான் “நிமித்த மாத்ரம் பவ” என்று. அதாவது நாமெல்லாரும் கடவுளின் கருவிகளாகத்தான் இயங்கிக் கொண்டிருக்கிறோம். கடவுள் நம்மை எப்போதும் நல்ல காரியங்களுக்கு மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்பதுதான் எப்போதும் என் பிரார்த்தனையாக இருக்கும். மற்றபடி வேறெந்த எதிர்பார்ப்பும் எனக்கில்லை” என்பான். பாவம் மட்டுமல்ல, புண்ணியக் கணக்கும் பூஜ்யமாகணும் என்று அவன் சொல்வதைப் புரிந்து கொள்ளவும் பெரிய அளவில் ஞானம் வேண்டும். எவ்வித எதிர்பாரப்புமின்றி இப்பிறப்பில் என்னை வழி நடத்திக்கொண்டிருக்கும் சக்தி வேணு. அவன் எது சொன்னாலும் என் நன்மைக்காக மட்டுமே இருக்குமென்று நம்பி வாழ்பவன் நான். நம்பிக்கைதான் பக்தி எனில், இதுவும் கிட்டத்தட்ட ஸக்ய பக்திதான். இது கலியுகமல்லவா? தெய்வம் நேரில் வராது. தெய்வம் மனுஷ்ய ரூபேண!.” அப்பா கண்மூடி அமர்ந்திருந்தார்.

ரங்கனுக்குப் புரிந்தது. அவன் கைகள் அப்பாவை நோக்கி வணங்கியது. அப்படியே மானசீகமாய் வேணு மாமாவையும் நமஸ்கரித்தான்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com