புது வேலை

புது வேலை

டையின் முடிச்சை சரி செய்தபடியே அவன் உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டிருந்தான் - "சோபாவிற்கு துணி போதவில்லை. நீயே வாங்கிக் கொண்டு வந்து விடு. இவர்கள் பொறுப்பில் விட்டால் எல்லாத்தையும் நாசம் பண்ணிடுவாங்க. ஜன்னல், கதவுகளுக்கு வார்னிஷ் அடிக்கும் வேலை இன்னக்கி கட்டாயம் முடிச்சுடணும். ப்ளம்பர் வந்தால் கெட்டுப் போயிருக்கிற குழாய் பைப் எல்லாவற்றையும் சரி பண்ணச் சொல்"

ரமா பின்னால் நின்று கொண்டு கண்ணாடியில் தெரியும் குந்தனின் பிம்பத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். புது வேலை கிடைத்ததுமே குந்தன் உடைய முழு பர்சனாலிட்டியும், பேசும் முறையும் முழுவதுமாக மாறிவிட்டதாக அவள் நினைத்தாள். எவ்வளவு தன்னம்பிக்கை வந்திருக்கிறது! அதிகாரத் த்வனி ஒவ்வொரு துளியிலும் சொட்டுகிறது.

உதடுகளின் கோடியில் சுருட்டைத் திணித்துக் கொண்டு, முழு வீட்டையும் ஒரு முறை சுற்றிப் பார்த்தான். இதுவும் தினசரி நடவடிக்கையாகிவிட்டது. பின்பக்க வராண்டாவில் தையல்காரர் சோபா கவர் தைத்துக் கொண்டிருந்தார். சற்று தூரத்தில் சிறிய தகர டின்னில் வார்னிஷ் கலந்து கொண்டிருந்த மேஸ்திரி, பையனுக்கு ஏதோ உத்தரவுகள் கொடுத்துக் கொண்டிருந்தார். குந்தனைப் பார்த்ததும் மரியாதை நிமித்தம் சலாம் வைத்தார். "அப்துல் மியான், வேலை இன்று முடிந்து விட வேண்டும். உன்னுடைய வேலை மிகவும் மெதுவாக போய்க் கொண்டிருக்கிறது.

"வேலையையும் பாருங்கள் ஸாஹிப். இரண்டு நாட்கள் கூட ஆனாலும் உங்களுக்கு குறை கூற ஒரு வாய்ப்பையும் விட மாட்டேன். வேலைத் தரத்தில் நான் எந்த....."

"சரி, சரி" குந்தன் திரும்பி வந்தான். டிராயிங் ரூமின் பார்ட்டிஷன் மீது பார்வை பதிந்ததும், " இன்டீரியர் டெக்கரேட்டிஸ்க்கு கண்டிப்பாக போன் செய்து விடு. இந்த பார்ட்டிஷன் கண்டிப்பாக வேண்டாம் சொன்னது என்ன? இவர்கள் செய்து கொண்டு வந்தது என்ன? ரப்பிஷ்" என்றான்.

குந்தன் வண்டியில் உட்கார்ந்தான். ரமா போர்டிகோவின் கடைசி படியில் நின்று கொண்டிருந்தாள். கிளம்புவதற்கு முன் எல்லா உத்தரவுகளையும் அவன் மறுபடி ஒருதரம் சொல்வான் என்று அவள் நினைத்தாள். ஆனால் அப்படி நடக்கவில்லை.

வண்டியை இயக்கி ஜன்னல் வழியாக லேசாக கையசைத்து, " ஓக்கே.. பை பை" என்றான். வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டு கிளம்பும் முன், வேலைக்காரனிடம், தான் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தையும் மீண்டும் ஒருமுறை சொல்லும் பழக்கம் அவனுக்கும் இருந்தது என்று அவளுக்கு நினைவு வந்தது.

அப்போது குந்தன் சிரித்துக் கொண்டே செல்வான்." போதும்மா நிறுத்து கொஞ்சம். எத்தனை முறை திரும்ப திரும்ப சொல்வாய்? நீ இத்தனை முறை திரும்பத் திரும்ப சொல்வதால் தான் அவன் தவறு செய்கிறான்"

வண்டி லால் பஜரி தெருவில் திரும்பி, ரயில்வே கேட்டை தாண்டி வெகு தூரம் சென்று கண்ணை விட்டு மறைந்தது.

குந்தன் அவளை விட்டுவிட்டு ரொம்ப தூரம் முன்னாடி போய் விட்டது போல அவளுக்கு தோன்றியது. அவள் தனியாய் நின்று விட்டது போல. ஒரு மாதம் முன்பு வரை அவளும் குந்தனுடன் சேர்ந்து தான் கிளம்புவாள். குந்தன் அவளை காலேஜில் இறக்கிவிட்ட பின்னர் ஆஃபீஸ் செல்வான். ஆனால் போர்ட்டிகோவில் நிற்கும் வரை தான் இந்த தனிமைப்பட்டு போன உணர்வு இருந்தது. ஃப்ளாட்டின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்ததுமே, ஃபர்னிச்சர், கண்ணாடி கதவுகள் ஜன்னல்கள் மற்றும் மேலே இருந்து தொங்கும் நீண்ட திரைச்சீலைகள், மேஸ்திரியின் பேச்சு குரல், டிஸ்டம்பரும் வார்னிஷும் கலந்த லேசான நறுமணத்தில் அவள் மூழ்கி விடுவாள்.

முடிக்க வேண்டிய வேலைகளில் ஒரு லிஸ்ட் அவளிடம் இருந்தது. அதை அவள் கட்டாயம் முடித்துவிட வேண்டும். வேலை செய்கிற மேஸ்திரிகளை மேற்பார்வை செய்ய வேண்டும். கண்டிப்பாக ஒன்று அல்லது இரண்டு முறை மார்க்கெட்டுக்கு போக வேண்டியிருக்கும். இதையெல்லாம் செய்து முடிப்பதற்குள் மாலை ஆகி இருக்கும்.

ஃபோன் மணி அடித்தது. ஃபோனை எடுத்து, " யாரு? மிஸஸ் பர்மனா? சொல்லுங்க, என்ன விஷயம்?”

மிஸஸ் பர்மன் குற்றப்பத்திரிக்கை படித்தாள். காலேஜ் விட்டு ஒரு மாதம் ஆயாச்சு. முகத்தை காட்டக்கூட ஒரு முறை வரவில்லை. Out of sight is...

" அடடா அப்படியெல்லாம் ஒன்றுமில்லை" ரமா நடுவில் நுழைந்தாள். அவள் லேசாக குனிந்து முழங்கையை மெது மீது ஊன்றி கொண்டாள். தகவல்களைக் குறித்து வைத்துக் கொள்வதற்காக வைத்திருந்த சிறிய காகிதப் பேடில் கோனல் மாடலாக சில கோடுகளை கிழித்தாள்.

"இன்று மதியம் வாயேன். சேர்ந்து சாப்பிடலாம். நீ போன பிறகு நம் டிபார்ட்மெண்ட்டே வெறிச்சோடி விட்டது. லன்ச் சமயத்தில் உன்னை மிகவும் மிஸ் செய்கிறோம். ஆனால் நீ போன பிறகு எங்களைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை."

”என்ன சொல்ல? புது வீட்டை சரி பார்க்கிற வேலையில் பிஸியாக இருந்துவிட்டேன். அங்கு வரவே முடியவில்லை. சுதா, மாலதி, ஜெயந்தி எல்லோரும் எப்படி இருக்கிறார்கள்?"

"சொன்னேன் இல்லையா? இன்று மதியம் வாயேன். எல்லாரையும் பார்த்த மாதிரியும் இருக்கும். சேர்ந்து சாப்பிட்ட மாதிரியும் இருக்கும்."

"இன்றா? இன்று முடிக்க வேண்டிய வேலைகள் லிஸ்ட் கண் முன் தோன்றி மறைந்தது." இன்றைக்கு முடியாது மிசஸ் பர்மன்". மன்னிப்பு கேட்கிற குரலில், " இன்னும் ஒரு வாரம் தான் பிறகு இந்த புது வீட்டு பார்ட்டி கொடுப்பேன். நேரில் பார்த்தால் நீங்களே புரிந்து கொள்வீர்கள். இந்த ஒரு மாசம் முழுவதும் ரமா என்ன செய்து கொண்டு இருந்தாள் என்று தெரிந்து கொள்வீர்கள். இரண்டு மூன்று நிமிடங்கள் அரட்டை அடித்து விட்டு ரமா போனை வைத்தாள்.

போனை வைத்த பிறகு தான் காலேஜ் போவதை விட்டு 28 நாட்கள் ஆகிவிட்டது அவளுக்கு நினைவுக்கு வந்தது. போவது இருக்கட்டும், ரமாவுக்கு காலேஜின் நினைவு கூட வரவில்லை. ஆச்சரியத்தோடு அவளுக்கு கொஞ்சம் வருத்தமாகவும் இருந்தது. இவள் ஏன் போகவில்லை? போகாமல், இவளால் எப்படி இருக்க முடிந்தது? இன்று மிஸஸ் பர்மனின் போன் வராவிட்டால் அவளுக்கு காலேஜ் ஞாபகம் வந்து கூட இருக்காது. நிஜமாகவே அவள் பெரிய ஆபிஸரின் மனைவியாகிவிட்டாளா? அவளுக்கு ஜெயந்தியின் கிண்டல் ஞாபகம் வந்தது.

திடீரென இப்பொழுதே கிளம்பி போக வேண்டும் போல இருந்தது. ஒருமுறை எல்லோரையும் பார்த்து விட்டு வரலாம். வர முடியாது என்று சொல்லிவிட்டு அவள் அங்கே போய் எல்லோருக்கும் ப்ளசன்ட் சர்ப்ரைஸ் கொடுக்கலாம். சமையல் அறைக்குச் சென்று பத்து பன்னிரண்டு உருளைக்கிழங்கு பராட்டாக்களையும், நறுக்கிய பழ துன்பங்களையும் தயார் செய்யச் சொன்னாள். இவை இரண்டும் அங்கே எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும் முழு டிபார்ட்மெண்டிலும் அவளும் மிஸஸ் பர்மனும் மட்டுமே திருமணமானவர்கள். மற்றவர்கள் எல்லோரும் காலேஜ் ஹாஸ்டலில் வசித்து வந்தார்கள். நல்ல சாப்பாடு அவர்களுக்கு கிடைக்காததால் எதையாவது சமைத்துக் கொண்டு வரும்படி அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

அவளுக்கு அவளுடைய ஃபேர்வெல் பாட்டி நினைவுக்கு வந்தது. பத்தரை வருட சர்வீஸ். பிரின்சிபல் வண்டி ஆசிகளும் பெரிய பூங்கொத்து நடுவில் ஒரு பார்க்கர் பேனா செட்டையும் வைத்துக் கொடுத்தார்." மிஸஸ் சோப்ரா நீங்கள் இதே பேனாவை உபயோகித்து உங்கள் தீஸிஸை முடியுங்கள். திரும்பவும் வேலைக்கு சேர எப்போது தோன்றினாலும் எந்த வித கூச்சமும் இன்றி இங்கே வாருங்கள். உங்களுக்கு இங்கே எப்போதும் வரவேற்பு உண்டு. அவளுடைய டிபார்ட்மெண்டின் எல்லா லெக்சரர்களும் வண்டி வரை கொண்டு விட வந்தார்கள். ரமா, காலேஜ் விட்டு போனால் என்ன, லஞ்ச் சமயத்தில் வரும் போது கண்டிப்பாக சாப்பாடு கொண்டு வாருங்கள்." அவளுடைய நனைந்த விழிகளிலும் சிரிப்பு மலர்ந்தது. அப்போது அவளுக்கு குந்தன் கூறிய விஷயம் ஞாபகத்திற்கு வந்தது. " நீ அங்கே கற்பிக்கப் போகிறாயா இல்லை சாப்பிட போகிறாயா? போனில் கூட நீங்கள் பேசும் போது சாப்பாட்டைப் பற்றித்தான் டிஸ்கஸ் செய்கிறீர்கள்"அவள் அவர்களும் லஞ்சமேட்டில் காலேஜுக்கு வருவேன் என்று சொல்ல மட்டும் செய்யவில்லை தானும் உண்மையிலேயே காலேஜுக்கு போக விரும்பினாள். தன்னை முழுவதுமாக காலேஜில் இருந்து துண்டித்துக் கொள்வது அவளுக்கும் கஷ்டமாகத் தானே இருக்கும். இப்படி மெதுவாக விலகினால்...

அப்படி என்றால் குந்தன் சொன்னது சரிதானா? காலேஜ் விட்டு விட முடிவு செய்ததும் அவள் மௌனமாக அழுது கொண்டிருந்தாள். குந்தன் அவளுக்கு புரிய வைத்துக் கொண்டிருந்தான்." உனக்கு தனிமை உணர்வு தோன்றவே தோன்றாது. உனக்கு எந்த குறையும் இருக்காது. Rather you will feel relaxed. இந்நாட்களில் உன் மீது எவ்வளவு ஸ்ட்ரெய்ன்!" என்றான்.

*****

இவ்வளவு பெரிய வெளிநாட்டு கம்பெனியில் குந்தனுக்கு வேலை கிடைக்கும் என்று மற்றவர்களுக்கு ஒரு வேலை ஆசை இருந்ததோ என்னவோ ஆனால் குந்தனுக்கு சுத்தமாக இல்லை. கடந்த எட்டு வருடங்களாக டாக்டர் ஃபிஷருடன் முற்றிலும் தொழில் முறை சார்ந்த தொடர்பே இருந்தது. அவரது பாராட்டுதல்கள் மற்றும் நன்னடத்தையை கூட அவன் தொழில் ரீதியான சம்பிரதாயமான வழக்கம் என்றே கருதினான்.

ரமாவும் குந்தனும் பத்து பன்னிரண்டு தினங்களை கொண்டாட்டங்களிலேயே கழித்தார்கள். அவனுக்கு பணத்தாசை அதிகம் இல்லாத போதிலும், மார்வாடி நிறுவனத்தின் பழக்க வழக்கங்கள் அவனுடைய குணாதிசயத்தோடு ஒத்துப் போகவில்லை. ரமாவுக்கு இந்த புதுச் சூழல் ஒன்றும் புரியாமல் இல்லை. க்ளப், டான்ஸ் டின்னர் காக்டெயில் போன்றவைகள் குழந்தை பருவத்திலிருந்தே அவளுக்கு பரிச்சயம் தான். ஆனால் வெறுமனே ஒரு பார்வையாளராக தான் பார்த்துக் கொண்டு இருந்தாள். அதில் அவள் தன்னை இழக்கவில்லை.

டாக்டர் ஃபிஷர் குந்தனுக்கு வேலை மட்டும் தரவில்லை. சிறிது சிறிதாக அவன் வாழ்க்கையையும் திட்டமிட்டார். இரண்டு மூன்று கிளப்புகளில் உறுப்பினராக சேர வேண்டி இருந்தது. ஒவ்வொரு நாளும் இதர நிறுவனங்களின் பெரிய மனிதர்களை என்டர்டெயின் செய்ய வேண்டி இருந்தது. வெளிநாட்டினருக்கு இந்திய உணவை அறிமுகப்படுத்த, அவனுக்கு வீட்டிலும் பல விருந்துகளை ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. மூன்று மாதங்களுக்கு முன்பு அவனுக்கு கம்பெனியின் தரப்பில் இருந்து இந்த ஃப்ளாட் கிடைத்தது. அவன் இந்த ஃப்ளாட்டை கிழக்கத்திய கலாச்சார அடிப்படையில் அலங்கரிக்க நினைத்தான். வெளிநாட்டவர்களுக்கும் இது புதுமையாக இருக்கும் என்று எண்ணினான்.

ஆனால் வீட்டுக்கு பர்னிச்சர் வாங்குவதற்கோ, அலங்காரப் பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்குவதற்கோ இருவரிடமும் நேரமில்லை. இந்த வேலைகளை ரமா செய்ய வேண்டும் என குந்தன் விரும்பினான். அவளுக்கு மிக நல்ல ரசனை. பார்க்கப்போனால் இந்த வேலை எல்லாம் அவளுடையது தான். நண்பர்கள் மத்தியில் கூட அவளுடைய ரசனைக்கு பாராட்டுக்கள் கிடைத்ததுண்டு. ஆனால் ரமாவிடம் நேரமில்லை. காலையில் எழுந்து அவள் வண்டியை தயார் செய்து பள்ளிக்கு அனுப்புவாள். பிறகு தானும் தயாராவாள். நடு நடுவே அவள் வேலைக்காரனுக்கு உத்தரவுகள் தருவாள். முழு நாளும் அவன் செய்ய வேண்டிய வேலைகளை விவரிப்பாள். டிபன் சாப்பிட்டுக் கொண்டே அவள் தன் லெக்சரை தயார் செய்து கொள்வாள். தயார் என்ன, மேலோட்டமாக முகர்ந்து பார்ப்பாள். பிறகு ஒன்பது மணிக்கு குந்தனோடு கூடவே புறப்பட்டு விடுவாள். மூன்று மணிக்கு திரும்பி வந்து கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து விட்டு இரவுக்கு வேலைகளில் ஈடுபடடுவாள். அவர்கள் வெளியே போகாத பட்சத்தில், வீட்டுக்கு யாரேனும் விருந்தினர்கள் வந்து விடுவார்கள்.

இரவு 11:30க்கு படுக்கப் போகும்போது உடல் முற்றிலுமாக களைத்திருக்கும். குந்தனுக்கு எரிச்சலாக இருக்கும். " டோன்ட் பி சில்லி. வண்டியில் உட்கார்ந்து போகிறாய். அங்கு எல்லோரிடமும் பேசி சிரித்து சாப்பிட்டுவிட்டு வீடு திரும்புகிறோம். வண்டியில் தான் திரும்ப அழைத்து வருகிறேன். இதில் எங்கிருந்து களைப்பு வந்தது?” என்று சிடுசிடுப்பான்.

ரமா வெறுமையான கண்களோடு அவனை பார்ப்பாள். மனதின் உள் அடுக்குகளில் நாளை படிப்பிக்க வேண்டிய வரலாற்று பாடங்கள் நீந்தி கொண்டிருக்கும். அவற்றை அவள் வலுக்கட்டாயமாக மூளையிலிருந்து வெளியேற்ற முயற்சித்துக் கொண்டிருப்பாள். டாக்டர் ஃபிஷர் எப்படி அவனுடைய வேலையில் சந்தோஷமாக இருக்கிறார்; எப்படி அவன் அவரது நன்மதிப்பை பெற முயற்சித்துக் கொண்டிருக்கிறான் என்றெல்லாம் குந்தன் நடுநடுவே சொல்லிக் கொண்டே இருப்பான். திடீரென அவனுக்கு அவனுடைய எதிர்காலம் மிகவும் ஒளிமயமாகத் தெரிந்தது. களைப்பின் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களாலோ அவள் அதிக ஆர்வம் காட்டாவிட்டால் அவன் எரிச்சல் அடைவான்.

"என்ன ஆயிற்று உனக்கு? நானும் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறேன். என்னுடைய முன்னேற்றத்தில் நீ ஒரு ஆர்வமும் காட்டுவதில்லையே. உனக்கு...."

"ஏன் இப்படி பேசுகிறாய் எனக்கு தூக்கம் வருகிறது."

சில சமயம் குந்தன் போன் செய்து ஏழு மணிக்கு தயாராக இருக்கச் சொல்வான். வீடு வந்து பார்க்கையில் அவள் தயாராக இல்லை என்றால் எரிச்சல் அடைவான்." ரமா, உனக்கு நேரம் குறித்த பிரக்ஞை எப்போது வரும்?" சில சமயம் வீட்டில் விருந்தளிக்கும் போது ஏதாவது குறைகள் இருந்து விட்டால், இரவு மிகுந்த ஜாக்கிரதையுடன், " நீயே கைப்பட சமைக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. மூன்று நான்கு வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்களை மேற்பார்வை பார்த்தால் போதுமே. மாதிரி தருணங்களில் ரமா எதுவும் பேசாமல் மௌனமாக இருந்து விடுவாள்.

அன்று ரமாவுக்கு காலேஜில் ஒரு பேப்பர் வாசிக்க வேண்டி இருந்தது. அவள் தானாகத்தான் ஒத்துக் கொண்டாள். இந்த சாக்கில் ஒரு டாபிக் ரெடி ஆகிவிடும் என்று நினைத்தால் ஆனால், அவளால் பேப்பருக்காக எதுவும் தயார் செய்ய முடியவில்லை. இரவு படுக்கப் போகும் போது அவளுக்கு அழுகை வந்தது.

வெட்டுண்டு மரத்தைப் போல படுக்கையில் சாய்ந்து, ஆடைகளை கூட மாற்றிக் கொள்ளாமல், " இதெல்லாம் என்னால் சத்தியமாக முடியவே இல்லை" என்றாள்.

"ஏன் முடியவில்லை?"

" இதெல்லாம் என்னால் முடியவில்லை. குற்ற உணர்ச்சியில் தவிக்கிறேன். எந்த ஏற்பாடும் செய்து கொள்ளாமல் எந்த குறிப்பு எடுத்துக் கொள்ளாமல் படிப்பபிப்பது, மாணவிகளை ஏமாற்றுவது போல் இருக்கிறது. எனக்கென இரண்டு மணி நேரம் கூட கிடைப்பதில்லை."

இரவு ரமாவோடு கலந்து ஆலோசித்து ஒவ்வொரு அறையும் எப்படி அழகு படுத்த வேண்டும் என்று திட்டமிடலாம் என குந்தன் நினைத்திருந்தான். பொருத்தமான வர்ணங்களை தேர்ந்தெடுத்து வெள்ளை அடிப்பதற்காக, அவன் ஏற்கனவே ஜென்சன் அண்ட் நிகல்சன் கம்பெனிக்காரர்களிடம் பேசியிருந்தான்.

அம்மாவின் பேச்சைக் கேட்டு அவன் மௌனமானான்.

"பண்ட்டி ரிப்போர்ட் கார்டை பார்த்தாயா? எப்போதும் முதலிடத்தில் இருப்பவன் இந்த முறை ஏழாம் இடத்துக்கு போய் விட்டான்"

பக்கத்தில் படுத்து, ரமாவை மிகுந்த அன்புடன் தன் பக்கம் இழுத்து," நீயே அவனை படிக்க வையேன்" என்றான்.

"எப்போது படிக்க வைப்பது, நீயே சொல்! மாலையில் கிடைக்கிற ஐந்து மணியிலிருந்து ஏழு மணிக்கு இடையான நேரத்தில் அவன் விளையாடப் போய்விடுகிறான்."

"நான் என்ன செய்யணும் என்று நீயே சொல்" குந்தன் ரமாவின் தலை முடியை மிருதுவாக தடவியபடியே கேட்டான்.

"நாளை எனக்கு பேப்பர் வாசிக்க வேண்டும். 15 நாட்களுக்கு முன்பு டாபிக் கிடைத்தது. இன்னும் ஒரு வரி கூட எழுத ஆரம்பிக்கவில்லை. பொய்யாக ஏதாவது சாக்கு போக்கு சொல்ல வேண்டியதுதான்"

குந்தனின் விரல்கள் தலைமுடியில் இருந்து அவளது கன்னங்களில் த ஆரம்பித்தன.

"பத்து வருடங்கள் முடிந்து விட்டன. இன்னும் ஆறு மாதத்திற்குள் நான் தீஸிஸை சப்மிட் செய்துவிட்டால் செலக்ஷன் கிரேடில் வந்து விடுவேன். ஆனால், இதே நிலைமை தொடர்ந்தால்...."

ரமா அழுதாள்.

டாக்டர் ஃபிஷரின் வார்த்தைகள், குந்தனின் காதில் ஒலித்துக் கொண்டிருந்தன. ஜெர்மனியில் இருந்து ஜனவரி மாதம் டைரக்டர் வரப்போகிறார். நாம் இங்கு செய்து கொண்டிருக்கும் வேலைகளை எல்லாம் அவருக்கு காண்பிக்க வேண்டும். புது பிளான்ட் ஆரம்பிக்கிற எண்ணமும் இருக்கிறது. அதற்கு சில பொறுப்பான ஆட்களை வேலைக்கு அமர்த்த வேண்டும். Some smart young man! வியாபாரத்தில் தங்கள் தொடர்புகளின் மூலமாகவே தேடிக் கொண்டு விடுகிறார்கள். You have to be very special!

குந்தனுக்கு இம்மாதிரியான பேச்சுக்களில் எப்பொழுதும் தனக்கென ஒரு சமிக்ஞையோ நம்பிக்கையோ கிடைக்கும். Luckily your wife...

"நீ என்னை விட்டுவிட்டு போ. ஒவ்வொரு நாளும் நான் உன்னோடு வரவேண்டும் என்பது கட்டாயமா என்ன?"

குந்தன் சற்று நேரம் அவளுடைய தலை முடியை கோதியவாறு இருந்தான். பிறகு அவளை அணைத்துக் கொண்டு, " உன்னை விட்டுவிட்டு நான் எங்காவது தனியாக போய் இருக்கிறேனா இல்லை என்னால் போகத்தான் முடியுமா? ஆபீஸ்சைத் தவிர மற்ற எல்லா இடங்களுக்கும் நாம் சேர்ந்துதான் போகிறோம். உன்னைத் தவிர எனக்கு வேறு எதுவும் பிடிக்காது என்று உனக்கு நன்றாகத் தெரியுமே!"

ரமாவுக்கு இது தெரியும் தான். அவர்களுடைய திருமண வாழ்க்கை நண்பர்கள் மத்தியில் பொறாமைக்கும் பாராட்டுக்கும் உரிய விஷயமாகவே இருந்தது. அவளுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. அவள் தூங்கும் வரையில் குந்தன் அன்பாக அவளை தட்டிக் கொண்டிருந்தான்.

"மேம் ஷாப், பராட்டாக்களை இப்போதே செய்ய வேண்டுமா?"

ரமா ஒரு கணம் துணுக்குற்று, பிறகு, " பன்னிரண்டு மணிக்கு மேல் செய்யத் தொடங்கினால் போதும். நான் ஒரு மணிக்கு காலேஜ் போவேன். நடுவில் ஒரு முறை மார்க்கெட்டுக்கு போய் சோபாவுக்கான துணியை வாங்கிக் கொண்டு வந்து விடுகிறேன்" என்றாள். நடுவில் ஒரு முறை உள்ளே சென்று மேஸ்திரியிடம் பாலிஷ் வேலை இன்று கண்டிப்பாக முடிந்து விட வேண்டும் என்று வற்புறுத்தி விட்டு வந்தாள்.

கடைத் தெருவில் இருந்து இன்னும் என்னென்ன சாமான்கள் வாங்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய டைரியை புரட்டினாள். துணி மாற்றிக் கொள்ள அறைக்குள் வந்தபோது, வேலைக்காரன் எல்லா புத்தகங்களையும் வெளியே எடுத்து துடைத்து வைத்துக் கொண்டிருப்பதை பார்த்தாள்.

இவற்றில் இன்னும் ஒரு புத்தகத்தை கூட அவள் படிக்கவில்லை. சிலவற்றில் அவள் தன் பேரை கூட எழுதவில்லை. குந்தனும், ஏதோ ஒரு வேகத்தில், ஒரே நாளில் இத்தனை புத்தகங்களையும் வாங்கிக் குவித்து விட்டான்.

பேச்சு வேறொரு தளத்தில் துவங்கியது. குந்தன் அப்போதுதான் ஆபீஸிலிருந்து திரும்பி இருந்தான். ரமா எந்த முகாந்திரமும் இல்லாமல் பேச்சைத் தொடங்கினாள். " நான் வேலையை விட்டு விடப் போகிறேன். இப்படி வேலை செய்வதை விட, செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது. குற்றமோ மனத்தாங்களோ இல்லாமல் மிகவும் சாதாரணமான குரலில் அவள் இதைச் சொன்னாள்.

குந்தன் பார்த்துக் கொண்டே இருந்தான். இதே சொற்களைத்தான் அவன் பல தருணங்களில் சொல்ல ஒத்திகை பார்த்திருந்தான். ஆனால் சொல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது இது மேலும் அவசியமாக தோன்றியது. ஜனவரிக்குள் அவன் முழு வீட்டையும் டெக்கரேட் செய்து முடித்து விட வேண்டும். ஓரியன்டல் ஸ்டைலில். இருந்தாலும் ஒன்றும் தெரியாத மாதிரி, "என்ன ஆச்சு?" என்று கேட்டான்.

"ஒன்றுமில்லை"

குந்தனுக்கு இப்போது பேச்சை வளர்த்துவதில் விருப்பமில்லை. தேநீர் கோப்பையை கையில் எடுத்துக் கொண்டு தோட்டத்துக்குச் சென்றான். கேக்டஸ் செடியில் கிடைத்த எல்லா வகைகளையும் வாங்கிக் கொண்டு வந்து, கேட்டின் உட்புறம் அழகாக அடுக்கியிருந்தான். ஆனால் புல்தரையைப் பொறுத்தவரை, அவனுக்கு இன்னும் முழு திருப்தி ஏற்படவில்லை. பர்ஷியன் கம்பளத்தை விரித்தது போல தன்னுடைய லான் பளபளக்க வேண்டுமென்று அவன் விரும்பினான்.

இரவு மறுபடியும் அதே பேச்சு எழுந்தது. குந்தன் இந்த விஷயத்தில் இருந்து தப்பிக்க நினைத்தான். அதேசமயம், ரமா, இந்த முடிவை தானாகவே எடுத்தாளா அல்லது குந்தனின் மீது கோபப்பட்டு கொண்டு எழுத்தாளர் என்பதை தெரிந்து கொள்ளவும் ஆவலாக இருந்தது. ஆனால், ரமா, " இப்போது என்னால் முற்றிலுமாக முடியவில்லை நாளை ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டு வந்து விடுவேன்" என்று மட்டுமே சொன்னாள்.

அவளுடைய குரலில் இருந்த வருத்தம், அவனையும் எங்கோ அசைத்தது. நிலைமையின் தீவிரத்தை குறைக்க, வேடிக்கை செய்கிற குரலில்," விட்டுவிடேன். ஏன்ஷியன்ட் ஹிஸ்டரி கற்றுக் கொடுப்பதில் என்ன பெரிதாய் இருக்கிறது. சோழ வம்சம் சேர வம்சம் போன்றவைகளை பற்றி தெரிந்து கொள்ளாவிட்டால் வாழ்க்கை என்ன கெட்டா போகும்?"

ரமா மௌனமாக இருந்தாள்.

"இதற்கு பதிலாக நீ புத்தகங்கள் படி மேகசின்ஸ் படி. ஏதாவது சிறிய கோர்ஸ் அடெண்ட்செய். ஊர் பசங்களை படிக்க வைக்கிற நேரத்தில், நம் பண்ட்டியின் மீது கவனம் செலுத்த முடிவதில்லை"

ரமா இப்போதும் மௌனமாகவே இருந்தாள்.

குந்தனுக்கு அவருடைய மௌனம் விருச்சகையை தந்தது. இருந்தாலும், குரலில் எதையும் காட்டிக் கொள்ளாமல்,"என்னாலும் என்னுடைய புது வேலையாளும் உன்னுடைய வேலையை விட வேண்டி இருக்கிறது என்று உனக்கு ஒருவேளை தோன்றலாம். ஆனால் நான் மட்டும் யாருக்காக வேலை செய்கிறேன்? உனக்காகவும் பண்ட்டிக்காகவும் தான். இதையும் கொஞ்சம் யோசித்துப் பாரேன்"

" நான் ஒன்றும் அப்படி சொல்லவில்லையே. என் மனதுக்கு எந்த விஷயம் சந்தோஷம் அளிக்கும் என்றுதான் யோசித்துக் கொண்டிருந்தேன்."

"என்னுடைய சந்தோஷம் உன்னுடைய சந்தோஷம் இல்லையா? என்னுடைய முன்னேற்றம் உன்னுடைய முன்னேற்றம் இல்லையா?"

" ஏன் இல்லாமல்? நான் சொல்ல வந்தது அது இல்லை. பத்து வருடங்களாக வேலை செய்து கொண்டிருக்கிறேன். திடீர்னு வேலையை விட்டால் எப்படி பொழுது போகும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்."

"இதைப் பற்றி எல்லாம் யோசிக்கக்கூட உனக்கு நேரம் இருக்காது. மாலை திரும்பும்போது மூன்று கட்டு புத்தகங்களை வாங்கிக் கொண்டு வந்து அவள் முன் வைத்தான்.

ஆனால் உண்மையிலேயே அதற்குப் பிறகு இதைப் பற்றி எல்லாம் யோசிக்க அவளுக்கு நேரம் எங்கே கிடைத்தது? இன்று கூட மிஸ்ஸஸ் தர்மனின் தொலைபேசி அழைப்பு தான் அவளுக்கு காலேஜை ஞாபகப்படுத்தியது. இல்லாவிட்டால்....

நாள் முழுவதும் வண்டியில் இங்கும் அங்கும் சுற்றி அவள் வீட்டுக்கான சாமான்களை வாங்கினாள். திரைச்சீலை தறிக்காரரிடம் பேசி, டிசைனையும் தானே முடிவு செய்து, நாற்பது கஜம் துணியை வாங்கிக் கொண்டாள்.

ராஜஸ்தானின் ஜமீன் குடும்பத்து சாமான்கள் ஏலத்திற்கு வந்திருந்தன. பல நாட்கள் அவள் அங்கே சென்று உட்கார்ந்திருந்தால். பழைய ஓவியங்கள், வலைப்பின்னல்கள், இன்னும் பல சிறிய சாமான்களை அவள் வீட்டை அலங்கரிக்க வாங்கினாள்.

இன்று கதவுகளை பாலிஷ் செய்யும் வேலை முடிந்து விட்டால் எல்லா சாமான்களையும் அதனதன் இடத்தில் வைக்கவேண்டும். டைரக்டர் மும்பை வந்துவிட்டார். அடுத்த வாரம் இங்கே வருவார். அதற்குள் அவள் எல்லா சாமான்களையும் ஒழுங்கு படுத்த வேண்டும். இன்டீரியர் டெக்கரேட்டர்ஸ் இடம் இருந்து ஒரு நபர் தினமும் வந்து கொண்டிருந்தார். அப்போதுதான் அவளுக்கு இன்டீரியர் டெக்கரேட்டருக்கு ஃபோன் செய்ய வேண்டியதை பற்றி நினைப்பு வந்தது.

லைன் பிசியாக இருந்தது.

அவள் வெளியே புறப்பட இருந்தபோது தொலைபேசி மணி அடித்தது.

ரமா தொலைபேசியை எடுத்தவுடன், "ஒருவேளை நீ கடைத்தெருவுக்கு கிளம்பி விட்டாயோ என்று நினைத்தேன்" என்றான் குந்தன்.

" இப்போதுதான்கிளம்பிக் கொண்டிருந்தேன்"

" டார்லிங் பகல் உணவுக்கு என்னோடு கூட ஒரு நண்பர் வருகிறார். இங்கத்திகாரர் தான். பெரிதாக எதுவும் செய்ய வேண்டாம். ஆனாலும் நீ பார்த்துக் கொள். இன்டீரியர் டெக்கரேட்டருக்கு போன் செய்தாயா?" என்றான்.

"செய்தேன். லைன் கிடைக்கவில்லை. திரும்பி வந்து மறுபடியும் செய்வேன்."

"ஓக்கே"

ரமா சமையல் அறைக்குள் சென்றாள். "கொஞ்சம் காய்கறிகளை வேக வைத்து இந்த உருளைக்கிழங்குடன் கலந்துவிடு. பரோட்டா செய்ய வேண்டாம். வெஜிடபிள் கட்லெட் செய்துவிடு."

பிறகு ஃப்ரிட்ஜை திறந்து பார்த்தாள். தேவையான எல்லா சாமான்களும் இருந்தன. அவள் காலேஜ் போய்க்கொண்டிருக்கும்போது குந்தனுடைய மதிய உணவு அவனுடைய ஆபீசுக்கு அனுப்பப்பட்டுக்கொண்டிருந்தது. இப்போதெல்லாம் பெரும்பாலும் அவன் வீட்டுக்கே சாப்பிட வந்து விடுகிறான்.

ஒன்னாம் தேதி. குந்தன் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்தான். எப்போது வீட்டுக்கு வந்தாலும் வீட்டை ஒரு முறை சுற்றி பார்ப்பது அவன் வழக்கம். இந்த புது வீட்டின் அலங்காரத்தை, அவன் ஒவ்வொரு கோணத்தில் இருந்தும் பார்ப்பது வழக்கம். அவருடைய முகத்தில் திருப்தியும் சந்தோஷமும் கர்வமும் ஜொலிக்கும். சில சமயம் இதே உற்சாகத்தில் ரவாவை அணைத்துக் கொண்டு சொல்வான் - யூ ஆர் வொண்டர்ஃபுல்! வெட்ட வெளியில் முத்தமிடுவது அவனுக்கு பிடிக்காதென்பதால், இறுகக் கட்டி அணைத்து நன்றி சொல்வான்.

வீட்டை ஒரு முறை முழுவதும் சுற்றி வந்துவிட்டு, "I think everything is in tune. Isn't it?" என்றான்.

"இப்போது யார் வந்தாலும் எனக்கு கவலை இல்லை. ஐந்தாம் தேதி டைரக்டர் வருகிறார் இந்த முறை நான் வீட்டிலேயே ஒரு பெரிய விருந்து அளிக்கப் போகிறேன்" என்றான்.

ரமா தானும் சாப்பிட்டுக் கொண்டே அவனது கட்டிலும் கவனம் செலுத்தினாள். எந்த ஐட்டம் தீர்ந்து போனதோ அதை உடனடியாக எதிரில் வைத்தாள்.

" டைரக்டரின் மனதில் இடம் பிடிக்க வேண்டும். ஒருமுறை இவர்களை இம்ப்ரஸ் செய்து விட்டால், பின் கவலை எதுவும் இல்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் டாக்டர் ஃபிஷர் என்னை பற்றி நல்ல விதமாகத்தான் சொல்வார்."

ரமா குந்தனின் குழந்தை போன்ற உற்சாகத்தை கண்டு லேசாக புன்னகைத்தாள்.

"மேம் ஸாப், உங்களுக்கு போன்"

" யாருடைய போன்? சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன், பிறகு பேசுகிறேன் என்று சொல்லிவிடு"

தானும் டாக்டர் ஃபிஷரும் இன்று பேசிய எல்லா விஷயங்களையும் கொஞ்சம் ரமாவோடு பகிர்ந்து கொள்ள விரும்பினான். எவ்வளவு தெளிவான சபிக்ஞைகள்! இருப்பினும் அவன் தன் அனுமானங்களை ரமாவோடு பேசி, விளக்கிக் கொள்ள விரும்பினான்.

"காலேஜிலிருந்து மிஸ்ஸஸ் பர்மனின் போன்" என்று வேலையாள் கூறினான்.

"கொஞ்சம் இரு" ரமா எழுந்து நின்று கொண்டாள்.

பேச்சு சுவாரஸ்யத்தில், குந்தன் சாப்பாட்டு மேஜிக் லெமன் திருப்பதைம் தானும் பாதி சாப்பாட்டில் எழுந்து வந்ததையும், அவள் சுத்தமாக மறந்து விட்டாள்.

" டார்லிங் சீக்கிரம் வா. நீங்கள் பேச ஆரம்பித்தால் போதும். சக்கரம் சுற்றுவது நிற்கவே நிற்காது."

ரமா பேசி முடித்துவிட்டு வந்து கொண்டிருந்தாள். " இதென்ன, அத்தனை அன்போடு அழைத்துப் பேசும்போது நான் மனம் விட்டு பேசாமல் இருக்க முடியுமா என்ன? இதுவும் ஒரு பேச்சா? என்றாள்.

" சரி சரி வந்து மீதி சாப்பாட்டை முடி"

"நீ சாப்பிட்டு முடித்தாகி விட்டது என்றால் எழுந்து கொள்"

"அது எப்படி முடியும்?"

சாப்பாட்டுக்குப் பிறகு காபி குடித்துவிட்டு குந்தன் சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு வளையம் வளையமாக புகையை விட்டான். பிறகு வழக்கம் போல ஐந்து நிமிடங்கள் கண்களை மூடிக்கொண்டான். ரமா செய்தித்தாளின் பக்கங்களை புரட்டத் தொடங்கினாள்.

"கிளம்பட்டுமா?" குந்தன் எழுந்து நின்று கொண்டான்.

கோட்டை கையில் எடுத்த போது சம்பளம் நினைவுக்கு வந்தது. கோர்ட்டின் உட்பக்க பகையிலிருந்து இரண்டு ரூபாய் கட்டுகளை எடுத்தான். ஒன்று சிறியது. ஒன்று பெரியது.

" அட இது என்ன சம்பளம் வாங்கி விட்டீர்களா? இன்னைக்கு ஒன்றாம் தேதி ஆகிவிட்டதா? இப்போதெல்லாம் ரமாவுக்கு தேதி கிழமை எதுவும் ஞாபகம் இருப்பதில்லை.

இது ஆயா சமையல்காரன் மற்றும் பரிமாறுபவனுக்கான சம்பளம். சின்ன நோட்டுக் கட்டை கையில் எடுத்து, "இது உன்னுடையது" என்று ரமாவிடம் கொடுத்தான். பிறகு பாவணையாக தலையை குனிந்து, " இந்த அடிமையின் சிகரெட் வெற்றிலை பாக்குக்கு என்ன தொகை போதும் என்று நினைக்கிறாயோ, அதை கொடு" என்று சிரித்தான். ரமாவுக்கும் சிரிப்பு வந்தது.

" பை பை" குந்தனின் கார் ரமாவை அங்கேயே விட்டுவிட்டு, லால் பஜ்ரியை நோக்கிச் செல்லும் சாலையில் விரைந்தது.

ஹிந்தி மூலம்: மனு பண்டாரி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com