சௌபாக்கியம் தரும் ஸ்கந்த சஷ்டி விரதம்

சௌபாக்கியம் தரும் ஸ்கந்த சஷ்டி விரதம்

தீபாவளியென்றால் புத்தாடைகள், பட்சணங்கள், மத்தாப்பு பட்டாசுகள், புது திரைப்படம் ஆகியவை மட்டும்தான் கொண்டாட்டமா என்ன? தீபாவளிக்கு முன்னும் பின்னும் கொண்டாடப்படும் மகத்தான விரதங்களும் உண்டே!

குறிப்பாக, விஜயதசமி தொடங்கி தீபாவளி அமாவாசை வரை இருபத்தியோரு நாட்கள் கடைபிடிக்கும் கேதாரகௌரி விரதமும், தீபாவளிக்குப்பின் ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படும் முருகனுக்கான ஸ்கந்த சஷ்டி விரதமும் முக்கியமானவையாகும்.

சௌபாக்கியம் அருளும் ஸ்கந்த சஷ்டி விரதத்தை இங்கு சிந்திப்போம்.

'என்றும் இளையாய் ! அழகியாய்! ஏறு ஊர்ந்தான் ஏறே!
உளையாய்! என் உள்ளத்தே உறை!'
என்று கேட்ட மாத்திரத்திலே ஓடிவந்து அருளும் உத்தம தெய்வம் குமரனல்லவா!
அவனுக்கான விரதத்தில் தன்னைப் புடம்போட்டுக் கொள்ளும் பக்தனுக்கு, கேட்டதைக் கொடுக்காமல் வேறெங்கு போவான்?!

இது மிகவும் புராதானமான விரதமும்கூட.

'முந்தொரு ஞான்று தன்னில் முசுகுந்தன் வசிட்டன் என்னும்
     அந்தணன் இருக்கை எய்தி அடிமுறை பணிந்து போற்றிக்
  கந்தவேள் விரத மெல்லாங் கட்டுரை பெரியோய் என்ன
        மைந்தநீ கேட்டி யென்னா மற்றவை வழாது சொல்வான்'
என்னும் கந்த புராணம்.

இந்திரன் முசுகுந்தனை தெய்வானைத் திருமணத்தின்போது திருப்பரங்குன்றம் அழைத்து வந்தார். அங்கு முருகப்பெருமானின் பிரபாவம் கண்டு, முருகன் அருள் பெற என்ன செய்ய வேண்டும் என வினவ, இந்த ஸ்கந்த சஷ்டி விரதம் செய்யும்வகை உபதேசம் பெற்றார். அவ்வாறே முறையாக விரதம் கடைபிடித்து, நினைத்த மாத்திரத்தில் முருக தரிசனம் பெற்றார் முசுகுந்தன் என்பது புராணம் .

ஸ்கந்த சஷ்டி விரதமானது வருடந்தோறும் ஐப்பசி மாதம் தீபாவளி அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை தொடங்கி சஷ்டி நாள் வரை ஆறுநாட்களும் மேற்கொள்ளப்படும் விரதமாகும்.மஹாசஷ்டி என்றும் வழங்கப்படுவது இதுவே.
குழந்தை பாக்கியம், திருமணம், தீராத நோயிலிருந்து விடுதலை ஆகியவற்றுக்காக காலங்காலமாக அடியார்கள் நூற்ற விரதமும் இதுவேயாகும்.

விரதமுறை:

முதலில் மஞ்சளில் நனைத்த 'காப்பு'ச் சரடைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.


விரதம் தொடங்கும் நாளில் அதிகாலையில் தலைக்குக் குளித்துவிட்டு, மடியாக துவைத்த வஸ்திரம் உடுத்தி, தயார் செய்த காப்பினை முருகன் சன்னதியில் அர்ச்சகரிடமோ, அல்லது பெற்ற அன்னையிடமோ வலது கையில் கட்டிக் கொண்டு விரதம் தொடங்க வேண்டும்.

அந்த ஆறுநாட்களும் உபவாசம் இருக்க வேண்டும். உபவாசம் என்பது உண்ணாமல் இருத்தல் மட்டுமன்று. உபவாசம் என்பதற்கு இறைவனுக்கு அருகில் இருப்பது. மனம் மொழி மெய்யால் கந்த சிவத்தை உணர்ந்தபடி தன்னுளே தான் ரமித்து இருப்பதாகும்.

-விபூதி, சந்தனம் போன்றவற்றை குலாசாரப்படி தரித்து, ருத்திராட்சம் அணிந்து, நித்ய அனுஷ்டானங்களை முடித்து பூஜை செய்ய வேண்டும்.
-பூஜையறையில் அறுகோணத்தில் கோலமிட்டு நெய் அல்லது நல்லெண்ணையில் விளக்கேற்றவும். ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றால் நறுமணம் கமழச் செய்யவும்.


-விநாயகரை முதலில் வழிபட்டு, அவருக்கு பழமோ வெல்லமோ நிவேதனம் செய்யவும்.

-முருகனை ஒரு படத்திலோ, பிம்பத்திலோ, கலசத்திலோ, அல்லது வீட்டில் பூஜையிலிருக்கும் வேலாயுதத்திலோ முருகனை ஆவாஹனம் செய்து, மலர்களால் அர்ச்சித்து வழிபடவேண்டும்.

-சுப்ரமண்ய அஷ்டோத்திரம், கந்த சஷ்டி கவசம், குமாரஸ்த்வம், வேல் மாறல் என்று தெரிந்தவற்றைப் படித்து, ஓம் சரவண பவ என்று இயன்றவரை ஜபித்து வழிபடவும்.

-மூலமந்திர தீட்சையிருப்பவர்கள் அங்க, கர நியாசங்களோடு ஜபிக்கவும்.

-பழம், பால், தேன், தினைமாவு, பஞ்சாமிர்தம், பானகம், பருப்பும் நெய்யும் இட்ட சுத்த அன்னம், பாயசம் , பஞ்சாமிர்தம் ஆகியவற்றில் யதா சக்தி படைக்கவும்.

-கற்பூர ஆரத்தி காட்டி பூஜையை நிறைவு செய்யவும்.

-மாலையில் சௌகரியம் போல பூஜை செய்யவும். முடிந்தால் அருகிலுள்ள ஆலயம் சென்று வரலாம்.

-ஓய்வு நேரத்தில் லிகித ஜபமாக ஓம் சரவண பவ, ஓம் குமராய நம:, ஓம் வசத் புவே நம: என்று ஏதோ ஓர் நாமத்தை சிலமுறை வாய்க்குள் உச்சரித்தபடி எழுதுதல்.

சஷ்டி விரதகாலத்தில் தவிர்க்க வேண்டியவை:-

-கோபம் கொள்ளுதல், பொய் சொல்லுதல், சபித்தல், கண்களையும் மனதையும் அலைபாய விடுதல்.

-பகலில் உறங்குதல், மயான பூமிக்கருகில் செல்லுதல்.

-தாம்பத்திய உறவு, கட்டில் மெத்தையில் படுத்தல், அசைவம்,மற்றும் லாகிரி வஸ்துக்கள் உபயோகித்தல்.

-உப்பிட்ட பண்டங்கள், மோர், இளநீர், எலுமிச்சை ரசம் முதலியன.

சஷ்டி விரதகாலத்தில் உணவு :

இந்த விரதம் உள்ளத்தையும் உடலையும் ஒருசேர தூய்மை செய்யும் மாமருந்தாகும்.
ஆறுநாட்களும் உமிழ்நீரைக்கூட விழுங்காது இதை அனுஷ்டித்தல் நியதி. ஆனாலும், உடல்நலம் , மூப்பு, மருந்துகள் எடுத்துக் கொள்ளுதல் ஆகியவற்றை அனுசரித்து, சில சலுகைகளைப் பெரியவர்கள் அனுமதித்திருக்கிறார்கள். அவை முறையே:-

-விரதகாலத்தில் பகற்பொழுதில் ஒரே முறை மட்டும் ஆறுமிளகு, ஆறு கை நீர் அருந்துதல்

-பால், வாழைப்பழம் உட்கொள்ளுதல்

-பகலில் ஒருவேளை முருகனுக்கு நிவேதனம் செய்த அன்னத்தில் நெய்யும், சீரகமும் சேர்த்து உண்ணுதல்.

-பகலில் மேற்சொன்னபடி உணவும், இரவில் பால்பழமும் உட்கொண்டிருத்தல்

ஆறாம் நாளான சஷ்டி அன்றேனும் உணவைத் தவிர்த்து, அல்லது நீராகராமாக உட்கொண்டும் அன்றைய தினம் சூரசம்ஹாரத்தை எங்கேனும் கோயிலில் (இயன்றால்) தரிசித்தல்.

அடுத்த நாள் முருகவழிபாடு செய்து கோயிலுக்குச் சென்று வணங்கி விரதம் முடித்து பாரணை செய்தல்.

இந்தக் கந்த சஷ்டி விரதத்தில் உணவைத் தவிர்த்து ஒட்ட ஒட்டக் காயவேண்டி வரும் என்பதினால் அஞ்சியே முருக பக்தர்கள்கூட விரதம் மேற்கொள்ளத் தயக்கம் கொள்வார்கள். அது தேவையேயில்லை. பரமதயாளன் மிகைநோக்கி மிக்கக் கொள்வான்.

இந்த விரதத்தை மேற்கொள்வதால், முருகனின் அருளோடு, நம் உடல்நலம் சீராகிறது. குறைந்த உணவு உள் அவயவங்களுக்கு ஓய்வு கொடுத்தும், தேவையற்ற கழிவுகளை அகற்றியும் புத்துணர்வோடு வைக்கிறது. ஆர்வமுடன் மனமொப்பிச் செய்யும் வழிபாட்டிலும் முருக சிந்தையிலும் நம் மனமும் பண்பட்டுப் போகிறது. தேவையற்ற பயங்கள், துர்க்குணம் நீங்கி தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் பெறுகிறது. எல்லாம் குஹமயம் என்று உணர்ந்து பக்குவம் கொள்கிறது.

தயக்கமின்றி இந்த விரதத்தை மேற்கொள்ளுங்கள். தம்பதிகளாக விரதம் காப்பது விசேஷம். சண்முக சரவணனின் அளப்பறிய கருணை உங்களையும் குடும்பத்தினரையும் சேரட்டும்.

சர்வம் குஹமயம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com