தெய்வீக தம்பதியர்

தெய்வீக தம்பதியர்

பாரதத்தின் ஒப்புயர்வற்ற தெய்வீக தம்பதியராம் திரு.சதாசிவம் திருமதி எம் எஸ் சுப்புலக்ஷ்மி பற்றிய ஒரு புகழஞ்சலி

காஞ்சி மஹா பெரியவாளிடமிருந்து எம்.எஸ் அவர்கள் காசி சுப்ரபாதம் பாடி இசைத்தட்டு வரவேண்டும் என ஆக்ஞை வர, அதை சிரமேற்கொண்ட சதாசிவம் மாமா அவர்கள், சில மாதங்களில் அந்த கட்டளையை நிறைவேற்றி முதல் பதிவை மஹா பெரியவாளிடம் அங்கீகாரம் பெறுவதற்காக கல்கி ஊழியர் திரு வீழிநாதன் மூலம் காஞ்சிக்கு கொடுத்தனுப்பினார்.

மஹாபெரியவாளும் அதை முழுவதும் கேட்டு, சிலாகித்து, ஆசீர்வதித்து அனுப்ப வீழிநாதன் அவர்கள் திரும்ப வந்து நடந்தவற்றை அவர்களிடம் சொன்னார்.ஆனால் அவருக்கு மனநிறைவு ஏற்படவில்லை.”நீங்கள் மீண்டும் போய் பெரியவாளிடம் இந்த பதிவைப்பற்றி குறிப்பாக ஏதேனும் சொல்ல பிரார்த்தித்து, அதை கேட்டு வாருங்கள்!” என அனுப்ப அவரும் மீண்டும் மடத்திற்கு வந்தார்.

“என்ன வீழிநாதா? திருப்பியும் வந்திருக்கே? என்ன விஷயம்?” இது மகா பெரியவா.

“மஹா பெரியவா இந்த பாடலை பற்றி ஏதேனும் சொல்ல கேட்கணும்ன்னு சதாசிவம் பிரார்த்திக்கிறார்”

சிறிது மௌனத்துக்குப்பிறகு மஹா பெரியவா சொல்கிறார்,,

“அவ பாடறத பத்தி நான் என்னடா புதுசா சொல்றது?

சூர்ய சந்திரா இருக்கும் வரைக்கும் அவ கியாதியும் இருக்கும்!”

=========================================================

புட்டபர்த்தியில் எம்.எஸ் கச்சேரி

முன் வரிசையில் பாபா அமர்ந்து ரசித்து கேட்டுக் கொண்டிருக்கிறார்

சில அலுவல்கள் காரணமாக அவர் அறைக்கு செல்ல விழைகிறார். எழுந்தவர் வாசல் வரை சென்று அங்கு நின்றவாறே கச்சேரியை தொடர்ந்து கேட்கிறார்.

அருகில் உள்ளவர்கள்,”பாபா அமர்ந்து கேட்கலாமே?” என அடக்கமாக கூற,அவர் சொல்கிறார்..

“நான் அறைக்கு செல்லத்தான் பிரயாசை படுகிறேன் ஆனால் இந்த தெய்வீக இசை என்னை வெளியேற விடாமல் கட்டி போடுகிறதே!”

=========================================================

♪ ♫ ♬ ஹரி தும் ஹரோ ஜன் கி பீர் ♪ ♫ ♬

கடவுள் பக்தியும் தேசபக்தியும் தம் இரு கண்களாக கொண்டு வாழ்ந்த தம்பதியினர் சதாசிவம் & எம் எஸ் எஸ் அவர்கள். காந்திஜியின் மேல் அளவற்ற மதிப்பு கொண்டிருந்த ஸ்ரீ சதாசிவம் எம்.எஸ் மூலமாக ,பல நிதி கச்சேரிகள் நடத்தி அன்னை கஸ்தூரிபா பெயரில் இயங்கி வந்த ஒரு தர்ம ஸ்தாபனத்திற்கு உதவி செய்து காந்திஜியின் அன்பிற்கும் பாத்திரமானார். வெள்ளிக்கிழமைதோறும் மகாத்மா டெல்லியில் நிகழ்த்திய பஜன்கள் சிலவற்றில் இத்தம்பதியர் கலந்துகொண்டுள்ளனர்.

எம் எஸ் அவர்களின் தெய்வீக குரலால் ஈர்க்கப்பட்ட காந்திஜி சொல்வார் “சுப்புலட்சுமி பாடும்போது தானும் இறைவனுக்கு அருகாமையில் சென்று, கேட்பவர்களுக்கும் அதே பரவசத்தை ஏற்படுத்துகிறார்.”, ஒரு முறை “ஹரி தும் ஹரோ ஜன் கி பீர்” என்ற மீரா பஜன் ஐ எம்.எஸ் பாடி கேட்க பிரியப்பட்டார். ஆனால் அந்த பாடல் இவருக்கு பாடமில்லை என திரு.சதாசிவம் அவர்கள் சொல்லி அதை வேறு யாராவது பாடி அந்த ஒலிப்பதிவை அனுப்பலாமா என கேட்டார் அதற்கு காந்திஜி சொன்ன பதில் ..

“I would rather hear that song spoken by subbulakshmi than sung by anyone else”

இதை கேட்ட திரு சதாசிவமும்,உடனடியாக அந்த பாடலை எம்.எஸ்ஸை கற்று கொள்ள வைத்து சென்னை AIR ஒலிப்பதிவு அரங்கில் அதை பதிவு செய்து டெல்லிக்கு அனுப்ப,அடுத்தநாளே மகாத்மா அதை கேட்டு மகிழ்ந்தார்.இது நடந்த நாலே மாதங்களில் 1948 ஆம் ஆண்டு ஜனவரி முப்பதாம் தேதி மாலை எம்.எஸ் அவர்கள் ரேடியோவில் தியாகராஜ ஆராதனை நிகழ்ச்சியை கேட்டுக்கொண்டிருக்க,திடீரென அது நிறுத்தப்பட்டு காந்தி கொலை செய்யப்பட்ட அந்த துயர நிகழ்வு அறிவிக்கப்பட்டது தொடர்ந்து எம்.எஸ் பாடிய அதே பாட்டு

ஒலிபரப்பப்பட,அதிர்ச்சியில் மூர்ச்சையானார் எம்.எஸ்..அடுத்த அடுத்த சில ஆண்டுகள் அவர் அந்த பாடலை பாடுவதை தவிர்த்து வந்தார்.

=========================================================

மும்பை வாழ் தென்னிந்தியர்கள் குடும்பத்தினருக்கு ஒரு தனி கல்விசாலை அவசியம் என உணர்ந்து 1932 ஆம் ஆண்டு மாதுங்கா பகுதியில் South Indian Educational Society என்ற ஒன்று ஆர்வலர்களால் தொடங்கப்படுகிறது.

பள்ளி கட்டிட நிதிக்கு பெரிய துகை தேவைப்படுகிறது.

அப்பொழுது புகழ் பெற்று வரும் பாடகி செல்வி சுப்புலட்சுமி 1936 ஆம் ஆண்டு ஒரு கச்சேரி நிகழ்த்தி அந்த வசூலை அளிக்கிறார்

அவருக்கு 1940 ஆம் ஆண்டு ஜூலை 10 ந்தேதி திரு சதாசிவம் என்பவருடன் திருமணம் நிகழ்கிறது.அதற்கு பிறகும் 1945,1947 ஆம் ஆண்டுகளில் கச்சேரிகள் நிகழ்த்தி அதன் மூலம் பெருமளவு உதவுகிறார்

இன்று அந்த நிறுவனம் உலக அளவில் புகழ் பெற்று சுமார் 25000 மாணாக்கர்களை கொண்டு சிறந்து விளங்குகிறது.அவர்கள் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் இந்த தம்பதியர் கொடுத்த மொத்த நிதி 175176-1-6 (ரூ அணா பை) என்றும் மொத்த கட்டிட செலவான 187908-11-6 (ரூ அணா பை) இல்,இது 93சதவிகிதம் என்றும் நெகிழ்ந்து நினைவு கூருகிறார்கள்.

நில மதிப்பின்படி ஒப்பிட்டால் இதன் இன்றைய மதிப்பு சுமார் ரூ120 கோடிக்கு சமம்.

இது அந்த தெய்வீக தம்பதியினர் தங்கள் வாழ்நாளில் செய்த கொடையில் ஒரு சிறு துளி மட்டுமே.

மஹாபெரியவா சொல்கிறார்...

“நீங்களெல்லாம் சம்பாதிப்பதில் ஒரு பகுதியை தர்மம் செய்கிறீர்கள்! சதாசிவம் சம்பாதிப்பதே தர்மம் செய்யத்தான்!”

இதற்கு மேல் நம் போன்ற மானிடர்களால் என்ன சொல்ல இயலும்?

=========================================================

சதாசிவம் மாமா கண்டிப்பு அன்பு, தயாளகுணம் ஆகியவற்றின் உருவாக்கம் என்றால் எம்.எஸ் அவர்களோ அன்பு, அடக்கம், பக்தி ஆகியவற்றின் உருவாக்கம்.

எம்.எஸ்.அம்மா பாடலில் என்ன அப்படி ஒரு சிறப்பு என்று கேட்டால் நான் சொல்லுவேன்.. “பக்தி”& “Bhaவம்”

இவர் பாடும் பாடல்களை இவரைவிட சிறப்பாக அதன் வாக்கேயகாரர்களே பாடமுடியும்.

இவர் பாடிய “கர சரணம்”என்ற பெளலி ராக விருத்தத்தை அதிகாலையில் கேட்டால் அது நம் அகத்தை கைலாயமாக்கும்.

ஒரு ♪ ♫ ♬ “மீன லோசனி பாச மோசனி” ♪ ♫ ♬ நிரவல் நம்மை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கொண்டு செல்லும்

ஒரு ♪ ♫ ♬ “கா வா வா” ♪ ♫ ♬ பாடல் நம் முன் அறுபடை முருகனை கொணரும்

ஒரு ♪ ♫ ♬ “பஸோ மோரே” ♪ ♫ ♬ எனும் மீராவின் கானம் அந்த கிரிதாரியை நமக்கு அருளச்செய்யும்

அவர் ♪ ♫ ♬ “நாராயணா என்னா நாவென்ன நாவே?” ♪ ♫ ♬ என்று கதறினால் நம் நாக்கு நம்மையறியாமால் “நாராயண,நாராயண” என்று சொல்லும்

அவர் பாகேஸ்வரியிலும் ,நாதநாமக்கிரியாவிலும், சுபபந்துவராளியிலும்

♪ ♫ ♬ “கிருஷ்ண கிருஷ்ணா முகுந்தா

“ஜனார்த்தனா!கிருஷ்ண கோவிந்த நாராயணா ஹரே!” ♪ ♫ ♬

என்று கரையும் போது நம் ஆன்மாவே கசிந்துருகும்

“என்னிடம் அது இல்லை! இது இல்லை!” என்று சதா ஏங்கும் நம் மனசு, இவர்

♪ ♫ ♬யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்

ஏதும் தர நிற்கும் கருணை கடல் அன்னை

என்றும் இருந்திட ஏது குறை எனக்கு?” ♪ ♫ ♬

என்று பாட கேட்டால்,

“எனக்கா? குறையா? அப்படி எதுவுமில்லையே!” என்று சத்தியம் செய்யும்

அப்புறம் அந்த மொழி வளம், உச்சரிப்பு....

இவரின் விஷ்ணு சஹஸ்ரநாமம் பதிவு கேட்டுவிட்டு அக்னிஹோத்தரம் ஸ்ரீ ராமானுஜ தாத்தாச்சாரியார் "இது ஒரு சிறு பிழையும் இல்லாத உச்சரிப்பு" என்றார்

அதே நயம்தான் இவரின் ஹிந்தி,பெங்காலி தெலுகு மலையாள கன்னட உச்சரிப்புக்கும் பொருந்தும்.

மீரா பஜன் தான் பாடி பதிவு செய்தபின் லதா மங்கேஷ்கர் சொல்கிறார் “எம்எஸ் அம்மா பாடிய தரத்தில் பாதி இருந்தால் கூட அதை சாதனையாக எண்ணி மகிழ்வேன்!”

அப்புறம் அவருடைய சௌந்தர்யம்! டிரஸ் sense.!! ஆஹா!

MS blue நிற புடவை,

அந்த பிச்சோடாவை சுற்றி வைத்த மல்லிகை செண்டு;.,

நெற்றியில் வைத்திருக்கும் மங்கலமான குங்குமம்;

கண்களில் மை,ஜொலிக்கும் மூக்குத்தி.;

என்ன உச்ச ஸ்தாயி என்றாலும் முழங்கை கூட தெரியாமல் இழுத்து போர்த்திக்கொண்டு மேடையில் அமர்ந்திருக்கும் நேர்த்தி,

கச்சேரி முழுவதும் முதல் வரிசையில் உள்ள தன் கணவருடன் கண் தொடர்பில் இருக்கும் திறமை,

ஒரு சங்கதி தான் எதிர்பார்த்த அளவு வராவிட்டால்,காண்பிக்கும் அந்த nano நொடி முகச்சுளிப்பு,

பின்பாடுபவர் ஏதேனும் slip செய்தால் முகத்தை சற்றே திருப்பி அவரிடம் கண்களால் காட்டும் கண்டிப்பு.

ஒவ்வொரு பாடலிலும் அதன் ராக லட்சணத்தையும் பாடலின் பொருளையும்,தன் முக bhaவத்தால் காண்பிக்கும் அறிவு,

எதை சொல்லி எதை விடுவது?

நூறு பெண்மணிகள் இருக்கும் குழுவிலும் இவர் தனித்து தெரிவார்!.அப்படி ஒரு தேஜஸ்.

கச்சேரியில் மேடை திரை விலகி இவர் கைகூப்பி “ஓம் நமப்பிரணவார்த்தாய!” என்று ஆரம்பித்தால் அரங்கத்தில் உள்ள அனைவரும் உடனே கைலாயத்திற்கும்,வைகுண்டத்திற்கும் hijack செய்யப்படுவர்.

இந்த புவனம் உள்ள வரை இந்த தெய்வீக தம்பதியரின் புகழிருக்கும்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com