திரையிசையும் தீபாவளியும் 

திரையிசையும் தீபாவளியும் 

'புது புடவை கட்டிண்டா தான் தீபாவளியா? இருக்கிறதலையே நல்லா இருக்கிறதை எடுத்து கட்டிக்கோ. பால் இருக்கா? சர்க்கரை இருக்கா? பால் பாயாசம் வை. அதுதான் தீபாவளி'

சென்னையில் பல நடுத்தர குடும்பங்கள் வசிக்கும் ஒரு ஒண்டிக்குடித்தனம். அதில் ஒருத்தன் வாடகைக்கு வீடு பார்த்து கொடுக்கும் தரகர் தொழில் செய்பவன். வாடிக்கையாளர் ஏமாற்றி விட்டதால் கையில் பணமில்லை. தீபாவளி நெருங்குகிறது. அவன் மனைவியை பார்த்து அதே குடியிருப்பில் வசிக்கும் வயதான பெண்மணி தீபாவளி பற்றி பேச்சு எடுக்கும் போது அந்த பெண் தன் கணவரின் தூரத்து அத்தை ஒருத்தர் கடந்த ஜனவரியில் தவறி விட்டதால் அந்த வருடம் அவர்களுக்கு தீபாவளி இல்லை என்று கூறி விடுகிறாள். உண்மையான காரணத்தை ஊகிக்கும் அந்த பக்கத்து வீட்டு அம்மா கண்களில் புரிதலின் வாஞ்சையோடும் குரலில் கருணையின் கனிவோடும் சொல்லும் அறிவுரை தான் மேலே குறிப்பட்டது.

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விசுவின் 'குடும்பம் ஒரு கதம்பம்' படத்தில் இடம் பெற்றிருந்த இந்த காட்சி நிச்சயம் ஞாபகம் இருக்கும். என் பாட்டிக்கு மிகவும் பிடித்த படங்களில் இது ஒன்று- குறிப்பாக தீபாவளி சம்பந்தப்பட்ட இந்த காட்சிகள். பல நடுத்தர வர்க்க மக்களுக்கு தங்களின் அன்றாட வாழ்க்கையை நேரலையாக பார்த்தது போல் இருந்தன இக்காட்சிகள்.

எப்படி தமிழர் வாழ்வியலோடும் கலாச்சாத்தோடும் தீபாவளி பண்டிகை ஒன்றெனக் கலந்திருக்கிறதோ, அதே போல் தமிழ் சினிமாவிலும் பல தீபாவளி சம்பந்தப்பட்ட காட்சிகளும் பாடல்களும் கதையோட்டத்தோடு கலந்து இடம்பெற்றிருக்கின்றன. புதிய ஆடைகள், பட்டாசு, பலகாரங்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்தித்தல், விடுமுறைகள்- சலிப்பூட்டும் தினசரி வாழ்க்கையிலிருந்து மாறுபட்டு ( தற்காலிகமானதுதான் என்றாலும்) குதூகலம் கொண்டு வருவது இந்த திருநாள். இதை அழகாக பிரதிபலித்திருக்கின்றன காலக்கண்ணாடிகளான திரைப்படங்கள். ஏன், நாமும் ஒவ்வொரு தீபாவளிக்கும் வெளிவந்த திரைப்படங்களைக் காண ஆவலாக காத்திருந்த காலங்களை மறக்க முடியுமா?

திரையிசையும் தீபாவளியும் என்ற தலைப்பு பல பாடல்களை நினைவில் கொண்டு வந்து நிறுத்தியது. தமிழ் திரையிசை புரண்டு வந்த தடங்களில் பின்னோக்கி பயணித்தால் இந்த வரிசைக்கு பிள்ளையார் சுழியாக என் மனதில் முந்தியடித்து வந்து நின்றது 1939ல் வெளிவந்த தியாகபூமி படப்பாடல். திரு 'கல்கி' கிருஷ்ணமூர்த்தியின் கதையிலிருந்து இந்த வரிசையை தொடங்குவது மகிழ்ச்சியான தற்செயல்!

K.சுப்ரமணியம் இயக்கத்தில் தியாகபூமி படம் தயாரிப்பில் இருந்தபோதே படக்காட்சிகளின் படங்களோடு கதை ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நெடுங்கரை கிராமம். தலை தீபாவளிக்கு கல்கத்தாவிலிருந்து தன் கணவன் ஸ்ரீதரனின் வரவை ஆவலோடு எதிர்பார்த்து இளம்பெண் சாவித்திரி பாடுவதாக அமைந்த பாடல். பாடலை பாபநாசம் சிவனும் ராஜகோபாலய்யரும் எழுத, பாபநாசம் சிவனும் மோதிபாபுவும் இசையமைத்திருக்கிறார்கள். சாவித்திரியாக நடித்து பாடலை பாடியிருப்பது ஸ்ரீவைகுண்டம் துரைசாமி சுப்புலட்சுமி என்ற S.D.சுப்புலட்சுமி ( இயக்குனர் சுப்பிரமணியத்தின் மனைவி, 'அபஸ்வரம்' ராம்ஜியின் தாயார்). அந்த காலக்கட்டத்தில் பிரபலமாக இருந்த 'சலோ சலோ' என்ற ஹிந்தி பாடலின் மெட்டை தழுவியிருந்தாலும் மோர்சிங் போன்ற வாத்திய ஜோடனைகளுடன் இனிமையாக ஒலிக்கும் பாடல்... பட்டாசு, மத்தாப்பு, கணவன் வருகை, ருசியான பலகாரம், புதுப்புடவை என தீபாவளியின் சந்தோஷங்களை உற்சாகமாய் பட்டியலிடுகிறாள் இந்த பெண்...

நம் வரிசையில் அடுத்து வருவது வடுவூர் துரைசாமி ஐயங்காரின் துப்பறியும் கதையை M.N.நம்பியாரை 11 மாறுவேடங்களில் நடிக்க வைத்து மாடர்ன் தியேட்டர்ஸ் 1950ல் வெளியிட்ட 'திகம்பர சாமியார்' படத்தில் இடம்பெற்ற 'ஊசிப்பட்டாசே' பாடல். இதுவும் ஹிந்தி பாடலின் மெட்டு தான் ( பதங்கா என்ற படத்தில் சம்ஷாத் பேகமும் C. ராமச்சிந்திராவும் இசைத்த 'ஓ தில்வாலோன் தில் கா லக்னா). படத்துக்கு S.M.சுப்பையா நாயுடுவும் G. ராமநாதனும் சேர்ந்து இசையமைத்திருந்தார்கள். இந்த பாடலை திருமணியம்பாளையம் ரங்கராஜூ கஜலட்சுமி என்ற T.R.கஜலட்சுமியுடன் பாடியது ராமநாதனின் உதவியாளர் V.T.ராஜகோபாலன். திரையில் தோன்றுவது Baby லலிதா. குழந்தையின் குதூகலத்தை ரசிக்கும் பெரியவர்- இருபத்தி நான்கே வயதான V.K.ராமசாமி!

அடுத்த வருவது தமிழ் சினிமா வரலாற்றில் சிறப்புமிக்க இடம் பெற்ற படத்திலிருந்து ஒரு தீபாவளி பாடல். மக்கள் திலகமும் நடிகர் திலகமும் இணைந்து நடித்த ஒரே படம்- கூண்டுக்கிளி (1954). இந்த படத்திலிருந்து K.V.மகாதேவன் இசையமைப்பில் கவி கா.மு.ஷெரிப் எழுதி TMS, V.N.சுந்தரம், (ராதா) ஜெயலட்சுமி, K.ராணி குழுவினர் பாடி, திரையில் குசலகுமாரி குழுவினர் ஆடிப்பாடும் பாடல் 'வாங்க எல்லோரும் சேர்ந்து ஒன்றாகவே தீப நன்னாளை அன்பாக கொண்டாடுவோம்'

அடுத்து, SSR, பிரேம் நசீர், M.N.ராஜம், மைனாவதி ஆகியோர் நடிப்பில் 1959ல் வெளிவந்த 'கல்யாணிக்கு கல்யாணம்' படத்திலிருந்து TMS, A.P.கோமளா, P.லீலா குழுவினர் பாடிய 'வருஷத்திலே ஒரு நாளு தீபாவளி' என்ற இனிமையான பாடல். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதி, G. ராமநாதன் இசையமைத்தது. துள்ளி ஓடும் நதி ஒரு திருப்பத்தில் நின்று அந்த கரையில் இருக்கும் செடி-கொடிகளோடு கொஞ்சிவிட்டு மீண்டும் தன் பாதையில் பாய்ந்து செல்வதை போல பாடலினிடையே TMS- லீலாவின் காதல் பரிமாற்றங்கள் நம்மை ஆரவாரமற்ற அந்த காலத்துக்குள் அழைத்து செல்கின்றன.

அதே 1959ல் அதே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல் தீபாவளியின் அதிகாரப்பூர்வமான கீதமாக காலங்கள் கடந்தும் வானொலியில் ஒலிக்கும் பாடல். பட்டுக்கோட்டையாருடன் இணைந்து ஸ்ரீதரும் A.M.ராஜாவும் P.சுசீலாவும் சரோஜாதேவியும் வழங்கிய இந்த தீபாவளி பரிசு ஒரு விலைமதிப்பற்ற பொக்கிஷம். 'உன்னைக் கண்டு நானாட என்னைக் கண்டு நீயாட உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி'

சிறையிலிருந்து தப்பி வந்த மூண்று கைதிகள் ஒரு அப்பாவி பலசரக்கு கடைக்காரரின் வீட்டில் தஞ்சம் புக நேர்கிறது. அந்த எளியவரின் நற்பண்புகளை கண்டு, அவர் காட்டும் அன்பினில் கட்டுண்டு இவர்கள் மனமும் மாறுகிறது. அந்த குடும்பத்திற்கு வேண்டிய உதவிகளை செய்கிறார்கள். 'ஆம்ஹி ஜடோ அமுச்யா கவா' என்ற மராத்திய படத்தின் மூலக்கதையைத் தழுவி இப்படி சுவாரஸ்யமாக செல்கிறது 1971ல் சிவாஜி கணேசன், முத்துராமன், நாகேஷ், சுப்பையா, சிவகுமார், சந்திரகலா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த 'மூண்று தெய்வங்கள்' படம். தீபாவளி சமயத்தில் அந்த கடையின் விற்பனையை பெருக்கி மூண்று பேரும் அந்த குடும்பத்தை மகிழச் செய்கிறார்கள். அந்த கட்டத்துக்கு மெல்லிசை மன்னர் இசையில், கவிஞர் கண்ணதாசன் எழுதி TMS பாடிய ஒரு அற்புதமான பாடல் 'தாயெனும் செல்வங்கள் தாலாட்டும் தீபம்'

கமலஹாசனுக்கும் ஒரு தீபாவளி பாட்டு உண்டு. மூன்றாம் பிறை படத்தின் 'பூங்காற்று புதிதானது' பாடலில் ஒரு நொடிப்பொழுதில் வந்து மறையும் தீபாவளிக் காட்சியை நான் குறிப்பிடவில்லை. தர்மேந்திரா- ஹேமாமாலினி நடித்த 'ஜுக்னு' ஹிந்தி படக்கதையை தழுவி தமிழில் 'குரு' என்ற பெயரில் கமல்- ஸ்ரீதேவி நடிப்பில் இயக்கினார் I.V.சசி. 1980ல் வெளிவந்த 'குரு' தமிழ்நாட்டையும் தாண்டி இலங்கையிலும் மாபெரும் வெற்றி பெற்றது.

இதில் கவிஞர் கண்ணதாசன் எழுதி இளையராஜா இசையில் S.P. பாலசுப்பிரமணியம் குழுவினர் பாடிய ஒரு அட்டகாசமான தீபாவளி பாடல் இடம்பெற்றிருந்தது. தன் அன்னையின் நினைவில் தான் நடத்தும் பார்வதி நிலையத்தில் அங்கிருக்கும் ஆதரவற்ற குழந்தைகளோடு குரு தீபாவளியை விமர்சையாக கொண்டாடுகிறார்....

🎵தீபங்கள்..இங்கு ஏற்றுங்கள்....

திருவிழா தெய்வ பெரு விழா...

கண்ணனை எண்ணும் ஒரு விழா....🎵

சூப்பர் ஸ்டார் இல்லாத தீபாவளி பாடல் வரிசையா? எனக்கு மிகவும் பிடித்த ரஜினியின் படங்களில் ஒன்று 'புதுக்கவிதை' (1982). ராஜ்குமாரின் 'நா நின்ன மரெயலாரே' என்ற கன்னட படத்தின் கதை, விசுவின் திரைக்கதை வசனத்தில் தமிழாக்கம் பெற்றிருந்தது. ஒரு இளைஞனுக்கு, காதல் தோல்வி எற்படுத்திய காயங்களுக்கு மருந்தாக ஒரு குடும்பத்தின் அன்பு கிடைக்கிறது. தீபாவளி திருநாளில் தன் சோகங்களை மறந்து அந்த வீட்டு குழந்தையை கொஞ்சி அவன் ஒரு பாடல் பாடுகிறான். வைரமுத்துவின் வரிகளை இளையராஜாவின் இசையில் மலேசியா வாசுதேவன் மென்மையாக பாடும்போது தீபாவளி இன்னும் களைகட்டுகிறது.

🎵தெருவெங்கும் ஒளிவிழா.... தீபங்களின் திருவிழா....🎵

அதே 1982ல் வந்த இன்னொரு தீபாவளி பாடல். மாமியார்- மருமகள் உறவு என்ற அரைத்த மாவிலேயே வார்க்கப்பட்ட கதையை கொண்டு, ரகுவரன், சந்திரசேகர், சுஹாசினி, வடிவுக்கரசி, சுகுமாரி நடிப்பில் வந்த 'மருமகளே வாழ்க' படத்தை பலரும் மறந்திருக்கலாம். ஆனால் கவிஞர் முத்துலிங்கம் எழுதி, சங்கர்- கணேஷ் இசையில் P.சுசீலாவும் S.P.சைலஜாவும் பாடிய இந்த தீபாவளி பாடலை எண்பதுகளில் வளர்ந்த யாராலும் மறக்க முடியாது. அந்த காலக்கட்டங்களில் தீபாவளி சமயத்தில் வானொலியிலும் ஒளியும் ஒலியமிலும் அமர்க்களமாய் இடம்பெற்ற பாடலிது. ஒரு கூட்டு குடும்பத்தில் தீபாவளி கொண்டாட்டங்களை அழகாய் சித்தரிக்கும் பாடல்.

🎵இசை பாடுவோம்.... அன்பில் உறவாடுவோம்.... திருநாளிலே ஒண்றாய் சேர்ந்தே இன்பம் காணுவோம்..🎵

ஒரு பாட்டிக்கும் பல வருடங்களாக பிரிந்திருந்து அவருடன் இணையும் பேத்திக்கும் இடையே மலரும் பந்தத்தை ஒரு கவிதையை போல் சொன்ன படம் ஃபாசிலின் 'பூவே பூச்சூடவா' (1985). நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ்த்திரையில் தோன்றிய பத்மினியும் புதுமுக நடிகை நதியாவும் நமக்கு தெரியவில்லை....நினைவிலும் இல்லை. சிடுமூஞ்சி பூங்காவனத்து அம்மாவும் குறும்புக்காரி சுந்தரியும் தான் நம் இதயங்களில் என்றென்றும் குடிகொண்டு விட்டார்கள்.

மலையாள மூலமான 'நோக்கெத்த தூரத்து கண்ணும் நட்டு' படத்தில் பாடியிருந்த சித்ராவின் குரல் பிடித்துவிடவே, இளையராஜா அவரை சென்னைக்கு வரவழைத்தார். அப்படி தொடங்கியதுதான் 'சின்னக்குயில்' சித்ராவின் தமிழ்த்திரையிசை பயணம்.

இதோ வைரமுத்துவின் வரிகள், இளையராஜாவின் இசை, சித்ராவின் குரல் அமைத்த கூட்டணியில் ஒரு இளம் பெண்ணின் உற்சாகமான தீபாவளி கொண்டாட்டங்கள் துள்ளளுடன் அரங்கேறுகின்றன....

🎵பட்டாச சுட்டுச்சுட்டு போடட்டுமா...🎵

1987ல் சிவாஜி கணேசன், லட்சுமி, முரளி, ரஞ்சனி ஆகியோரின் நடிப்பில் வந்த படம் 'குடும்பம் ஒரு கோயில்'. K.பாலாஜி தயாரிப்பில் நடிகர் திலகம் கடைசியாக நடித்த படம். படத்தில் ஒரு இனிமையான தீபாவளி பாடல். M.ரங்காராவின் இசையமைப்பில், புலவர் புலமைப்பித்தன் வரிகளை S.P. பாலசுப்பிரமணியமும் சித்ராவும் பாடியிருக்கிறார்கள்.

ஒரு மாமனாருக்கும் மாப்பிள்ளைக்கும் உள்ள உறவை ஒரு நெகிழ்ச்சியான கண்ணோட்டத்தில் காட்டியது இயக்குனர் V.சேகரின் 'நான் புடிச்ச மாப்பிள்ளை' (1991). மாமனார் பிச்சாண்டியாக ஜனகராஜ் பிரமாதமாக நடித்திருந்தார். இதோ இந்த படத்திலிருந்து சந்திரபோஸ் இசையமைத்து பாடும் ஒரு அட்டகாசமான தீபாவளி பாடல்-

🎵தீபாவளி தீபாவளிதான்....🎵

தொண்ணூருகளிலிருந்து தமிழ் சினிமாவில் குடும்ப கதைகள் குறைந்து போயின. அதனால் நம் பண்டிகைகள் சம்பந்தப்பட்ட காட்சிகள், பாடல்கள் திரைக்கதைகளிலிருந்து மெல்ல மெல்ல மறைந்து போயின.

இந்த மாற்றங்களுக்கெல்லாம் சற்றும் அசராமல் இயக்குனர் V.சேகர் மட்டும் குடும்ப படங்களை தொடர்ந்து வெளியிட்டு கொண்டிருந்தார். அவற்றில் சில தீபாவளி பாடல்களும் இடம் பெற்றிருந்தன.

ஏன், அதே 1991ல் V.சேகர் இயக்கத்தில் சந்திரசேகர், பானுப்ரியா, தேவிஸ்ரீ, கோவை சரளா ஆகியோர் நடிப்பில் 'பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்' என்ற படத்திலும் சந்திரபோஸ் இசையில் ஒரு அருமையான தீபாவளி பாடல் இடம்பெற்றிருந்தது.

'வந்தாளே தெற்குச் சீமையிலே' என தொடங்கும் இந்த பாடலின் சிறப்பு என்னவென்றால் தமிழ் திரையிசையின் சிறந்த பிண்ணனி பாடகிகளான P.சுசீலா, S.ஜானகி, வாணி ஜெயராம் ஆகிய மூவரும்

இணைந்து பாடிய ஒரே பாடல் இது!

லிவிங்ஸ்டன், குஷ்பு, விவேக், கனகா, வடிவேலு, கோவை சரளா, ஊர்வசி போன்றோர் நடித்து 1999ல் வெளிவந்த V.சேகரின் 'விரலுக்கேத்த வீக்கம்' படத்திலிருந்து கவிஞர் வாலி எழுதி தேவா இசையமைத்து பாடிய 'அல்லி அல்லி அல்லி அல்லி தீபாவளி' பாடல் பட்டி தொட்டு எங்கும் ஒலித்தது.

அதேபோல் முரளி, மீனா, விவேக், விந்தியா நடித்து 2002ல் V.சேகர் இயக்கத்தில் வெளிவந்த 'நம்ம வீட்டு கல்யாணம்' படத்தில் கவிஞர் தாமரை எழுதி S.A. ராஜ்குமார் இசையமைப்பில் S.P.பாலசுப்ரமணியம், சித்ரா குரல்களில் ஒலித்தது 'மின்னுது மின்னுது பொன்னென மின்னுது' பாடல்.

அதே 2002 தீபாவளிக்கு வெளிவந்து சக்கைப்போடு போட்ட படம் விஜயகாந்த், சிம்ரன் நடித்து A.R.முருகதாஸ் இயக்கிய 'ரமணா'. இந்த படத்தில் இளையராஜா இசையில், கவிஞர் மு.மேத்தா எழுதி, உன்னிகிருஷ்ணன், சாதனா சர்கம், பவதாரணி குழுவினர் பாடிய 'வானம் அதிரவே' ஒரு துள்ளலான தீபாவளி பாடல்.

2004ஆம் தீபாவளியன்று சரண் இயக்கத்தில் அஜித்குமார் இரு வேடங்களில் நடித்து வெளிவந்த 'அட்டகாசம்' படத்தில் வைரமுத்து எழுதி, பரத்வாஜ் இசையில் மனோ குழுவினர் பாடிய 'தெற்குச் சீமையிலே' பாடல் கும்மாளமும் குத்தாட்டமுமாய் தீபாவளியை கொண்டாடுகிறது.

இவ்வாறு தமிழ்த்திரையில் வந்த தீபாவளி பாடல்கள் அந்தந்த காலக்கட்டங்களின் வாழ்வியலை, ரசனைகளை பிரதிபலிக்கின்றன. எது வேறுபட்டாலும் எல்லா பாடல்களிலும் பொங்கி வருவது தீபாவளி தன் கையோடு அழைத்து வரும் மகிழ்ச்சியும் உற்சாகமும் தான். அவை என்றென்றும் நிலைத்து நிற்கும்.

🎵அட இன்றே... வரவேண்டும்...

என் தீபாவளிப் பண்டிகை...🎵

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com