
கொடி கம்பத்தை ஒட்டி இருந்த மேடை டெகரேஷனை சரிபார்த்தவாறு நின்றிருந்த தமிழ்செல்வி… "அந்த பாரதமாதாவை நடுசென்டரில் நிறுத்துப்பா தம்பி."..என கரெக்ஷன் சொல்லிகொண்டிருந்தாள்.
மேற்பார்வை செய்ய வந்த தலைமையாசிரியர் ஜெயராமன்… "என்னம்மா தமிழ்! ஏற்பாடெல்லாம் சரியா இருக்கா…ஒரு குறையும் வராதே…நாளைக்கு
எம்.எல்.ஏ கொடியேத்த வரும்போது எதுவும் பிரச்னையாகிட கூடாதும்மா பாத்து கவனம்..மா" என்றார்.
"சார்! நீங்க கவலைபடாம போங்க நான் பாத்துக்குறேன்…" என்ற தமிழ்செல்வியை "எனக்கு தெரியும்மா உன்கிட்ட ஒரு பொறுப்பை கொடுத்தா அதை நல்லபடியா முடிக்காம ஓயமாட்டேன்னு…" என்றார் சிரிப்புடன்.
தமிழ்செல்வி இந்த பள்ளிக்கு மாற்றலாகி வந்து இரண்டு வருடங்களே ஆகின்றனக்ஷ என்றால் யாருமே நம்ப மாட்டார்கள்… சிதிலமடைந்திருந்த பள்ளியை ஊர் பெரிய மனிதர்கள் உதவியோடு சீர்படுத்தினாள்… பல நண்பர்கள், ஆசிரியர்கள் உதவியுடன் அந்த அரசு பள்ளியை தனியார் பள்ளியை போல் நவீனமாக்கினாள்.
தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் நவீன கழிப்பறைகளை உருவாக்கியதோடல்லாமல்… மாணவ செல்வங்களுக்கு அதை சுத்தமாக வைத்திருப்பது எவ்வாறு என அறிவுறுத்தினாள்… சக ஆசிரியர்கள் ஊர்மக்கள் என அனைவரிடமும் நன்மதிப்பை பெற்றிருந்தாள்.
நான்காம் வகுப்பு ராகவ்… "டீச்சர்… என கத்தியவாறு ஓடி வந்தான்…நாம நட்டு வைத்த மாமர கன்று துளிர்த்திருக்கு டீச்சர்" என மகிழ்வோடு சொல்லியபடி ஓடி வந்தான்.
குழந்தையின் குதுகலத்துடன் ஓடிவந்து… "அட! ஆமால்ல"…என ஆசையாக தடவி பார்த்தாள் தமிழ்.
"நாம நட்ட ரோஜா செடியும் மொட்டு விட்டிருக்கு டீச்சர்… நாளைக்கு பூத்திடுமே" என குதுகலித்தாள் மைதிலி.
போனவாரம் விதைத்திருந்த கீரை விதைகள் பச்சை பசேலேன வளர்ந்து விட்டிருந்தன பாத்திகளில்…"நாளை குழந்தைகளின் மதிய உணவிற்கு ஆகுமே…" என நினைத்து கொண்டாள்.
"எல்லாம் உங்க உழைப்புதானே செல்லங்களா! நாம இன்னும் கொஞ்சம் காய்கறி செடிகளையும் வைப்போம். நம்ம சத்துணவிற்கு தேவையான காய்கறிகளை நாமே நட்டுவைப்போம்… நாளைக்கு அந்த மீதி இடத்தில் சுத்தம்பண்ணி வைச்சிடுவோம்…சரியா?" என உற்சாகபடுத்தினாள்.
"சரிங்க டீச்சர்" என்றபடி குதித்துகொண்டே விளையாட ஓடினர் குழந்தைகள்.
மண்ணை சீர்படுத்தி கொண்டிருந்த தமிழ்செல்வியை தூரத்திலிருந்து பார்த்து கொண்டிருந்தாள் கங்கம்மா பாட்டி.. தமிழ்செல்வி தலைநிமிர்வதற்காக காத்திருந்தவள் போல தமிழை நோக்கி வந்தாள் தயங்கியவாறு…
"என்ன கங்கம்மா ஆயா சவுக்கியமா? ஏது இவ்ளோ தூரம்…"
"உம்புண்ணியத்துல நல்லாயிருக்கேன் தாயி….மேலுக்கு சுகமில்லை…டவுன் ஆஸ்பெத்திரிக்கு போவணும்… எம்பேத்திகிட்ட சொல்லிடுறீயா?"
"என்ன ஆயா உடம்புக்கு?"
"அதுகென்ன தாயீ வயசாயிடுச்சி…போற காலத்துல ஏதாவது வந்து தானே ஆகணும் இந்த பொட்ட புள்ளைய நினைச்சாதான் கலவரமாயிருக்கு… தாயில்லா புள்ள… பொறவு யார் பாத்துப்பாக " என புலம்பினாள்.
"உனக்கென்ன ஆயா. நீ நூறுவருஷம் நல்லாயிருப்ப. கவலைபடாம போய்வா. பேத்திகிட்ட நான் சொல்லிடுறேன்…" என்றவாறு இருநூறு ரூபாயை கங்கம்மாவின் கைகளில் திணித்தாள்.
"தாயீ..ஏற்கனவே கொடுத்ததே போதும்… பெத்தபுள்ளைகளே சட்டை பண்ணாத இந்த காலத்துல பெத்த மகராசியாட்டமா செய்யுற… வேணாம் தாயீ…" என பதறினாள்.
"வெச்சுக்க ஆயா…எங்கம்மாவா இருந்தா செய்யமாட்டேனா?" என
அன்புடன் கைகளில் பணத்தை அழுத்தினாள் தமிழ்.
கண்கலங்கியவாறு விடை பெற்று சென்றாள் கங்கம்மா… "நல்லாயிருப்ப தாயீ" என சொற்கள் காதில் விழுந்தது.
சட்டென நினைவு வந்தவளாக நாளைய கலைநிகழ்ச்சிகள் நினைவுக்கு வர ரிகர்சல் நடக்கும் அந்த வகுப்பறைக்குள் வேகமாக சென்றாள் தமிழ்.
'குமரன் தி கிரேட் பேட்ரியாட்' என்ற தலைப்பின் கீழ் வீரம் பொங்க
பேசி கொண்டிருந்தாள் மணிமொழி… அவள் மொழியறிவு நிஜமாகவே மணிமணியாக இருந்தது… தமிழ்செல்வி மாற்றலாகி வரும்போது ஆங்கிலத்தை கண்டு அலறிய மாணவிகளில் முதன்மையானவள் இந்த மணிமொழி… தற்போதைய மாற்றத்தை கண்டு தமிழுக்கே ஆச்சரியம் தாங்கவில்லை. பெருமிதம் பொங்க பார்த்து கொண்டே நின்றாள்.
'மீசை நாயகன் எம் பாரதியென' கவிதை ஒன்றினை மனனம்
செய்துகொண்டிருந்தாள் மகாலட்சுமி… நாளை மேடையில் முழங்க…
போனவருடம் பள்ளியில் சேர்ந்தபோது எழுதவே தெரியாத ஞானசேகரன் இன்று கட்டுரை போட்டியில் முதல் பரிசை வென்றிருக்கிறான்… அவன் அம்மா தன் கைகளை பிடித்து கண்களில் ஒற்றி கொண்டது நினைவில் வந்து போனது தமிழ்செல்விக்கு.
ஓரிடத்தில் நண்டும் சிண்டுமாக … 'பாரத தாயை பணிந்து வணங்கும் வீரமைந்தர் நாம்…அர்ப்பணமாவோம் அவள் தாளினிலே தூய மலர்கள் நாம்' என்று உணர்ச்சி பொங்க கோரஸாக பாடி கொண்டிருந்தது மனதை அப்படியே நெகிழ செய்தது.
ஒருமுறை அனைத்தையும் மேற்பார்வை பார்த்து திருப்தியடைந்தவளாய் திரும்பி சென்றாள்.
சில மாணவர்கள் மைதானத்தை சரி செய்து கொண்டிருந்தனர். நாளை குழந்தைகள் பொதுமக்கள் அமர சேர்களை ஆர்டர் செய்தாள் தமிழ். குழந்தைகளுக்கான இனிப்பு , பரிசு பொருட்கள் ஆகியவை ஒரு நல்ல மனிதரின் உதவியால் இன்றே வந்து விட்டது. அதை ஸ்டோர் ரூமில் பத்திரபடுத்தி நாளை விருந்தினர்களுக்கான சால்வை மற்றும் பரிசு கேடயங்களை வாங்க தன் டூவிலரை கிளப்பினாள்.
மறுநாள் காலை ஆறு மணிக்கே அனைவருக்கும் முன்பே வந்து விட்டாள் தமிழ்… சில மாணவர்களை மிச்சம் மீதி டெகரேஷன்களை செய்ய வைத்து எம்.எல்.ஏ ஏற்ற வேண்டிய கொடியை தயார்செய்து வைத்தாள்… மறுபடியும் பள்ளி முழுவதையும் ஒரு முறை ஆராய்ந்தாள்.
குழந்தைகள் அனைவருக்கும் சட்டையில் குத்தி கொள்ள தேசிய கொடியையும் குத்தூசிகளையும் ஐந்தாம் வகுப்பு சரவணன் வழங்கி கொண்டிருந்தான்.
அப்போது சற்று பதட்டத்துடன் வந்த தலைமையாசிரியர் "தமிழ் எம்.எல்.ஏ.விற்கு நேற்று இரவு திடீரென உடல்நிலை சரியில்லை. இன்னைக்கு விழாவிற்கு வரமுடியாததற்கு வருத்தம் தெரிவித்தார்.
இப்ப என்ன செய்யறது….யாரை அழைக்கிறது?" என கவலைபட்டார்.
"சார்… நம்ம கவுன்சிலரை அழைக்கலாமா? பேசி பாப்போமா?" என்றாள் கவலையுடன்.
சரியென போனில் தொடர்பு கொண்டபோது…அவர் வேறு ஒரு விழாவிற்கு போயிருப்பதாக சொன்னார்கள்.
"சார்! வேற என்ன செய்யறது நீங்களே கொடி ஏற்றிடுங்க… இந்த அவசரத்துல நாம யாரை அழைக்க முடியும்" என யோசனை தெரிவித்தாள் தமிழ்.
யோசித்தவாறு அரைமனதுடன் தலையாட்டினார் தலைமை ஆசிரியர்.
குழந்தைகள் அனைவரும் பள்ளிக்கு வந்து விட… ஊர்மக்கள் ஒவ்வொருவராக வர விழா களை கட்டத் தொடங்கியது. தமிழ் பம்பரமாக அங்குமெங்கும் சுழன்று கொண்டிருந்தாள்.
'நீராரும் கடலுடுத்த நிலமடந்தை' என தமிழ்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது.
மைக்கை பிடித்த தலைமையாசிரியர்… எதிர்பாராத காரணங்களால் எம்.எல்.ஏ அவர்கள் விழாவிற்கு வரமுடியாததால் நிகழ்வில் மாற்றமாக மற்றுமொரு தகுதிவாய்ந்த நபரால் தேசிய கொடி ஏற்றப்படும் என அறிவித்தார்.
யாரென… மாணவர்களுடன் பொதுமக்களும் ஆர்வமுடன் நோக்க.. தலைமையாசிரியர் தமிழ்செல்வியின் பேரை அறிவிக்க கூட்டம் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தது.
குழந்தைகளுக்கு வழங்க இனிப்பை தட்டுகளில் வைத்து கொண்டிருந்த தமிழ்செல்வி நிமிர்ந்து பார்த்து அதிர்ச்சியுடன் மேடையை நோக்கி விரைந்தாள்.
பலத்த கைதட்டலுடன் மைக்கை பிடித்த தமிழ்.."பெரியவங்க மன்னிக்கணும்..என் கடமையைதான் நான் இங்க செய்தேன். கடமைக்கு பாராட்டும் மரியாதையும் தேவையில்லை என்பது என் தாழ்வான கருத்து. நான் போகவேண்டிய தூரம் இன்னும் அதிகமிருக்கிறது. மாலையும் மரியாதையும் என் நோக்கத்தை திசை திருப்பகூடும் என பயப்படுகிறேன். என்னை விட வயதில் மூத்த ஆசிரியர்கள் தலைமையாசிரியர் என பலர் இருக்க அவர்களில் ஒருவர் ஏற்றுவதே முறை. மறுபடியும் மன்னிக்கணும்" என்று கைகூப்பியபடி மேடையை விட்டு இறங்கி போனாள்.
தலைமையாசிரியர் கொடியை ஏற்ற சிதறிய பூக்களோடு மூவர்ணகொடி பட்டொளி வீசி பறந்தது.
தலைமையாசிரியரின் கண்கள் தமிழ்செல்வியை தேடின… அவள் எவ்வித சலனமுமற்று குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டிருந்தாள் புன்னகையுடன்.
தலைமையாசியர் மேடையில் நடுநாயகமாக வைத்திருந்த பாரதமாதாவை உற்று நோக்கினார்… அதில் இது போல பல தமிழ்செல்விகளின் சாயல் தெரிந்தது.