நம் உடல் நலம், உடல் பலம் இவ்விரண்டின் மேம்பாட்டிற்கு மிக மிக அவசியமானவை பற்கள். இறப்புக்குப் பின்னரும் அழியாது நிற்கும் வல்லமை பற்களுக்கு உண்டு. இதனால்தான் தடயவியல் துறையில் முக்கியப் பங்கு பற்களுக்கு இருக்கிறது. உடற்சார் நோய்களைக் கூடப் பற்களிலும் ஈறுகளிலும் ஏற்படும் சில மாற்றங்கள் மூலம் நாம் அறிய இயலும்.
முன் வரிசை பற்களை மட்டுமே அழகுக்காகப் பெரிதும் கவனிக்கிறோம். பின் வரிசை பற்களில் அதிக கவனம் பொதுவாகவே யாரும் செலுத்துவதில்லை. 'நொறுங்கத் தின்றால் நூறு வயது' என்பது பழமொழி. நாம் உட்கொள்ளும் உணவை முழுதாக அரைத்து நம் செரிமானத்திற்கு ஏற்ப உணவை உள் செலுத்த உதவுவது பின் வரிசை பற்களே. அதனை இழப்போமாயின் செரிமானப் பிரச்னையில் தொடங்கிப் பலவிதமான உடற்சார் நோய்களின் தாக்கம் ஏற்படும்.
பல் மருத்துவத்தில் பல சிகிச்சை முறைகள் இருக்கின்றன. எந்த விதமான பல் பிரச்னைகளுக்கும் நல்ல தீர்வைச் சிகிச்சையினால் பெற முடியும்! பற்கள் பராமரிப்புக்கான பத்து கட்டளைகள் இதோ:
1. காலையில் எழுந்தவுடன், இரவு தூங்கும் முன் என தினமும் இரு வேளை பல் துலக்க வேண்டும். ஒரு நிமிடத்திற்கு அதிகமாகப் பல் துலக்குதல் கூடாது.
2. சாப்பிட்ட பின்னர் மௌத் வாஷ் கொண்டு வாயைச் சுத்தம் செய்ய வேண்டும். தண்ணீரிலாவது வாயைக் கொப்பளித்துச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.
3. பொதுவாக எல்லோருமே மிருதுவான ப்ரஷ்ஷையே (ஸாஃப்ட் ப்ரஷ்) பயன்படுத்த வேண்டும்.
4. இயற்கை மூலப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பற்பசைகளை பெரும்பாலும் உபயோகிப்பது பற்களுக்கு நல்லது.
5. புளோரிடேடட் பற்பசை பயன்படுத்துவது சிறந்தது.
6. பட்டாணி அளவு பற்பசை போதும் பல் துலக்க. விளம்பரங்களில் காட்டுவது போலப் ப்ரஷ் முழுவதும் நீளமாக எடுத்துக்கொள்வது அவசியமற்றது, பயனற்றது.
7. முன் பின் வாக்கில் பல் தேய்க்கக் கூடாது. பல் கூச்சம் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். சுழல் வாக்கில் மட்டுமே துலக்க வேண்டும்.
8. ஆறு மாதத்திற்கு ஒரு முறையேனும் உங்கள் பல் மருந்துவரிடம் சென்று பற்களை சோதனை செய்துகொள்வது நல்லது.
9. சொத்தையினால் ஏற்படும் பற்சிதைவை ஆரம்பத்திலேயே கவனிப்பது நன்று. வலி வரும் வரை காத்திருப்பது தவறு.
10. வாய் துர்நாற்றம் இருப்பின் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.