இளம் வயதில் அனைவருக்கும் முகத்தில் பருக்கள் தோன்றுவது சாதாரணமானதுதான் என்றாலும், அது தன் முக அழகை பாதிப்பதாக எண்ணி பலரும் அவற்றை நீக்குவதற்கு பல வழிமுறைகளைப் பின்பற்றுவர். எளிய முறையில் அவற்றிற்கு தீர்வு காண இப்பதிவில் கூறப்பட்டிருக்கும் பத்து வகை உணவுகளை உட்கொண்டாலே பருக்கள் தானாகவே நீங்கி, முகம் பளபளப்பாகும்.
வைட்டமின் C அடங்கிய பெரி வகைப் பழங்கள், பெல் பெப்பர் மற்றும் வைட்டமின் E அடங்கிய தாவரக் கொட்டைகள், விதைகள், பசலைக் கீரை ஆகியவற்றை உண்பதால் அவற்றிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ்ஸையும் வீக்கங்களையும் குறைக்க உதவுகின்றன. இதனால் முகப்பரு தோன்றும் அபாயம் தடுக்கப்படுகிறது.
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகள் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணம் கொண்டவை. இவை பருக்கள் உண்டாக வழிவகுக்கும் வீக்கத்தை குறைக்க உதவி புரிகின்றன. சால்மன், மாக்கரேல், சர்டைன் போன்ற மீன் வகைகள் மற்றும் வால்நட், சியா, ஃபிளாக்ஸ் விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளது. இந்த உணவுகளை அடிக்கடி உட்கொண்டால் பருக்கள் வருவதைத் தடுக்கலாம்.
யோகர்ட், கிமிச்சி, சார்க்ராட், கெஃபிர் போன்ற நொதிக்கச் செய்த உணவுகளில் ப்ரோபயோட்டிக்குகள் மிக அதிகம் உள்ளன. இவை ஜீரண மண்டல உறுப்புகளிலுள்ள நல்ல பாக்டீரியாக்களின் பெருக்கத்திற்கு உதவுகின்றன. அதன் விளைவாக சரும ஆரோக்கியம் மேம்படுகிறது; பருக்கள் தோன்றுவது தடுக்கப்படுகிறது.
பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்ஸ் அடங்கிய உணவுகளைத் தவிர்த்து, முழு தானிய வகை உணவுகளை உட்கொண்டால், இரத்த சர்க்கரை அளவு சமநிலையில் பராமரிக்கப்பட்டு பருக்கள் வெளிவருவதைத் தடுக்கலாம். முழு கோதுமை பிரட், பிரவுன் ரைஸ், குயினோவா, ஓட்ஸ், பார்லி உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்.
லீன் மீட் (Meat), சிக்கன், மீன், தாவரக் கொட்டைகள், விதைகள் மற்றும் பயறு வகைகளை அடிக்கடி உட்கொள்ளுங்கள். அவற்றிலுள்ள சிங்க் சத்து நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் காயங்களை ஆற்றவும் உதவும். இதனால் பருக்களற்ற முகச்சருமம் பெறலாம்.
க்ரீன் டீ தினமும் அருந்தினால், அதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணங்கள் பருக்கள் தோன்றுவதைத் தடுக்க உதவும்.
மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற ஆக்ட்டிவான கூட்டுப்பொருளில் ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணங்கள் உள்ளன. மஞ்சளை சமையலில் சேர்ப்பது பருக்களற்ற சருமம் பெற உதவும்.
நச்சுக்களை முழுவதுமாக வெளியேற்றுவதும், உடலை தேவையான நீர்ச்சத்துடன் வைத்துப் பராமரிப்பதும் சரும ஆரோக்கியம் பெற உதவும். எனவே, நாள் முழுவதும் அதிகளவு நீர் அருந்துவது அவசியம்.
சருமத்திலுள்ள துவாரங்களை அடைத்திருக்கும் அழுக்குகளை நீக்க ஸ்வீட் பொட்டட்டோ, கேரட், பசலைக்கீரை, காலே போன்ற வைட்டமின் A நிறைந்த உணவுகள் உதவும். இவற்றை அதிகம் உண்பது பருக்கள் தோன்றும் அபாயத்தைத் தடுக்கும்.
பருப்பு வகைகள், பயறு வகைகள், கொண்டைக் கடலை, மாவுச் சத்து இல்லாத காய்கறிகள், முழு வகைப் பழங்கள் போன்ற, குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்ட உணவுகளை உண்பது இரத்த சர்க்கரை அளவு உயர்வதைத் தடுக்கும். இதனால் பருக்கள் தோன்றும் அபாயம் தடுக்கப்படும்.
மேலே கூறிய உணவுகளை உட்கொண்டு பருக்களற்ற கவர்ச்சியான முகத்தோற்றம் பெறுவது அவரவர் கையில் உள்ளது!