ஸ்டெமினா (Stamina) என்பது, கடினமான உடல் உழைப்பும் நீண்ட நேரமும் எடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு வேலையை மேற்கொள்ளும்போது நம் மன நிலை மற்றும் உடலின் சகிப்புத்தன்மையையும் ஆற்றலையும் வெளிப்படுத்தும் திறனே ஸ்டெமினா எனப்படும். அப்படிப்பட்ட நேரங்களில் நாம் உட்கொள்ள வேண்டிய பத்து வகைப் பழங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
வாழை பழங்களை ஊட்டச் சத்துக்களின் பவர் ஹவுஸ் என்பர். இதில் கார்போஹைட்ரேட்ஸ், பொட்டாசியம், வைட்டமின் B6 ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை உடலுக்கு உடனடி சக்தி அளிக்கின்றன; எலக்ட்ரோலைட்களின் அளவை சமநிலைப்படுத்துகின்றன; தசைகளில் பிடிப்பேற்படுவதைத் தடுக்கின்றன. வைட்டமின் B6, மெட்டபாலிசம் சரிவர நடைபெற்று சக்தியை வெளிக் கொணர்வதில் பெரும் பங்காற்றுகிறது.
ஆரஞ்சு பழங்களில் உள்ள வைட்டமின் C, இரும்புச் சத்தை உடல் உறிஞ்சி சக்தியை உற்பத்தி செய்ய மிகவும் உதவுகிறது. ஆக்ஸிஜனை தசைகளுக்கு எடுத்துச் சென்று ஸ்டெமினாவை அதிகரிக்க இரும்புச்சத்து தேவை. உடனடி சக்தி தர ஆரஞ்சுப் பழங்களில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் உதவுகின்றன.
ஆப்பிள் பழத்தில் நிறைந்துள்ள குர்செடின் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் நுரையீரலில் ஆக்ஸிஜன் கொள்ளளவை அதிகரிக்கச் செய்து சகிப்புத் தன்மையையும் ஸ்டெமினாவையும் கூட்டுகிறது. ஆப்பிளிலுள்ள இயற்கையான இனிப்புச் சத்துக்கள் உடல் உழைப்பின்போது தொடர்ந்து ஸ்டெமினா கிடைக்க உதவுகின்றன.
பெரி பழங்களிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உடற்பயிற்சியின்போது உண்டாகும் ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்கவும், தசைகளின் சோர்வைக் குறைக்கவும் உதவிபுரிகின்றன. அவற்றிலுள்ள கார்போஹைட்ரேட்ஸ் தொடர்ந்து சக்தி அளிக்கின்றன; நார்ச் சத்துக்கள் இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்துப் பராமரிக்க உதவுகின்றன.
வாட்டர் மெலன் நீர்ச்சத்து அதிகமுள்ள பழம். இதிலுள்ள ஸிட்ருல்லின் (Citrulline) என்ற அமினோ ஆசிட் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் தசைகளின் சோர்வைத் தடுக்கவும் செய்கிறது. நீண்ட நேர உடற்பயிற்சியின்போது, ஸ்டெமினாவின் அளவை தொடர்ந்து தக்கவைக்க இதன் நீர்ச்சத்து உதவுகிறது.
கிவி பழத்தில் வைட்டமின் C, பொட்டாசியம், நார்ச்சத்து ஆகியவை அதிகம். வைட்டமின் C, இரும்புச் சத்தை உடல் உறிஞ்சவும், பின் அச்சத்தின் வழியாக ஆக்ஸிஜனை தசைகளுக்கு எடுத்துச் சென்று ஸ்டெமினாவை அதிகரிக்கச் செய்யவும் உதவுகிறது. பொட்டாசியம் எலக்ட்ரோலைட்களின் அளவை சமநிலைப்படுத்துகின்றன; தசைகளில் பிடிப்பேற்படுவதைத் தடுக்கின்றன.
பைனாப்பிள் பழத்தில் இருக்கும் ப்ரோமெலைன் என்ற என்சைம் வீக்கத்தைக் குறைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் செய்கிறது. இதனால் தசைகளில் சோர்வு ஏற்படாமல், ஸ்டெமினாவும் ஆற்றலும் செயலின் இறுதிவரை நீடிக்க முடிகிறது.
கிரேப் பழங்களிலிருக்கும் கார்போஹைட்ரேட்ஸ் உடல் உழைப்பிற்குத் தேவையான சக்தியை இறுதிவரை வழங்கிக் கொண்டிருக்கும் எரிபொருளாகத் திகழ்கிறது. மேலும், இதிலுள்ள ரெஸ்வெராட்ரால் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் மேம்பட்ட ஸ்டெமினா மற்றும் சகிப்புத்தன்மையைத் தரக்கூடியது.
பப்பாளி பழத்தில் வைட்டமின் A, C, E, பொட்டாசியம், ஃபொலேட் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை உடலின் மொத்த ஆரோக்கியம் காக்க உதவி புரியும்; மெட்டபாலிசம் நன்கு நடைபெற செய்து உடற்பயிற்சியின்போது தேவைப்படும் ஸ்டெமினாவை வழங்கும். இதிலுள்ள வேறு பல என்சைம்கள் சிறப்பான செரிமானத்துக்கும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.
கொய்யா பழத்தில் வைட்டமின் C, நார்ச்சத்து, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. வைட்டமின் C, இரும்புச் சத்தை உறிஞ்சவும், தசைகளுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லவும், சகிப்புத் தன்மையை பெருக்கவும் உதவுகிறது. நார்ச்சத்து, இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தி தொடர்ந்து உடலுக்கு சக்தியையும், உடல் உழைப்புக்குத் தேவையான ஸ்டெமினாவையும் தருகிறது.
ஒவ்வொரு நாளும் தவறாமல் பழங்கள் உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டு ஆரோக்கியத்துடன் வாழ்வோம்.