அல்சைமர் நோய்க்கு தற்போது எந்த சிகிச்சையும் இல்லை என்றாலும், அதன் முன்னேற்றத்தை மெதுவாக்க அல்லது நிறுத்த பல்வேறு அணுகுமுறைகளை உபயோகிக்கலாம். அல்சைமர் என்பது ஒரு சிக்கலான நோயாக இருந்தாலும், அதைத் திறம்பட எதிர்கொள்ள உதவும் வழிமுறைகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. வாழ்க்கை முறை மாற்றங்கள்: தினசரி வாழ்க்கையில் பல மாற்றங்களைக் கொண்டு வரலாம். எளிமையான உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி போன்ற உடல் செயல்பாடுகள் அல்சைமர் அபாயத்தைக் குறைக்கும். மேலும், சீரான உணவு மற்றும் சமூக ஈடுபாடு போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிப்பதும் அவசியம்.
2. அறிவாற்றல் பயிற்சி: அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நினைவாற்றல் விளையாட்டுகள், புதிர்கள் மற்றும் மூளை டீசர்கள் போன்ற அறிவாற்றல் பயிற்சிகள் தரப்பட வேண்டும். அவை அறிவாற்றல் இருப்பை உருவாக்க உதவுவதோடு அல்சைமரின் விளைவுகளை குறைக்கும்.
3. புதிய திறன்களை கற்றுக்கொள்வது: புதிதாக ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்வது அல்சைமரை திறமையாக எதிர்கொள்ள உதவும். புதிர்களை தீர்ப்பதோடு புதிய மொழிகள் அல்லது இசைக்கருவிகள் வாசித்தல் அல்லது கைவினைப் பொருள்கள் தயாரித்தல் போன்ற புதிய திறன்களில் ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொள்ளும்போது அவை மனதை ஈடுபாட்டோடு வைத்திருக்கவும் மூளையை தூண்டும் செயல்பாடுகள் ஆகவும் இருக்கும்.
4. சமூக ஈடுபாடு: குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுடன் நேரம் செலவழித்தல், அவர்களோடு வெளியே சென்று வருதல், விசேஷங்களுக்கு செல்லுதல் போன்ற சமூகத் தொடர்புகளை உருவாக்குதல் அவசியம்.
5. உறக்கம்: தினமும் இரவு ஆறிலிருந்து எட்டு மணி நேர தூக்கத்தை கடைபிடிக்க வேண்டும். நல்ல உறக்கம் அல்சைமரை திறமையாக எதிர்கொள்ள உதவும்.
6. ஊட்டச்சத்து: உணவு உண்ணுதலோடு ஊட்டச்சத்து மிகுந்த பழங்கள், காய்கறிகள் முழு தானியங்கள் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சமச்சீர் உணவு வகைகளை அவசியம் உண்ண வேண்டும்.
7. மரபணு சிகிச்சைகள்: அல்சைமர் நோயுடன் தொடர்புடைய குறைபாடுள்ள மரபணுக்களை மாற்ற அல்லது மரபணு அடிப்படையிலான அணுகுமுறைகளை ஆராய்தல் மற்றும் மரபணு மாற்றங்களை சரி செய்ய சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.
8. நோய் எதிர்ப்பு சிகிச்சைகள்: அல்சைமர் நோயின் தீவிரத்தை குறைக்க உதவும் குறிப்பிட்ட புரதங்களை எடுத்துக் கொள்ளுதல், மேலும் செல்லுலார் பாதைகளை சரிசெய்ய நோய் எதிர்ப்பு மண்டலங்களை வலுப்படுத்துதல் சிசிச்சை முறைகள் உதவும்.
9. மருந்து தலையீடுகள்: அல்சைமர் நோயை உண்டாக்கும் குறிப்பிட்ட மூலக்கூறு பாதைகளை குறிவைக்கும் புதிய மருந்துகளைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றார்கள். எடுத்துக்காட்டாக, பீட்டா அமிலாய்டு பிளேக்குகள் போன்ற நோய் எதிர்ப்பு சிகிச்சைகளை பற்றிய ஆராய்ச்சி நடக்கிறது. இவை பின்னாளில் அல்சைமர் நோயாளிகளுக்கு உதவலாம்.
10. ஆரம்பகால நோய் அறிதல்: அல்சைமர் நோயை துல்லியமாக முன்கூட்டியே கண்டறிதலும் சரியான நேரத்தில் சிகிச்சையை ஆரம்பிப்பதும் இந்த நோயை அதிகமாகவே குறைக்கிறது.
11. நரம்பியல் பாதுகாப்பு: குர்க்குமின், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பாலிஃபினால்கள் போன்ற நரம்பியல் விளைவுகளை வழங்கக்கூடிய இயற்கை சேர்மங்கள் அல்லது சப்லிமென்ட்களை அடையாளம் காண்பதில் ஆராய்ச்சி கவனம் செலுத்துகிறது.
12. குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு: அல்சைமரால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை குடும்ப உறுப்பினர்களும் உறவினர்களும் நெருங்கிய உறவினர்களும் தனி அக்கறை எடுத்து கவனிக்க வேண்டும். அவர்களுடன் நேரம் செலவிடுவது, தனியாக அவர்களை வெளியே அனுப்பாமல் துணையுடன் அனுப்புவது மற்றும் அவர்களை என்கேஜ்டாக வைத்துக் கொள்வது முக்கியம்.