1. ஆஸ்துமாவினால் அடிக்கடி அவதிப்படுபவர்கள் தினமும் தூதுவளை, சுண்டைக்காய் போன்றவற்றை சிறிது நெய்யில் வதக்கி ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா தொந்தரவு குறையும். முருங்கை இலைச் சாற்றைப் பிழிந்து சம அளவு தேன் கலந்து சாப்பிட்டால் நீர்க்கோர்வை நீங்கும்.
2. குதி காலில் பித்த வெடிப்பு உள்ளவர்கள் மஞ்சளுடன் இரண்டு, மூன்று சின்ன வெங்காயத்தை வைத்து நன்கு அரைத்து காலை, மாலையில் தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும். சிலருக்கு குதிகாலில் வெடிப்பு இருக்கும். அவர்கள் தினமும் தூங்கப் போவதற்கு முன்பு வெடிப்பு உள்ள இடத்தில் படிகாரக் கல் கொண்டு நன்றாக மசாஜ் செய்து வந்தால் சில நாட்களிலேயே கால்களில் உள்ள வெடிப்பு மறைந்து விடும்.
3. நகசுத்தி ஏற்பட்டால் நகம் பாதிக்கப்படும். இதற்கு படிகாரத்தை தண்ணீரில் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து நகச்சுத்தியின் மீது பூசி வர நகச்சுத்தி சரியாகி விடும்.
4. சிறுநீர் பிரியாமல் கஷ்டப்படுகிறவர்கள் வெள்ளை முள்ளங்கியை வேகவைத்து, அதன் சாறை பருகி வர சிறுநீர் தாராளமாகப் போகும். வாரம் மூன்று நாட்கள் முள்ளங்கியை உணவில் சேர்த்துக்கொள்ள சிறுநீரகப் பிரச்னை வராது.
5. சிறிதளவு சீரகம் மற்றும் பெருங்காயத்தூள் இரண்டையும் கலந்து இரண்டு டம்ளர் மோரில் கலந்து சிறிது உப்பிட்டு குடித்தால் வாயு தொல்லை மறையும். பொதுவாக, தயிரும், மோரும் உணவில் சேர்த்துக்கொள்வது நன்மையே. ஆனால், இரவில் உணவில் இவற்றை தவிர்ப்பது நல்லது.
6. அகத்திக் கீரையை பொரியல் செய்து வாரத்திற்கு இரண்டு முறை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கும். அரைக்கீரையோடு பூண்டு, சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து புளி சேர்க்காமல் சமையல் செய்து சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும்.
7. அன்னாசிப்பழச்சாறுடன், ஏலக்காய்தூள் சேர்த்து பருகி வர, சிறுநீரகக் கோளாறுகள் குணமாகும். நீர்கடுப்பு நீங்கும். சிறுநீர் பிரியாமல் அவதிப்படுபவர்களுக்கு, சிறுநீர் தாராளமாகப் பிரியும். கேரட் சாறை காலை, மாலை அருந்தி வந்தால் சிறுநீரக நோய்கள் குணமாகும்.
8. இருமல் மற்றும் சளியுடன் தொற்று பிரச்னை இருந்தால், இரண்டு பல் பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுவது பலன் தரும். குழந்தைகளுக்கும் பூண்டுப் பல்லை நூலில் கட்டி கழுத்தில் அணிந்தால் சளி குறையும்.
9. பூண்டுப் பல் ஒன்றைச் சுட்டு சிறிது சர்க்கரை சேர்த்து பாலில் இட்டு காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுத்தால் கபம் நீங்கும். பூண்டுச் சாற்றையும், இஞ்சிச் சாற்றையும் சம அளவு கலந்து காலை, மாலை மூன்று நாட்கள் சாப்பிட நெஞ்செரிச்சல் நீங்கும். பூண்டில் சிறிது எலுமிச்சைச் சாறுவிட்டு அரைத்து இருவேளை சாப்பிட, கீல்வாதம் குணமாகும்.
10. தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு தேங்காய் சாப்பிட்டால் இரவில் நல்ல தூக்கம் வரும். இரவில் தேங்காய் சாப்பிட்டால் தீராத மலச்சிக்கல் கூட தீரும். தேங்காயில் இருக்கும் செலினியம் சத்து முடி உதிர்வதை தடுக்கும் மற்றும் முடி அடர்த்தி குறைவை சரி செய்யும்.
11. தேங்காய் எண்ணெய்யுடன் ஆமணக்கு எண்ணெய்யை கலந்து முகத்தில் தடவி வந்தால் முகச் சுருக்கங்கள் மறையும். இதே எண்ணெய்யை இரவில் முகத்தில் தடவினால் முகப்பரு பிரச்னை நீங்கும். ஏனெனில், இவற்றில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் முகப்பரு வராமலும், முகப்பருவை அகற்றவும் செய்கின்றது.
12. மாதுளம் பழ தோலை காய வைத்து இடித்து பயத்தம் பருப்பை கலந்து உடலில் பூச வியர்வை நாற்றம் அகலும். படிகாரம் கரைத்த நீரை வியர்வை வாடை உள்ள இடங்களில் ஸ்ப்ரே செய்யலாம் அல்லது படிகாரம் தேய்த்து குளித்து வர வியர்வை வாடை வராது.
13. எலுமிச்சை சாற்றில் சீரகத்தை ஊற வைத்து உலர்த்தி அவ்வப்போது உண்டு வர வயிற்றுப்போக்கு குணமாகும்.
14. கிராம்பு ஒன்றை நெருப்பில் கருகாதபடி சுட்டு வாயில் அடக்கிக் கொண்டால் தொண்டைக் கமறல் நீங்கும். பல் ஈறுகள் வலுவடையும். இரவு தூங்கும்போது ஒரு கிராம்பை வாயில் போட்டு மெல்ல, கல்லீரல் பாதுகாப்பை உறுதி செய்யும். வயிறு மற்றும் வாய் புண்களை குணப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வாய் நாற்றத்தை குணப்படுத்தும், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும்.
15. எப்போதும் சொறிந்து கொண்டே இருப்பவர்களும், கண் நோய் மற்றும் ஆஸ்துமா அவஸ்தை உள்ளவர்களும் வெயில் காலத்தில் முலாம் பழச்சாறுடன் சர்க்கரை கலந்து சாப்பிடலாம்.