
‘காலை உணவு ஒரு நாளின் மிக முக்கியமான உணவு’ என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். இரவு முழுவதும் பட்டினியாக இருந்த உடலுக்கு, காலையில் உண்ணும் உணவு தான் அன்றைய நாள் முழுமைக்கும் தேவையான தெம்பைத் தருகிறது. ஆனால், அவசர உலகில் நாம் சாப்பிடும் பல உணவுகள் ஆரோக்கியத்திற்குப் பதில் மெதுவான நஞ்சாக மாறுகின்றன. விளம்பரங்களைப் பார்த்து ஏமாறாமல், நாம் தவிர்க்க வேண்டிய 5 முக்கிய உணவுகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
இன்று பல வீடுகளில் ஓட்ஸ், கான்ஃபிளேக்ஸ் அல்லது சாக்லேட் சுவை கொண்ட 'சீரியல்' வகைகளை பாலில் கலந்து சாப்பிடுவது ஃபேஷனாக மாறிவிட்டது. இது முற்றிலும் தவறான ஆரம்பம். இதில் சத்துக்களை விட சர்க்கரை மற்றும் பதப்படுத்தபட்ட வேதிப்பொருட்கள் தான் அதிகம். இதைச் சாப்பிட்ட அரை மணி நேரத்திலேயே ரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்ந்து, பிறகு சட்டெனக் குறைந்துவிடும். இதனால் மதிய உணவிற்கு முன்பே அதிகப் பசியையும், ஒருவித எரிச்சலையும் உணர ஆரம்பிப்பீர்கள். குழந்தைகளுக்கு இது மந்தத்தன்மையை உண்டாக்கும்.
மைதாவில் செய்யப்பட்ட வெள்ளை பிரட்டில் தவிடு நீக்கப்படுவதால், அதில் எந்தச் சத்தும் கிடையாது. அதோடு ஜாம் தடவிச் சாப்பிட்டால் இன்னும் ஆபத்து. ஜாமில் வெறும் சர்க்கரை பாகு மற்றும் செயற்கை நிறங்கள் தான் உள்ளன. நார்ச்சத்து இல்லாத இந்த உணவைச் சாப்பிடும்போது செரிமானக் கோளாறுகள் ஏற்படும். குழந்தைகளின் உடல் எடை தாறுமாறாக கூடும். எடையைக் குறைக்க நினைக்கும் பெரியவர்களும் பிரட்-ஜாம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
பழங்கள் உடலுக்கு நல்லது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், பழத்தை அப்படியே கடித்துச் சாப்பிடுவது தான் முறை. அதைச் சாறாக மாற்றும்போது அதிலுள்ள 'நார்ச்சத்து' முற்றிலும் நீக்கப்படுகிறது. குறிப்பாக, கடைகளில் '100% இயற்கை' என்று விளம்பரப்படுத்தி விற்கப்படும் பழச்சாறுகளில் அதிகப்படியான சர்க்கரையும், நீண்ட நாள் கெட்டுப் போகாமல் இருக்க 'சோடியம் பென்சோயேட்' போன்ற வேதிப்பொருட்களும் கலக்கப்படுகின்றன. இது கல்லீரலில் தேவையற்ற கொழுப்பைச் சேர்க்கும்.
காலை நேரத்தில் டீ அல்லது காபியுடன் பிஸ்கட், குக்கீஸ் அல்லது கேக் சாப்பிடும் பழக்கம் பலருக்கு உண்டு. இவை மைதா, டால்டா மற்றும் வெள்ளைச் சர்க்கரையால் ஆனவை. காலையிலேயே இவ்வளவு இனிப்பைச் சாப்பிடுவது உடலின் வளர்சிதை மாற்றத்தைக் கெடுத்துவிடும். இவை இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தில் மாற்றங்களை உண்டாக்கி, நாள் முழுவதையும் சோர்வாக்கும். குறிப்பாக மைதா குடலில் தங்கி மலச்சிக்கலை உண்டாக்கும்.
ஓட்ஸ் உடம்புக்கு நல்லது என்ற பெயரில் விற்கப்படும் 'இன்ஸ்டன்ட் ஓட்ஸ்' பாக்கெட்டுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம். இதில் சுவைக்காக உப்பு, சர்க்கரை மற்றும் செயற்கை மணமூட்டிகள் அதிகம் சேர்க்கப்படுகின்றன. அதேபோல் 'எனர்ஜி பார்கள் அல்லது 'புரத பார்கள்' என்பவை உண்மையில் மிட்டாயைப் போன்ற ஒரு இனிப்புப் பொருள் தான். இவை எடையைக் கூட்டவே செய்யும்.
ஆரோக்கியமான காலை உணவு என்பது புரதச்சத்தும், நார்ச்சத்தும் நிறைந்ததாக இருக்க வேண்டும். ஆவியில் வெந்த இட்லி, மணக்க மணக்க சாம்பார், வேகவைத்த முட்டை, சுண்டல், பாசிப்பயறு, சின்ன வெங்காயம் மற்றும் தயிர் சேர்த்த பழைய சாதம் உடல் சூட்டைத் தணித்து குடலுக்கு நன்மை செய்யும். சர்க்கரை சேர்க்காத தயிரில் பாதாம் அல்லது வால்நட் சேர்த்துச் சாப்பிடலாம்.