பிளாக் கரண்ட் (Black Currant) என்பது உண்ணக்கூடிய பெரி வகைப் பழங்களில் ஒன்று. யூரேசியாவைப் (Eurasia) பிறப்பிடமாகக் கொண்டு, ஐரோப்பாவின் பல இடங்களிலும் பயிரிடப்பட்டு வருவது. பிளாக் கரண்ட் டீ என்பது அஸ்ஸாமில் வளரும் ஒரு வகை டீ இலைகளை அடிப்படையாகக் கொண்டு அதனுடன் உலர்ந்த பிளாக் கரண்ட் பழங்களைச் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு வகை பிளாக் டீயாகும். இந்த டீ சிறிது துவர்ப்பு மற்றும் கசப்பு சுவை கொண்டது. பிளாக் கரண்ட் பழங்களை சேர்ப்பதால் பாரம்பரிய பிளாக் டீயின் சுவை சிறிதும் குறைவதில்லை. மாறாக, அதற்கு இணையாகவே பிளாக் கரண்ட் டீயின் சுவையும் உள்ளது. பிளாக் கரண்ட் டீயிலிருக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. பெரி வகைப் பழங்களின் சுவை போலவே பிளாக் கரண்ட் பழத்தின் சுவையும் அதீத சுவை கொண்டது. பிளாக் கரண்ட் டீ அருந்துவதால் உடலுக்கு புத்துணர்ச்சியுடன் குறிப்பிடும்படியான பல வகை ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும்.
2. ஒரு கப் பிளாக் கரண்ட் டீ அருந்தும்போது, தனித்துவம் கொண்ட இப்பழத்திலிருந்து ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் C, A மற்றும் இரும்புச் சத்து போன்றவை நம் உடலுக்குக் கிடைக்கின்றன. இவை நம் உடலுக்குள் தொற்று நோய்க் கிருமிகள் நுழைவதைத் தடுத்து நிறுத்தும். மேலும், உடலின் ஒட்டு மொத்த நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தவும் உதவும்.
3. ஒரு கப் பிளாக் கரண்ட் டீயில், காபியில் இருப்பதில் பாதி அளவு காஃபின் மட்டுமே உள்ளது. மேலும் அசிடிக் தன்மையும் குறைவாகவே உண்டு. இதனால் வாயிலும் தொண்டையிலும் எரிச்சல் மற்றும் உலர் தன்மை உண்டாகும் அபாயம் குறையும்.
4. இந்த டீயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ்ஸை எதிர்த்துப் போராடி, மூளை மற்றும் கல்லீரல் சேதமடையாமல் பாதுகாக்க உதவும். மேலும், ஆல்கஹால் அருந்துவதால் உடலின் பல்வேறு உள்ளுறுப்புகள் சேதமடைவதைத் தடுக்கவும் செய்யும்.
5. க்ளுகோமா பிரச்னை உள்ளவர்களின் கண்ணுக்குள் இருக்கும் திரவ அழுத்தத்தை சம நிலையில் வைக்க பிளாக் கரண்ட் நல்ல முறையில் உதவி புரியும். மேலும், க்ளூக்கோமாவுடன் தொடர்புடைய வேறு அறிகுறிகளை குறைக்கவும் உதவும்.
இந்த டீயை நாமும் சுவைப்போம்; உடல் நலம் பல பெறுவோம்!