மாறிவரும் வாழ்வியல் முறைகளால் செரிமானம் என்பது பெரும்பாலும் அனைத்து வயதினருக்கும் ஒரு முக்கிய பிரச்னையாகவே இருந்து வருகிறது. நம் அன்றாட உணவில் சில வகை உணவுப் பொருட்களை தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம் செரிமான பிரச்னைகளில் இருந்து விடுபடுவதோடு, செரிமான பிரச்னைகள் வராமல் தற்காத்துக் கொள்ள முடியும். செரிமானத்தை மேம்படுத்தும் 6 உணவு வகைகளை பற்றி இப்பதிவில் காணலாம்.
தமிழர்களின் உணவு கலாச்சார முறைகளில் முக்கிய இடம் பெறுவது வாழைப்பழம். வாழைப்பழத்தில் உள்ள அல்கலைன் வயிற்றில் அதிகப்படியான அமிலச் சுரப்பை கட்டுப்படுத்தி சமநிலைப் படுத்துகிறது. மேலும் வாழைப்பழத்தில் அமிலேஸ், மால்டேஸ் எனும் செரிமான என்சைம்கள் அதிக அளவில் உள்ளன. வாழைப்பழத்தில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்தின் காரணமாக குடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, செரிமானமும் மிக எளிதாக நடைபெறுகிறது.நீர்மோர் :
அதிகமாக பாலை விரும்பாதவர்கள் கூட மோரை விரும்பி உண்பர். சில நேரங்களில் பால் அருந்தினால் கூட செரிமானத்திற்கு நேரம் எடுக்கும். நீர் மோரில் உடலுக்கு நன்மை பயக்கும் probiotic பாக்டீரியாக்கள் அதிக அளவு உள்ளன. மேலும் மோரில் உள்ள லாக்டிக் ஆசிட் அதிகப்படியான அமில சுரப்பை கட்டுப்படுத்துகிறது. இதனால் மோர் அருந்தும் போது செரிமான உறுப்புகள் பலப்படுவதோடு, செரிமானமும் எளிமைப்படுத்தப்படுகிறது.
அதிக கலோரிகள் இருக்கக்கூடிய அசைவ உணவுகள் சமைக்கும்போது புதினா சேர்க்காமல் பெரும்பாலும் சமைப்பதில்லை. அதிக மசாலா கலந்த உணவுகளை உட்கொள்ளும் போது ஏற்படும் நெஞ்செரிச்சலை புதினா எளிதில் கட்டுப்படுத்துகிறது. புதினாவில் menthol உள்ளதால் அமிலச் சுரப்பு நடுநிலை படுத்தப்பட்டு செரிமானம் மேம்படுத்தப்படுகிறது. உணவுக்குப் பின் 5 புதினா இலைகளை வாயில் போட்டு நன்கு மென்று சாப்பிடுவதன் மூலம் செரிமான பிரச்னைகள் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
இஞ்சியில் gingerol மற்றும் shagaol எனும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உள்ளதால் செரிமான பிரச்னைகளால் ஏற்படும் புளித்த ஏப்பம், வயிறு உப்புசம், வாயு, வயிற்று வலி, வயிற்றுப் பிடிப்பு போன்ற பிரச்சினைகளை சரி செய்வதற்கு இஞ்சி பயன்படுகிறது. மேலும் வயிற்று தசைகளை தளர்வடையச் செய்து செரிமானத்தை சீராக்குகிறது. செரிமான பிரச்னை உள்ளவர்கள் சமையலில் சற்று கூடுதலாக இஞ்சி சேர்த்துக் கொள்வது நல்லது. மேலும் உணவுக்கு பின் இஞ்சி டீ, இஞ்சி சாறு கலந்த தேன் அருந்துவதன் மூலம் செரிமான பிரச்னைகளில் இருந்து எளிதில் விடுபடலாம்.
சீரகம் வயிற்றில் உள்ள சீரற்ற அமில சுரப்பை சீர் செய்வதற்கு பயன்படுகிறது. முழு தனியா செரிமானத்திற்கு தேவையான பித்த நீரை சுரக்க வைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. மேலும் செரிமான கோளாறுகளால் ஏற்படும் வாயு பிரச்னையை தடுப்பதில் இந்த கொத்தமல்லி விதைகள் பயன்படுகிறது. சோம்பு அதிகப்படியான புரதம் மற்றும் கொழுப்பு சார்ந்த உணவுகளை செரிக்க வைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. அதிகமான கலோரிகளை உட்கொள்பவர்கள் உணவுக்குப் பின் இந்த மூன்றையும் தலா ஒரு ஸ்பூன் எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து ஒரு டம்ளராக சுண்ட வைத்து குடிப்பதன் மூலம் செரிமான பிரச்னைகள் வராமல் தடுக்க முடியும்.
முன்பெல்லாம் அச்சு வெல்லம் இருக்காத வீடுகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நம் முன்னோர்களின் உணவு பட்டியலில் இந்த அச்சு வெல்லம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அச்சு வெல்லத்தில் உள்ள அதிகப்படியான இரும்பு, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்களின் மூலம் செரிமான பிரச்னைகள் வராமல் தற்காத்துக் கொள்ள முடியும். உணவுக்கு பின் சிறிதளவு அச்சு வெல்லம் சாப்பிடுவதன் மூலம் குடலின் அலை இயக்கம் துரிதப்படுத்துவதோடு சாப்பிடும் உணவு நீண்ட நேரம் குடலில் தங்குவது தடுக்கப்படுகிறது.
நம்முடைய அன்றாட பழக்க வழக்கங்களில் இந்த வகை உணவுப் பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் மிக எளிமையாக செரிமான கோளாறுகள் ஏற்படுவதில் இருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்ள முடியும்.