கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் மக்கள் மரத்தடியில் தூங்கி, இளைப்பாறி, இயற்கையோடு கலந்த ஒரு வாழ்க்கையைத்தான் வாழ்ந்து வந்தார்கள். எவ்வளவுதான் வேலைகள் இருந்தாலும், எத்தனைதான் பணத் தட்டுப்பாடுகள் இருந்தாலும் மனநிம்மதியோடு வாழ்வைக் கழித்தார்கள். அவர்கள் செய்யும் வேலைகளும் அதற்குத் துணையாக இருந்தன. ஆனால், கணினி, மொபைல் போன்றவற்றின் பயன்பாடுகள் அதிகமாகியுள்ள டிஜிட்டல் காலம் வந்ததிலிருந்து எண்ணற்ற மாற்றங்கள் வந்துவிட்டன. பொருளாதாரம் மேன்மை அடைந்தாலும் தனிப்பட்ட மனிதன் அதிக அளவு மனநிம்மதி இல்லாமல் இருக்கின்றான். ஆனால், டிஜிட்டல் இல்லாமல் வாழ்வில் எதுவும் இல்லை என்றாகிவிட்டது. ஆகையால், இந்த டிஜிட்டல் உலகத்தில் நாம் நம் மனநலத்தை காப்பது அவசியம் ஆகிறது. அதை எப்படி என்று பார்ப்போமா?
1. நாம் படித்துக்கொண்டிருக்கும்போதோ அல்லது ஏதாவது வேலை செய்துகொண்டிருக்கும்போதோ மொபைலில் சட்டென்று ஒரு நோட்டிஃபிகேஷன் வரும். அதை பார்க்கப்போகும் நாம், அதை மட்டுமா பார்ப்போம்? அப்படியே நம் கவனத்தை திசைத் திருப்பி தொடர்ச்சியாகப் பார்த்து, நேரத்தை தன்னையறியாமலே செலவிடுவோம். பின் படிக்கவில்லை அல்லது வேலை முடிக்கவில்லை என்று மன அழுத்தம் கொள்வோம். இது ஒருபுறம். மறுபுறம், நாம் யாருக்காவது மெசேஜ் போட்டிருந்தாலோ அல்லது ஒரு போஸ்ட் போட்டிருந்தாலோ அதற்கு என்ன பதில் வரும் என்ற நோட்டிஃபிகேஷனுக்காகவும் காத்திருப்போம். இது நம்முடைய மனதை ஒருநிலைபடுத்த இடையூறாக இருந்து, நம் வேலையை சரியாக செய்ய அனுமதிக்காது. ஆகையால், மொபைல் நோட்டிஃபிகேஷனை வேலை செய்யும் சமயத்தில் ஆஃப் செய்து வைப்பது நல்லது.
2. மொபைல் பயன்படுத்துவதற்கான நேரத்தை அளவிட்டுக்கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு இவ்வளவுத்தான் பார்க்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் இருங்கள். சாப்பிடும்போதும், தூங்குவதற்கான நேரம் வரும்போதும் மொபைல் போன் பயன்படுத்துவதைக் கட்டாயம் நிறுத்துங்கள். வெகுநேரம் மொபைல் பயன்படுத்துவது எவ்வளவு தவறோ அதைவிட தவறு உறங்கும் நேரத்தை ஒதுக்கிவிட்டு மொபைல் பார்ப்பது. இந்தப் பழக்கத்தை மட்டும் தவிர்த்தால் உங்கள் மன உறுதியை எவராலும் உடைக்க இயலாது.
3. வேலை இல்லாத நாட்களில் வாரத்திற்கு ஒருமுறை போனை ஒதுக்கிவைத்து விட்டு மற்ற வேலைகளை செய்யுங்கள். உங்களுக்கான நேரமாக அந்நாளைக் கருதி, புத்தகம் படிப்பதோ அல்லது உங்களுக்குப் பிடித்த வேலையை செய்தோ, அந்த நாளை கழியுங்கள்.
4. உங்களுக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கும் சமூக வலைத்தளங்களில் உள்ள கணக்குகளை பின்தொடராதீர்கள். உங்களை ஊக்குவிக்கும், சிரிக்க வைக்கும் கணக்குகளை மட்டுமே பின்தொடருங்கள்.
5. தினமும் ஒரு மணி நேரமாவது மூச்சுப் பயிற்சி செய்யுங்கள். இது உங்கள் மனதை ஒருநிலைப்படுத்தவும், மனதை அமைதியாக வைத்துக்கொள்ளவும் உதவும்.
6. மிக முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், வலைத்தளங்களில் பேசுபவர்களைப் பற்றி எதுவும் தெரியாமல் நண்பர்களாக்கிக்கொள்ளாதீர்கள். அவர்கள் எப்போது ஆன்லைன் வருவார்கள், எப்போது பேசலாம் என்பது போன்ற தேவையற்ற எதிர்பார்ப்பினால், உங்கள் மனதை பலவீனம் ஆக்கிக்கொள்ளாதீர்கள். கசப்பான உண்மை என்னவென்றால் அவர்கள் உங்கள் நேரத்தை வீணாக்கும் ஒரு கருவியே. உங்கள் எதிரே இருக்கும் உறவுதான் எந்த சமயங்களிலும் உங்களுக்கு துணை நிற்கும். ஆகையால், உங்கள் வீட்டில் உள்ளவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள்.
இந்த டிஜிட்டல் உலகத்தில் அமைதியான தூக்கத்திற்கு எவ்வளவு கஷ்டப்படுகிறோம். ஆனால், இந்த முறைகளை பின்பற்றினால் அமைதியான அன்றாட வாழ்வை கஷ்டமில்லாமல் வாழலாம்.