ஜப்பானியர்களின் தீர்க்க ஆயுளுக்குக் காரணமான 8 வகை உணவுகள்!

நீண்ட ஆயுள் வாழும் ஜப்பானியர்கள்
நீண்ட ஆயுள் வாழும் ஜப்பானியர்கள்
Published on

ப்பானியர்களில் பலரும் சாதாரணமாக தொண்ணூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு அவர்களின் கடின உழைப்பும் ஊட்டச் சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்பதும்தான் முக்கியக் காரணங்கள் எனக் கூறலாம். அவர்கள் உண்ணும் உணவில் தவறாமல் இடம்பெறும் 8 வகை உணவுகள் எவை என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. மாட்ச்சா டீ: இந்த டீயில் காஃபின், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து போன்றவை மற்ற டீக்களில் இருப்பதை விட அதிகம். இதிலுள்ள கேட்டச்சின் போன்ற ஆன்டி  ஆக்ஸிடன்ட்கள் செல்களை சிதைவிலிருந்து காக்கவும், சில வகை நோய்கள் வரும் அபாயத்தைத் தடுக்கவும் உதவுகின்றன. மேலும், இந்த டீ உடம்பின் மெட்டபாலிச செயல்பாடுகள் சிறப்பாக நடைபெற உதவுகிறது. அதில் அதிகளவு கொழுப்பு எரிக்கப்பட்டு உடல் எடை குறையவும் உதவும்.

2. நொதிக்கச் செய்த உணவுகள்: சூப்களில் சேர்க்கப்படும் நொதிக்கச் செய்த சோயா பேஸ்ட் (Miso), நொதிக்கச் செய்த சோயா பீன்ஸ் (Natto), அரிசியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட தவிடு (Bran)களுடன் சேர்த்து நொதிக்கச் செய்த காய்கறிகள் (Nukazuke) போன்ற ஃபெர்மென்ட்டட் உணவுகள் ஜப்பானில் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த உணவுகளில் புரோபயோட்டிக்ஸ் அதிகம். இவை ஜீரணம் நல்ல முறையில் நடைபெறவும், சத்துக்கள் சிறப்பாக உறிஞ்சப்படவும் உதவி புரிவதால் நோய்கள் வரும் அபாயம் குறைகிறது.

3. கடல் பாசி: ஜப்பானில் கைசோ (Kaiso) எனப்படும் கடல் பாசி பல வகையான உணவுகளில் சேர்த்தும் ஸ்நாக்ஸ்ஸாகவும் உண்ணப்படுகிறது. இது குறைந்த அளவு கலோரியும் அதிகளவு நார்ச்சத்தும் கொண்டது. இதில் இரும்புச் சத்து, அயோடின், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் B12 மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் அதிகம் உள்ளன. கோம்பு, வாக்கமே, ஹிஜிகி உள்ளிட்ட வெவ்வேறு சுவையுடைய பத்து வகை கடல் பாசிகளை அவர்கள் உபயோகிக்கின்றனர்.

4. பீன்ஸ்: எடமாமே, கினாகோ (Soy powder), இனிப்பு சேர்க்காத சோயா பால் மற்றும் வீட்டில் சோயா பீன்ஸ் சேர்த்து தயாரிக்கப்படும் மிஸோ மற்றும் நாட்டோ போன்ற உணவுகள் அவர்களின் தினசரி உணவில் தவறாமல் இடம் பெறுபவை. இவ்வுணவுகளில் அதிகளவு நார்ச்சத்து, பொட்டாசியம், B வைட்டமின்கள் மற்றும் ஐசோஃபிளவோன் போன்ற பாலிஃபினால்களும் அதிகம் உள்ளன. இவை உடலில் வீக்கங்களைக் குறைக்க உதவும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் ஷாப்பிங் மனநிறைவானதாக அமையணுமா?
நீண்ட ஆயுள் வாழும் ஜப்பானியர்கள்

5. டோஃபு: இதில் புரோட்டீன் சத்து அதிகம். கொழுப்புச் சத்து குறைவு. இதை ஃபிரைடு ரைஸ், சூப், ஹம்முஸ் போன்ற பல வகை உணவுகளில் சேர்த்து உண்ணலாம்.

6. சீசேம் விதைகள் (எள்): இதை அரைத்து ஃபிரைடு ரைஸ், வெஜிடபிள் ஸ்டிர் ஃபிரை, தஹினி போன்ற உணவுகளோடு சேர்த்து உண்கின்றனர். எண்ணெய்க்கு பதில் எள் பேஸ்ட் உபயோகித்து சமைப்பதால் அதிலுள்ள முழு சத்துக்களும் கிடைக்கும். இதில் வைட்டமின் E, புரோட்டீன், நார்ச்சத்து, கால்சியம், மக்னீசியம் மற்றும் கொழுப்பின் அளவை சமநிலையில் வைத்துப் பராமரிக்க உதவும் பைட்டோஸ்டெரால்ஸ் என்ற சத்தும் அதிகளவில் உள்ளன.

7. ஷீட்டேக் மஷ்ரூம்: இந்த மஷ்ரூமில் புரோட்டீன், வைட்டமின் D, B ஆகிய சத்துக்கள் அதிகம். மேலும், இதில் வீக்கங்களை எதிர்த்துப் போராட உதவும் லென்ட்டினன் என்ற பாலிசாச்சரைட் சத்தும் உள்ளது. இதை சூப், சைட் டிஷ் போன்ற பல வகை உணவுகளில் சேர்த்து சமைத்து உண்ணலாம்.

8. இஞ்சி: இது ஜப்பானில் மட்டுமின்றி, உலகின் பல நாடுகளிலும் இதிலுள்ள பல வகை நன்மைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது உடலில் வீக்கங்களைக் குறைக்கும்; சிறப்பான மெட்டபாலிசத்துக்கு உதவும்; சளியை குணப்படுத்தும். ஜப்பானியர் இதை சூப், சாஸ், சாலட் டிரஸ்ஸிங், டாப்பிங்ஸ், மரினேட், ஸ்வீட் செய்வது போன்ற பல வகை உணவுகளில் சேர்த்து பயன்படுத்தி வருகின்றனர். உமேபோஷி எனப்படும் பிக்கிள்ட் பிளம்ஸ்ஸுடன் இஞ்சி துருவல் சேர்த்து செய்யப்படும் ஒரு ஸ்நாக்ஸ்ஸை அனைவரும் விரும்பி வருடம் முழுவதும் உண்கின்றனர். இது நோய்களுக்கு எதிராகப் போராடுவதாக நம்புகின்றனர். இஞ்சி டீயும் அனைவராலும் அருந்தப்படும் ஒரு பானம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com