கோடையில் அவசியம் தவிர்க்கவேண்டிய 8 உணவுகள்!
கோடைக்காலத்தில் உடலின் வெளிப்புறம் மட்டுமின்றி, உடலுக்குள்ளும் வெப்பம் உண்டாவது இயல்பு. இந்தக் கோடைக்காலத்தில் உடலுக்கு எரிச்சல் மற்றும் வெப்பத்தைத் தரும் சில உணவுகளைத் தவிர்க்க வேண்டியது அவசியம். அதுபோன்று கோடைக் காலத்தில் அவசியம் தவிர்க்க வேண்டிய எட்டு உணவுகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
* அதிகமான மசாலா பொருள்கள் சேர்த்துத் தயாரிக்கப்பட்ட உணவுகள், காரம் அதிகமுள்ள சாஸ் வகைகள் மற்றும் ரெட் சில்லி அல்லது ரெட் சில்லி பவுடர் சேர்த்து சமைத்த உணவுகளை அவசியம் தவிர்க்க வேண்டும்.
* பொரித்த உணவுகள் வயிற்றுக்குள் சென்று ஒருவித பாரமான உணர்வைத் தருவதோடு, அஜீரணத்துக்கும் வழி வகுக்கும். மேலும் உடல் வெப்பத்தையும் இவை கூட்டும்.
* அதிகளவு ரெட் மீட் உண்பது உடலின் உள்புற வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும். எனவே, கோடைக் காலத்தில் குறைந்த அளவு புரதம் உள்ள உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பது நன்மை தரும்.
* துரித உணவுகள், பதப்படுத்தப்பட்டு டின்களில் அடைத்து வரும் உணவுகள் மற்றும் பாக்கெட்களில் அடைக்கப்பட்டு வரும் ஸ்நாக்ஸ் ஆகியவை தவிர்க்கப்பட அல்லது மிகக் குறைவாக உண்ணப்பட வேண்டியவையாகும்.
* ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கப் காபி அருந்துவது உடலுக்கு சுறுசுறுப்பு தரும். அந்த அளவுக்கு மேல் எடுத்துக்கொண்டால் அதிலுள்ள காஃபின் டீஹைட்ரேஷன் உண்டாகவும், உடலுக்குள் வெப்பம் அதிகரிக்கவும் செய்யும்.
* கோடைக் காலத்தில் டீஹைட்ரேஷன் மற்றும் வயிற்றுக்குள் உண்டாகும் கோளாறுகளைத் தடுக்க ஆல்கஹாலை குறைந்த அளவில் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
* பழங்களும் பழச்சாறுகளும் ஊட்டச்சத்து நிறைந்தவையாக இருந்தபோதும், ஆரஞ்சு மற்றும் லெமன் போன்ற சிட்ரஸ் வகைப் பழங்கள் வயிற்றுக்குள் எரிச்சலை உண்டுபண்ணக் கூடும். எனவே, உஷ்ணம் அதிகம் உள்ள காலத்தில் இவற்றைத் தவிர்ப்பது நலம்.
* உஷ்ணம் அதிகம் உள்ள நேரங்களில் கார்பனேட்டட் பானங்களை அருந்துவதால் வயிற்றில் வீக்கம் போன்ற கோளாறுகள் உண்டாகவும் டீஹைட்ரேஷன் ஆகும் வாய்ப்பும் அதிகமாகும்.
எனவே, இந்த கோடை சீசன் முடியும் வரை மேற்கூறிய உணவுகளைத் தவிர்த்து, உடல் நிலையில் சீரியஸான பாதிப்புகள் எதுவும் நேராமல் உடலைப் பாதுகாப்போம்.