
அளவுக்கு அதிகமாகவுள்ள உங்கள் எடையை குறைக்க முடியவில்லையே என வருத்தமா? கவலையை விடுங்க.. இப்பதிவில் கூறப்பட்டுள்ள 8 விதமான பழக்க வழக்கங்களை பின் பற்றுங்க... பிறகு பாருங்க, எடையை!!
1. சாப்பிடும்போது ஒவ்வொரு வாய் உணவையும் வாயில் போட்ட பின் அதை நன்கு மென்று விழுங்குங்க. உணவை மெல்வதால் ஜீரணம் சுலபமாவது மட்டுமல்ல. மெல்வதற்கு நாம் எடுத்துக் கொள்ளும் நேரத்தில், மூளை வயிறு நிறைந்து விட்டதை பதிவு செய்து கொண்டு மேற்கொண்டு உபரியாக உணவு உட்கொள்வதைத் தடுத்து நிறுத்தும்.
2. உணவு உட்கொள்ள பெரிய சைஸ் பிளேட்டை எடுக்காமல் சிறிதான ஒன்றை எடுத்து, அதில் உணவை உண்ண ஆரம்பித்தால் மூளை நாம் போதுமான அளவு சாப்பிட்டு விட்டோம் என்றெண்ணி அதோடு நிறுத்திக் கொள்ளும்படி கட்டளையிடும். இதனால் 'போர்ஷன் கண்ட்ரோல்' முறை நடைமுறைப் படுத்தப்பட்டு விடுகிறது.
3. சமைத்த உணவை டைனிங் டேபிளில் கொண்டு வந்து வைத்து தட்டில் பரிமாறி உண்ணும் பழக்கத்தை மாற்றி கிச்சனிலிருந்து தட்டில் போட்டுக் கொண்டு வந்து சாப்பிட்டால், மீண்டும் ஒரு முறை கிச்சனுக்குப் போய் உணவை எடுத்து வர சோம்பல் பட்டு ஒரு முறையோடு நிறுத்திக் கொள்ளலாம்.
4. சாப்பிடுவதற்கு 20-30 நிமிடங்களுக்கு முன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது அனாவசியமாக ஸ்னாக்ஸ் சாப்பிடுவதை தடுத்து நிறுத்தும். ஏனெனில் தாகத்தை தவறுதலாக பசி என நினைக்க வாய்ப்புண்டு.
5. முதலில் நார்ச்சத்து மிக்க சாலட், பின் ப்ரோட்டீன் நிறைந்த உணவு, அதற்குப் பின் கார்போஹைட்ரேட் உள்ள உணவு என உணவுகளை வரிசைப்படுத்தி உட்கொண்டால் சீக்கிரமே வயிறு நிறைந்த உணர்வு உண்டாகி அதிகமாக சாப்பிடுவதை நிறுத்திவிடுவோம்.
6. ஒரு வேளை உணவை சாப்பிடாமல் தவிர்ப்பது அடுத்த வேளையில் மிக அதிகம் சாப்பிடும்படி தூண்டி விடும். எனவே, முறையாக குறிப்பிட்ட இடைவெளி விட்டு உணவை எடுத்துக்கொள்வது இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தவும், எடை ஏறாமல் பராமரிப்பதற்கும் உதவும்.
7. எண்பது சதவிகிதம் வயிறு நிறம்பியதும் உண்பதை நிறுத்திவிடுவது நலம். ஏனெனில் உணவு உண்ணும் செயல் முடிந்து விட்டது என்பதை மூளை பதிவு செய்து கொள்ள சில நிமிட நேரம் பிடிக்கும். அதற்குள் வயிறு நிறைய அடைப்பதை தவிர்த்து விடலாம்.
8. 'பசித்துப் புசி' என்ற பழமொழியை அப்படியே பின்பற்றுதல் ஆரோக்கியம் தரும். போரடிக்குது, மனநிலை சரியில்லை, உணவு தயாராகி விட்டது போன்ற கரணங்களுக்கெல்லாம் தட்டு முன் அமர்வது சரியான பழக்கமல்ல.