நம்மில் பலருக்கும் நம் குழந்தை மற்ற குழந்தைகளை விட மெலிந்து காணப்படுவதாகவே தோன்றும். நம் குழந்தை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்புடனும் இருந்தால் கூட, இந்த உணர்வு மாறாது. நம் குழந்தையும் சதைப் பிடிப்புடன் கொழு கொழு தோற்றம் தர உதவும் 8 உணவுகள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. குழந்தைகளின் எடை அதிகரிக்க உதவும் பழங்களில் அவகோடாவும் ஒன்று. அதிகமான கலோரி அளவும் ஆரோக்கியம் தரும் கொழுப்புகளும் அடங்கியது அவகோடா. இவை இரண்டும் உடல் எடை கணிசமான அளவு அதிகரிக்க உதவும்.
2. பீநட் பட்டர், ஆல்மன்ட் பட்டர், முந்திரி பட்டர் போன்ற நட் பட்டர்களில் கலோரி அளவு அதிகம். குழந்தையின் உடல் எடை அதிகரிக்க விரும்பும் பெற்றோர் தங்கள் குழந்தைக்கு இந்த பட்டர்களில் ஒன்றை தினசரி உணவுடன் சேர்த்து உண்ணக் கொடுப்பது நன்மை தரும்.
3. பால், தயிர், சீஸ் போன்ற உணவுகளில் புரோட்டீன், கால்சியம் மற்றும் உடலுக்குத் தேவையான மற்ற ஊட்டச் சத்துக்களும் அதிகம் உள்ளன. கால்சியம் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் நல்ல முறையில் உதவும்.
4. உலர் பழங்கள் மற்றும் கொட்டைகளில் கலோரி அளவும், ஊட்டச் சத்துக்களும் அதிகம். இவற்றை குழந்தைக்கு ஸ்நாக்ஸாக கொடுக்கும்போது குழந்தையின் சக்தியின் அளவு கூடும்.
5. பொதுவாக ஓட் மீல் எடைக் குறைப்பிற்கு உதவக்கூடிய ஓர் உணவு. இருந்தபோதும் அதில் கொழுப்பு நீக்கப்படாத முழுமையான பால், ஊட்டச்சத்து நிறைந்த கொட்டைகள் மற்றும் உலர் பழங்கள் சேர்த்து பாயசம் செய்து குழந்தைக்குக் கொடுக்கும்போது உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உண்டாகும்.
6. ஸ்வீட் பொட்டேட்டோவில் ஏராளமான வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன. இதை குழந்தைக்கு உண்ணக் கொடுப்பதால் ஆரோக்கியமான முறையில் குழந்தையின் எடை அதிகரிக்கும்.
7. முட்டையில் தரமான புரோட்டீனும் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கொழுப்புகளும் உள்ளன. வளரும் இளம் குழந்தைகளுக்கு உணவில் முட்டையை சேர்த்துக் கொடுப்பதால் அவர்களின் எடை அதிகரிக்கவும், தசைகளின் ஆரோக்கியம் மேம்படவும் உதவும்.
8. முழு தானியங்களில் காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ், நார்ச்சத்து மற்றும் தேவையான கனிமச் சத்துக்களும் அதிகம் உள்ளன. முழு தானியங்களால் தயாரிக்கப்பட்ட பிரட் மற்றும் பாஸ்தா போன்ற உணவுகளை குழந்தைக்குக் கொடுப்பதால் அவர்களின் உடல் எடை அதிகரிக்கும்.
மேற்கூறிய உணவுகளை அடிக்கடி குழந்தைகளுக்கு உண்ணக் கொடுத்து அவர்களின் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் பராமரிக்க உதவுவோம்!