நிறைய பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் வயிற்று வலியும் மாதவிடாய் பிடிப்புகளும் ஏற்படுகின்றன. இந்த நேரத்தில் கீழ் வயிறு அல்லது இடுப்பு பகுதியில் தசைப்பிடிப்புகளை ஏற்படுத்தும். இந்தப் பிடிப்புகளை நீக்குவதற்கும் வயிற்று வலியை போக்குவதற்கும் 9 சிறந்த பானங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. தண்ணீர்: மாதவிடாய் நேரங்களில் உடல் நீரேற்றமாக இருப்பது மிகவும் அவசியம். குறைவாக தண்ணீர் குடிக்கும்போது மாதவிடாய் பிடிப்புகளை அதிகரிக்க செய்யும். எனவே, பெண்கள் தங்கள் உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடிப்பது உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பதுடன் உடல் செயல்பாடுகளை சரியாக பராமரிக்கவும் உதவும்.
2. மூலிகை தேநீர்: இந்தத் தேநீரில் பால் பயன்படுத்தாமல் குடிநீரில் நாட்டு கொத்தமல்லி, சுக்கு, சீரகம், மிளகு, சித்தரத்தை, துளசி, தூதுவளை, ஏலக்காய், பதிமுகம் போன்றவற்றை பொடி செய்து தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்துப் பருக வேண்டும். இந்தத் தேநீர் தசைகளை தளர்த்தவும் வீக்கத்தை குறைக்கவும் உதவும்.
3. இஞ்சி தேநீர்: இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் கருப்பை சுருக்கங்களுக்கு எதிராக செயல்பட்டு மாதவிடாய் வலியைப் போக்க உதவும்.
4. இளம் சூடான எலுமிச்சை நீர்: இதில் உள்ள ph ஹைட்ரஜனின் சக்தி அளவை சமப்படுத்தவும் நீரேற்றத்தை ஊக்குவிக்கவும் உதவும். மேலும், எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி சத்து அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதால் வயிற்று வலியையும் வீக்கத்தையும் குறைக்க உதவும்.
5. மஞ்சள் சேர்த்த பால்: மஞ்சளில் குர்குமின் உள்ளது. இது சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்ட ஒரு கலவை ஆகும். பாலுடன் மஞ்சள் கலந்து குடிக்கும்போது வீக்கத்தை குறைக்கவும் மாதவிடாய் வயிற்று வலியை குறைக்கவும் உதவும்.
6. பசும் பால்: எலும்பு ஆரோக்கியத்துக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றின் நல்ல ஆதாரமாக பால் உள்ளது. வெதுவெதுப்பான பால் குடிப்பது தசைகளை தளர்த்தவும் வலியை குறைக்கவும் உதவும்.
7. செர்ரி சாறு: செர்ரிகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி சேர்மங்களான அந்தோசயினின்கள் உள்ளன. அவை வீக்கத்தைக் குறைக்கவும் மாதவிடாய் வலியைக் குறைக்கவும் உதவும்.
8. கிரீன் டீ: இது ஒருவரின் எடை குறை குறைப்பதற்கு மட்டும் பயன்படுவது இல்லை. மாதவிடாய் வலியை குறைக்கவும் உதவுகிறது. கிரீன் டீ குடிக்கும்போது அது வீக்கத்தை குறைத்து மாதவிடாய் அசௌகரியத்தை எளிதாக்குகிறது. இது கேடசின்களைக் கொண்டுள்ளது, இது அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்குப் பெயர் பெற்றது.
9. இலவங்கப்பட்டை தேநீர்: இலவங்கப்பட்டை தேநீர் மாதவிடாய் பிடிப்பைப் போக்க உதவும், ஏனெனில், இது அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிஸ்பாஸ்மோடிக் பண்புகளைக் கொண்டுள்ளது. இது வீக்கம் மற்றும் தசை சுருக்கங்களை குறைப்பதன் மூலம் நிவாரணம் அளிக்கும்.
இந்த பானங்களை நீங்கள் விரும்பியபடி நாள் முழுவதும் உட்கொள்ளலாம். குறிப்பாக, மாதவிடாய் காலத்தில் உடல் அசௌகரியத்தைத் தணிக்க தேவையான அளவு அவற்றைக் குடிக்கவும்.