ஒருவருக்கு தைராய்டு பிரச்னை இருந்து, அவர்கள் அதற்கான மருந்துகளை எடுத்துக்கொண்டால் பின்வரும் 9 உணவுகளை அவர்கள் தவிர்க்க வேண்டும்.
1. சோயா வகை உணவுகள்: இவற்றில் உள்ள ஒரு மூலப்பொருள் தைராய்டு ஹார்மோன்களை அதிகம் பாதிக்கிறது. சோயா கலந்த உணவுகளான டோபு, சோயா பால் போன்றவை தைராய்டு பாதிப்பை அதிகப்படுத்தும்.
2. க்ரூஸிஃபெரஸ் காய்கறிகள்: புரோக்கோலி, காலிஃபிளவர், முட்டைக்கோஸ், போக் சோய், அருகுலா, பிரஸ்ஸல்ஸ் முளைகள், காலார்ட்ஸ், வாட்டர்கெஸ் மற்றும் முள்ளங்கி ஆகியவை உள்ளடக்கிய ஒரு சிறப்பு காய்கறிக் குழுவிற்கு க்ரூஸிஃபெரஸ் காய்கறிகள் என்று பெயர். இவற்றை அதிக அளவில் உண்ணும்போது உடல் நல பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, தைராய்டு கோளாறு உள்ளவர்கள் இதை மிகக் குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும்.
3. க்ளூட்டன் சேர்ந்த உணவுகள்: க்ளூட்டன் சேர்ந்த உணவு வகைகளும் தைராய்டு பாதிப்பு உள்ளவர்களுக்கு கெடுதலைத் தரும். பசையம் சேர்ந்த உணவுகளான கோதுமை, பார்லி போன்றவற்றை வெகு குறைந்த அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும் அல்லது இவற்றை தவிர்த்தாலும் நலம்.
4. பதப்படுத்தப்பட்ட உணவுகள்: மிக அதிகமாகப் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் உண்ணவே கூடாது. பதப்படுத்தப்பட்ட சர்க்கரை, ஆரோக்கியம் இல்லாத கொழுப்பு வகைகள் தைராய்டு சுரப்பிகள் வேலை செய்வதை பாதிக்கும். எனவே, துரித உணவு வகைகள் சர்க்கரை சேர்க்கப்பட்ட தீனிகள் பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள், செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்திய உணவு வகைகளை அறவே தவிர்க்க வேண்டும்.
5. அதிகமான அயோடின் உள்ள உணவுகள்: அளவான அயோடின் தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்திக்கு அவசியம். ஆனால், அதுவே அளவு மீறிபோனால் அது சிக்கலில் கொண்டு விடும். எனவே, அதிக அளவு அயோடின் சேர்க்கப்பட்ட உணவுகளை அவர்கள் தவிர்க்க வேண்டும். அயோடின் நிறைந்த சாதாரண உப்பு, கடல் உணவுகள், முட்டைகள் போன்றவை ஹைப்பர் தைராய்டிசத்தை மோசமாக்கும்.
6. பால்: கால்சியம் நிறைந்த பால், தைராய்டு மருந்தை உடல் உறிஞ்சுவதை தடுக்கிறது. பால் மற்றும் தைராய்டு மருந்துகளை உட்கொள்வதற்கு இடையே குறைந்தபட்சம் 4 மணி நேர இடைவெளியை உறுதி செய்ய வேண்டும். கொழுப்பு நீக்கப்பட்ட பாலை எடுத்துக் கொண்டால், கால்சியம் உள்ளடக்கம் இன்னும் அதிகமாக இருக்கும்.
7. மரவள்ளிக்கிழங்கு: இந்த வேர் காய்கறி நச்சுகளை உருவாக்குகிறது. இது ஏற்கெனவே செயல்படாத தைராய்டு சுரப்பியை எதிர்மறையாக பாதிக்கிறது.
8. காஃபின்: காஃபின் அதிக உடல் வெப்பநிலை, படபடப்பு மற்றும் பதற்றம் போன்ற அறிகுறிகளை மோசமாக்கும். எனவே, காபி, டீ, எனர்ஜி பானங்கள் மற்றும் சில சோடாக்கள் போன்ற காஃபின் கொண்ட பானங்களை குறைக்க அல்லது தவிர்க்க வேண்டும்.
9. ஃப்ளோரைடு கொண்ட உப்பு மற்றும் நீர்: ஃப்ளோரைடு கலந்த உப்பு அல்லது தண்ணீரை உணவில் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில், இது ஹைப்போ தைராய்டு நோயாளிகளுக்கு நச்சுத்தன்மையை ஏற்படுத்தும்.