

குளிர்காலத்தில் இதமாக தூங்க பலர் வீடுகளில் ரூம் ஹீட்டரை (Room Heater) பயன்படுத்துகிறார்கள். முன்பெல்லாம் குளிர் பிரதேசத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட ரூம் ஹீட்டர்கள், இப்போது மூன்றாம் நிலை நகரங்கள் வரை பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. ஹீட்டர்கள் அறையை சூடாக்குவதன் மூலம் கதகதப்பாக வைத்திருக்கின்றன.
இதனால் மக்கள் அதை குளிர் மற்றும் மழைக் காலங்களிலும் அடிக்கடி பயன்படுத்துகிறார்கள். அதிலும் குறிப்பாக வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் சளி, இருமல் உள்ளவர்கள் அடிக்கடி ஹீட்டரைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், ஹீட்டரின் பயன்பாட்டில் சில உடல்நலப் பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
வறட்சியை உண்டாக்கும் ஹீட்டர்:
இரவு முழுக்க ஹீட்டரை ஆன் செய்துவிட்டு தூங்குவது நிறைய உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. ஹீட்டர் அறையின் ஈரப்பதத்தைக் குறைத்து காற்றை உலர்த்துகிறது. ஈரப்பதம் குறைவதால் சருமம் வறண்டு போய் விடும். மேலும் தொண்டையும் வறண்டு போகலாம். உதடுகளில் வெடிப்பு ஏற்படலாம். இது உடலில் நீரிழப்பு அபாயத்தை ஏற்படுத்துகிறது. அறையின் வறண்ட தன்மை கண்ணில் அரிப்பு, மூக்கில் அரிப்பு, தலை முடிப்பு ஆகியவற்றையும் ஏற்படுத்தும்.
நீண்ட நேர ஹீட்டர் பயன்பாடு நீரிழப்பை அதிகரித்து தலைவலி, தலைச்சுற்றல் மற்றும் சோர்வு போன்ற உடல்நலக் குறைவை அதிகரிக்கும். வறண்ட காற்றில் தொடர்ந்து தூங்குவது தூக்கத்தின் தரத்தையும் பாதிக்கும். ஆஸ்துமா, ஒவ்வாமை அல்லது சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு ஹீட்டர் இன்னும் தீங்கு விளைவிக்கும்.
நுரையீரலை பாதிக்கும் ஹீட்டர்:
ஹீட்டர் பயன்பாட்டில் உள்ள அறையில், வறண்ட காற்றை சுவாசிக்கும் போது, நமது நுரையீரலில் உள்ள காற்றுப் பாதைகள் சுருங்கி எரிச்சலடைகின்றன. இதனால் சுவாசிப்பது சிரமமாக மாறுகிறது. மேலும் வறண்ட காற்று நுரையீரலில் உள்ள சளியை இறுக்குகிறது. இந்த சூழல் காற்றை சுத்தம் செய்யும் நுரையீரலின் திறனைக் குறைத்து, தொற்று அபாயத்தை அதிகரிக்கிறது.
ஏற்கனவே ஆஸ்துமா அல்லது சுவாசக் கோளாறு உள்ளவர்கள் சூடான காற்றால் பாதிக்கப் படுகிறார்கள். இது இரவில் தூங்கும் போது மூச்சுத் திணறலுக்கு வழிவகுக்கும். சூடான மற்றும் வறண்ட காற்றை தொடர்ந்து சுவாசிப்பது நுரையீரலைப் பாதிக்கிறது. இந்த பாதிப்பின் ஆரம்பக் கால அறிகுறிகள் பெரும்பாலும் சளி அறிகுறிகளைப் போலவே சாதரணமாக இருக்கும். இதனால் அலட்சியமாக செயல்பட்டு அதிக பாதிப்பைக் கூட அடையலாம்.
ஹீட்டரை எப்படி பயன்படுத்தலாம்? நிபுணர்கள் கூறுவது என்ன?
இரவில் ஹீட்டரைப் போட்டுக் கொண்டு தூங்குவதில் எந்தத் தவறு இல்லை. ஆனால், அதை நீண்ட நேரம் பயன்படுத்த அவசியம் இல்லை. அறை முழுக்க சூடாகிய உடன் அதை நிறுத்தி விடலாம். மீண்டும் அதிக குளிர் உள்ள நேரங்களில் மட்டும், குறைந்த நேரம் போட்டு பின்னர் நிறுத்திக் கொள்ளலாம். இதனால் வெப்பநிலை நேரம் ஆக ஆக குறைந்து ஈரப்பதம் காற்றில் நிலைத்து நிற்கும்.
அறைக் காற்று முழுமையாக வறண்டு போவதைத் தடுக்க, ஹீட்டருக்கு அருகில் ஒரு வாளி தண்ணீரை வைத்திருக்கலாம். இது காற்றில் ஈரப்பதத்தை பராமரிக்க உதவுகிறது. மேலும் நீரிழப்பு அபாயத்தையும் குறைக்கிறது. தூங்கும் முன்னர் கை, கால், முகத்திற்கு மாய்ஸ்சரைசரை (Moisturizer) தடவிக் கொள்ளலாம். போதுமான அளவு தண்ணீரைக் குடித்து உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளுங்கள்.
(முக்கிய குறிப்பு: இந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)