மழைக்காலம் வந்துவிட்டாலே சளி, இருமல், காய்ச்சல் போன்ற பருவ கால நோய்களின் பாதிப்பு அதிகமாக இருக்கும். குறிப்பாக தொடர்ச்சியான இருமல் என்பது பலரையும் பாதிக்கும் ஒரு பொதுவான உடல் பிரச்சனையாகும். இது பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். வைரஸ் தொற்று, பாக்டீரியா தொற்று, அலர்ஜி, அமிலத்தன்மை போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாகும். தொடர்ச்சியான இருமல் தூக்கத்தை பாதித்து, தினசரி செயல்பாடுகளைக் குறைத்து, வாழ்க்கை தரத்தை கெடுக்கக்கூடும். இதை எளிதான வீட்டு வைத்திய முறைகளைப் பின்பற்றி சரி செய்யலாம்.
தொடர் இருமலை சரி செய்யும் வீட்டு வைத்திய முறைகள்:
உப்பு நீரைப் பயன்படுத்தி கொப்பளிப்பது தொண்டை வறட்சியை போக்கி பாக்டீரியாக்களை கொல்ல உதவும். இது தொண்டை புண்களை குணப்படுத்தி இருமலின் தாக்கத்தைக் குறைக்கும்.
தேன் ஒரு இயற்கையான இருமல் போக்கி. இது தொண்டை வழியில் ஒரு பாதுகாப்பு அக்கை உருவாக்கி எரிச்சலைக் குறைக்கும். எனவே, தேனை வெறும் வயிற்றில் அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம்.
இஞ்சி தொண்டையின் வீக்கத்தைத் தனித்து இருமலைக் குறைக்கும். இஞ்சியை நேரடியாகவோ அல்லது சாறு எடுத்துக் குடிப்பது நல்ல பலனை தரும்.
துளசி இலைகள் பல மருத்துவ குணங்கள் கொண்டவை. இது இருமல், சளி போன்ற பிரச்சனைகளைப் போக்க உதவும். துளசி இலைகளை கொதிக்க வைத்து குடிப்பது மூலமாக, இருமலை குணப்படுத்தலாம்.
எலுமிச்சையில் உள்ள விட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து இருமலைக் குறைக்கும். எனவே, உங்களுக்கு தொடர்ச்சியாக இருமல் இருந்தால் எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து குடிப்பது நல்லது.
பால், தொண்டை வறட்சியை போக்கி இருமலைக் குறைக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்றது. இதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து குடிப்பது தொண்டைக்கு இதமாக இருக்கும்.
வெங்காயத்தின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருமல் மற்றும் சளியை குறைக்கும். வெங்காயத்தை சூப் அல்லது உணவில் சேர்த்து சாப்பிடுவதன் மூலமாக இருமலின் தாக்கத்தை குறைக்கலாம்.
பூண்டு நமது நோயெதிப்பு சக்தியை அதிகரித்து தொடர்ச்சியான இருமலை குறைக்க உதவும். எனவே, பூண்டை பச்சையாகவோ அல்லது உணவில் சேர்த்து சாப்பிடலாம்.
தொடர்ச்சியாக இருமல் ஏற்படுவது தொந்தரவை ஏற்படுத்தும் பிரச்சனையாகும். மேலே குறிப்பிட்ட வீட்டு வைத்திய முறைகளைப் பின்பற்றி இருமலை நீங்கள் குறைக்கலாம் என்றாலும், நீண்ட காலத்திற்கு இது நீடித்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம். ஏனெனில், தொடர் இருமல் சில தீவிர நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்.