மழை வந்தாலே உடனே இருமல், சளி பிரச்னையும் கூடவே வரத் தொடங்கிவிடும். அதுவும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கேட்கவே வேண்டாம். முக்கொழுகுதல், இருமல், சளி என அவஸ்தைப்படுவார்கள். இதற்கு உடனே டாக்டரிடம் செல்லாமல், எளிய வீட்டு வைத்தியத்தை செய்து பார்த்தாலே இரண்டே நாட்களில் மார்பில் கட்டியுள்ள சளி வெளியில் வந்து விடும். இரவில் இருமல் நின்றுபோய் நன்கு உறங்குவார்கள். இனி, சளி, இருமலைப் போக்கும் கஷாயத்தை எப்படித் தயார் செய்து என்று பார்ப்போம்.
சித்தரத்தை பொடி - 1 ஸ்பூன், திப்பிலி பொடி - அரை ஸ்பூன், மிளகு பொடி - 1 ஸ்பூன், மஞ்சள் தூள் - 1 ஸ்பூன், ஓமம் - 1 ஸ்பூன், துளசி - ஒரு கைப்பிடியளவு, கற்பூரவல்லியிலை - 2 கைப்பிடியளவு. சித்தரத்தை மற்றும் திப்பிலி பொடிகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். பொடி இல்லாவிட்டால் சித்தரத்தை, திப்பிலி வாங்கி நன்கு நசுக்கி தட்டி போடவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் இரண்டு கைப்பிடி கற்பூரவல்லி இலை, ஒரு கைப்பிடி துளசி, சித்தரத்தை பொடி, திப்பிலி பொடி, மிளகு, மஞ்சள் தூள், ஓமம் ஆகியவற்றை சேர்த்து நான்கு கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும். நன்கு கொதித்து பாதியாக வற்றியதும் வடிகட்டி சிறிது பால், பனங்கற்கண்டு அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து பருகக் கொடுக்கலாம். இரண்டு நாட்களுக்கு மூன்று வேளை கால் கப் அளவிற்கு இதைப் பருக, இருமல், உடல் வலி, சளி பிரச்னை சரியாகும். நெஞ்சு சளியும் வெளியேறிவிடும். துளசி, கற்பூரவல்லி ஆகியவை சளி, இருமலுக்கு சிறந்த மூலிகை இலைகள் என்பது குறிப்பிடத்தக்கது.