நம் வாழ்வில் ஏற்படும் பல பிரச்னைகளுக்கு மன அழுத்தமே காரணமாக இருக்கிறது. மன அழுத்தம் பல்வேறு சரும பிரச்னைகள் தோன்றுவதற்கும் அடிப்படையாக அமைகிறது. முகத்தில் அதிகப்படியான முகப்பருக்கள் தோன்றுவதற்கும் மன அழுத்தமே காரணமாக உள்ளது. முகத்தில் ஏற்படும் இந்த பருக்களால், முகத்தில் தழும்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களுக்கு மன அழுத்தம் காரணமாக முகப்பருக்கள் தோன்றியுள்ளதென்றால், மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலமாக முகப்பருக்களை எளிதாக நீக்க முடியும்.
ஆராய்ச்சிகளின்படி ஒருவரது மன அழுத்தம் குறைய போதுமான அளவு தூக்கம் அவசியமாகும். உங்களுக்கு சரியான தூக்கம் இல்லாமல் இருந்தால், அது மன அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும். இதனால் உடலில் வெப்பம் அதிகரித்து முகத்தில் முகப்பருக்களை உண்டாக்குகிறது. எனவே, தினசரி குறைந்தது ஏழு மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் மிகவும் அவசியம்.
தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலமாக உங்கள் வாழ்வில் பல நன்மைகள் ஏற்படுகிறது. உடற்பயிற்சி செய்வதால் உடல் மட்டும் வலுவடைவதில்லை, மனமும் திடமாகிறது. உங்களுடைய மன அழுத்தத்தை போக்கும் மிகப்பெரிய சக்தி உடற்பயிற்சிக்கு உண்டு. மன அழுத்தத்தை குறைக்கவும் வியர்வை மூலம் நச்சுக்களை நீக்கி இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உடற்பயிற்சி அவசியம். உடற்பயிற்சி அதிகம் செய்ய முடியாதவர்கள் நடை பயிற்சி, யோக போன்றவற்றை செய்யலாம்.
உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் உடலில் நீர்ச்சத்து மிகவும் அவசியம். எனவே, தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். உங்கள் சருமத்தை நீங்கள் பளபளப்பாக வைத்திருக்க விரும்பினால் தினசரி எட்டு கிளாஸ் அளவுக்கு தண்ணீர் குடியுங்கள்.
மேலும், கற்றாழை ஜெல் உங்கள் சரும ஆரோக்கியத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இது மன அழுத்தத்தால் ஏற்படும் பருக்களைப் போக்குகிறது. கற்றாழை ஜெல்லை தினசரி உங்கள் முகத்தில் தடவினால் சரும பிரச்னைகள் குறைய வாய்ப்புள்ளது. இதில் அதிகப்படியான ஆன்ட்டி மைக்ரோபியல் பண்புகள் உள்ளதால், சருமப் பிரச்னைகளை விரைவாக குணப்படுத்தும்.
இறுதியாக, நல்ல உணவுப் பழக்கம் சரும ஆரோக்கியத்தை சிறப்பாக மேம்படுத்தும். காய்கறிகள், பழங்கள் மற்றும் பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். மன அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து இது உங்களை காக்கிறது. இத்துடன் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரையை குறைக்க வேண்டும். இவை முகப்பருக்களை தூண்ட வாய்ப்புள்ளது.