சந்தன மரத்திற்கு அடுத்தபடியாக மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற மரம் அகில். பல வகை நோய்களை குணப்படுத்தக்கூடிய அகில், சந்தன மர வகையைச் சேர்ந்த ஒன்றாகும்.
கட்டமைப்பு உடலுக்கு அகில்: அகில் கட்டையை பசும்பால் விட்டு நன்றாக சந்தனம் அரைப்பது போல அரைத்து அந்த விழுதை உடல் சருமத்தில் தொடர்ந்து பூசி வந்தால் சருமத்தின் சுருக்கம் அகன்று விடும். ஊளைச்சதை எனப்படும் அதிகச்சதை போட்ட உடலைப் பெற்றவர்கள் இந்த அகில் கட்டை விழுதை தொடர்ந்து பூசி வந்தால் சதை குறைந்து இறுகி, உடல் நல்ல கட்டமைப்பாகக் காட்சியளிக்கும். சரியானபடி பக்குவம் செய்து சாப்பிட்டால் நரை, திரை போன்ற முதுமைகால சரும குறைபாடுகளையும் அகற்றி சருமத்தை மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.
வீக்கத்தை குறைக்கும்: அகில் உடலில் எந்தப் பகுதியில் வீக்கம் இருந்தாலும் அதை குறைக்கும் சக்தி பெற்றது. உடல் சோர்வினை உடனே போக்கும் இயல்பும் இதற்கு உண்டு. ஒற்றைத் தலைவலி, சிலவகை காய்ச்சல், பொதுவான வாத நோய்கள், படை மற்றும் சரும நோய்கள், வாந்தி போன்ற நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் அகிலுக்கு உண்டு.
கல்லீரல் நோய்களை குணப்படுத்தும்: கல்லீரலில் பித்தநீரைப் பெருக்கும் ஆற்றலும் அதனிடம் அமைந்திருக்கிறது. அகில் கட்டையை நன்றாகக் கொளுத்தி சிறிது எரிந்த பின்னர் நெருப்பை ஊதி அணைத்து விட்டு அதிலிருந்து வரும் புகையை மட்டும் மூக்கு, வாய் வழியாக உள்ளுக்கு இழுத்தால் கல்லீரல் தொடர்பான வியாதிகள் குணமாகி விடும். வாந்தி ஏற்படும் பொழுது இந்த புகையை பிடித்தால் வாந்தி நின்று விடும்.
சுவாச கோசத்தில் ஏற்படக்கூடிய அழற்சியும் சமன்படும். உடலில் காயங்கள் ஏற்பட்டிருந்தால் அதன் மீது அகில் புகை படுமாறு செய்தால் காயம் வெகு விரைவில் குணமாகிவிடும். அகில் கட்டை தைலம் மூக்கு, தொண்டை, காது போன்ற உறுப்புகளின் உட்புறத்தில் ஏற்படக்கூடிய பல நோய்களை அகற்றும். தலைவலியையும் குணமாக்கும்.
வாசனைப் பொருட்கள் மற்றும் அதன் பயன்பாடுகள்: அகில் மரத்துண்டுகளை சிறு சிறு பகுதிகளாக நறுக்கி கொதிநீரில் போட்டுக் கொதிக்க வைத்தால் அதிலிருந்து நறுமண எண்ணெய் பொருள் வெளிவரும். இவை பிரித்தெடுக்கப்பட்டு ‘அகர் அத்தர்’ என்னும் நறுமண எண்ணெய் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. அகில் மரக்கட்டைகள் வெள்ளை நிறத்துடன் கனமற்றவையாக இருப்பதால் இதில் நகைப்பெட்டிகள் செய்யப்படுகின்றன. மேலும், புத்தகங்களுக்கு உறையிடவும் பயன்படுகிறது. அகில் மரத்தூளை துணிகள் மீதும் தோல் பொருட்களின் மீதும் தடவினால் அவற்றை பூச்சிகள் அண்டாது. மேலும், காகிதத் தயாரிப்புக்கும், ஊதுபத்திகள், அகர்பத்திகள் இதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.
பிற மரங்களின் வெளிப்புறத்தில் பிசின் வடிவது போல் இதில் வடிவதில்லை. எனினும், முதிர்ச்சி பெற்ற மரத்தின் உட்பகுதியில் கருநிற கட்டிகள் உருவாகியிருக்கும். இக்கட்டிகள் எண்ணெய் பசை நிறைந்ததாகும். எண்ணெய் பசை போன்ற இக்கருமை பொருளே ‘அகில்’ என அழைக்கப்படுகிறது. கிளைகள் கிளைத்துள்ள பகுதிகளில் இக்கருமை உருவாவதற்குக் காரணம் இம்மரங்களில் உருவாகி பற்றிப் படர்ந்து வளர்ந்து வரும் ஒருவித காளான் ஆகும். இக்காளானும் அதனைத் தொடர்ந்து உருவாகும் கருமைக் கட்டிகளும் உள்ள மரம் பார்ப்பதற்கு நோயாளி மரம் போன்று தோற்றமளிக்கும். காளான் பற்றியுள்ள மரத்துண்டை வெட்டியெடுத்து நல்ல அகில் மரத்தில் முளையடித்து வைத்தால் எளிதில் இரண்டாம் மரத்தை காளான் பற்றிக் கொண்டு படர்ந்து வளரும். அதன் மூலம் அகிலும் உருவாகும்.
அகில் மரத்தின் இலைகள், வேர் போன்றவை ஆயுர்வேத மற்றும் சீன மருத்துவ முறையில் பல நோய்களுக்கு பயன்படுகிறது. அதன் வாசனைப் பொருட்கள் புகழ் பெற்றவை.