உடல் சூடு என்பது அனைவருக்குமே ஏற்படுவதுதான். வெப்பமான காலநிலை, அதிகப்படியான உடல் உழைப்பு அல்லது சில உணவுகள் உடல் சூட்டை அதிகரிக்கச் செய்யலாம். இது, சருமம் சிவந்து போதல், தலைவலி, தாகம், சோர்வு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். உடல் சூட்டைத் தணிப்பது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். இந்தப் பதிவில் உடல் சூட்டை ஏற்படுத்தும் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதைத் தணிக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
உடல் சூடு ஏற்படுவதற்கான காரணங்கள்:
அதிகப்படியான வெப்பம் மற்றும் ஈரப்பதமான காலநிலை உடல் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்யும். மேலும், அதிக உடல் உழைப்பு உடலில் அதிக வெப்பத்தை உற்பத்தி செய்து வெப்பம் தொடர்பான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
மிளகாய், இஞ்சி போன்ற மசாலா உணவுகள் அதிகமாக எடுத்துக் கொள்வதால் உடல் வெப்பமடையலாம். தொடர்ச்சியாக சில மருந்துகளை எடுத்துக் கொள்வதால் அதன் பக்க விளைவாக வெப்பம் அதிகரிக்கும்.
தைராய்டு பிரச்சனை, நீரிழப்பு போன்ற உடல் நலக் கோளாறுகள் உடல் வெப்பத்தை அதிகரிக்கக்கூடும்.
உடல் சூட்டின் அறிகுறிகள்
சருமம் சிவப்பு நிறமாக மாறுதல்.
தலைவலி.
தாகம்.
சோர்வு.
குமட்டல்.
வாந்தி.
மூச்சுவிடுவதில் சிரமம்.
இதயத் துடிப்பு அதிகரித்தல்.
உடல் சூட்டை தணிக்கும் வழிகள்:
நீர்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளான தர்பூசணி, வெள்ளரி, ஆப்பிள், கொய்யா, நெல்லிக்காய் போன்ற பழங்களை அதிகமாக உண்ணுங்கள். அதேபோல வெள்ளரிக்காய், கீரை, கேரட், தக்காளி போன்ற காய்கறிகளையும் உண்ணலாம். உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தண்ணீர், புதினா, நீர், நெல்லிக்காய் சாறு, கற்றாழை சாறு போன்ற பானங்களை அடிக்கடி குடிக்கவும்.
பருத்தி போன்ற இயற்கை இழைகளால் ஆன, காற்று எளிதாக உள்ளே புகக்கூடிய ஆடைகளை அணியுங்கள். குறிப்பாக வெளியே செல்லும்போது வெப்பம் அதிகம் உள்ளே இழுக்கப்படாத வெளிர் நிற ஆடைகளை அணிவது நல்லது.
காற்றோட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில் இருப்பது உடல் வெப்பத்தைக் குறைக்க உதவும். முடிந்தால் வீட்டில் ஒரு ஏசி வாங்கி மாட்டிக்கொள்ளுங்கள்.
குளிர்ந்த நீரில் குளிப்பது உடல் வெப்பத்தைக் குறைக்க உதவும். இது சிலருக்கு உடல் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால், குளிர்ந்த நீரில் குளிக்கும்போது ஜாக்கிரதையாக இருக்கவும். அல்லது குளிர் கம்பளியைப் பயன்படுத்தி உடல் வெப்பத்தைக் குறைக்கலாம்.
சைவ உணவுகள் பொதுவாகவே குளிர்ச்சியான தன்மையை கொண்டிருக்கும். எனவே இவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து கொழுப்பு நிறைந்த உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும் உணவுகளைத் தவிர்க்கவும்.
தினசரி லேசாக உடற்பயிற்சி செய்வது உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து உடல் வெப்பத்தை குறைக்க உதவும். வாரத்தில் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பது மூலமாகவும் உடல் வெப்பத்தைக் குறைக்கலாம்.
இவை அனைத்தையும் முயற்சி செய்த பிறகும் உங்களுக்கு கடுமையான வெப்பம் சார்ந்த அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
உடல் சூடு என்பது சாதாரணமான ஒரு பிரச்சனைதான் என்றாலும், அதை கவனிக்காமல் விடக்கூடாது. மேற்கண்ட வழிகளைப் பின்பற்றி உடல் சூட்டை எளிதாகத் தணிக்கலாம். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் உடல் சூட்டினால் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்க முடியும்.